Saturday, January 1, 2011
அரை மணி நேரத்தில் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் உயிரோடு இல்லை என்பதை தெரிந்துகொள்!! – நடேசனின் கடைசி நிமிடங்கள்! – விபரிக்கிறார் மகன் பிரபாத்
மனித குலத்தையே குலைநடுங்க வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித்தனியாகத் தொங்கத் தொங்க, ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க, எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக,வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ்…..
என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள இராணுவம். – இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில் சுட்டெரிக்க, குழந்தைகள் கதறக் கதற… ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அப்பாவி ஈழ மக்கள் மீது எறிகணைகள், வெடிகணைகள், நச்சுக் குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் நிகழ்த்திய இனப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அமைப்புகள்.
இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றி, விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த ஏராளமானவர்கள், இந்தக் குழுவுக்கு தங்களின் சாட்சியங்களை அனுப்புகிறார்கள். வாக்குமூலங்களை அனுப்பிவைக்க கடைசித் தேதி கடந்த 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது அந்தக் கெடு, காலவரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிங்கள அரசின் போர்க் குற்றங்களை நிரூபிப்பது, தமிழீழ மண்ணில் இருக்கும் மக்களுக்கு, புலம்பெயர்ந்தவர்களால் செய்யக்கூடிய ஒரே உதவியாக இருக்கும் எனும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு இதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கான தனித் துறையை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பெற்று ஐ.நா. பொதுச் செயலாளர் குழுவுக்கு அனுப்புகிறது, அந்த அமைப்பு.
இதன் ஒரு பகுதியாக, சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனின் மகன், சிறப்புத் தளபதி ரமேஷின் மனைவி ஆகியோரின் எழுத்து வடிவிலான வாக்குமூலங்கள் ஐ.நா. குழுவிடம் போயிருக்கின்றன. அந்த வாக்குமூலங்கள் நமக்கும் கிடைத்தன.
நடேசனின் மகன் பிரபாத்:
நடேசன் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் இறுதிக்கால அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் மகேந்திரனின் மகனான எனது பெயர் பிரபாத் சுரேஷ் மகேந்திரன். வயது 30. இங்கிலாந்தில் வசிக்கிறேன்.
கடைசியாக நான், என் தந்தை மற்றும் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணி அளவில்… அதாவது, அவர்கள் சரண் அடைவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு பேசினேன்.
அப்பா என்னிடம் கடைசியாகச் சொன்னது,
வெளிநாட்டு இராஜதந்திரிகள் எங்களை சிங்கள இராணுவத்திடம் சரண் அடையச் சொல்கிறார்கள். ஆனால், நானோ என்னுடன் இருப்பவர்களோ, சிங்கள இராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருப்போம் என நம்பவில்லை. காயம்பட்ட போராளிகள் 1,000 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நான் சரண் அடைந்துதான் தீர வேண்டும். அது குறித்து, மேலதிக அறிவுரைகளைப் பெறுவதற்காக தலைவரைத் ( பிரபாகரனைக் குறிப்பிடுகிறார்!) தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அம்மாவும் புலித்தேவனும் என்னுடன்தான் இருக்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில், நான் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்!’ என்றார்.
அரசியல் பிரிவினரும், பொதுமக்களும் படுகாயம் அடைந்திருக்க, உடனடியாக சிகிச்சைபெற வேண்டிய நிலையில் துன்பகரமான நிலையில் இருந்தார்கள் அவர்கள்.
கடைசி நாட்களில் சுற்றி இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே என் அப்பாவின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாத நிராயுதபாணிகளாகவே நின்றனர்.
ஆனாலும், அப்பாவையும் உடன் சென்றவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது. நேரில் கண்டவர்களும் என்னிடம் அதுபற்றிக் கூறினார்கள். தேவைப்பட்டால், ஐ.நா. குழுவானது அவர்களுக்கு சாட்சியப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்…” என்று கூறி உள்ள பிரபாத், ”அந்த சாட்சியங்கள் இன்னும் இலங்கை மண்ணில்தான் இருக்கிறார்கள்!’ என்பதையும் கூறி இருப்பது அசாதாரணமானது. அவரின் இந்த வார்த்தைகள், அர்த்தம் பொதிந்தவை.
ரமேஷின் மனைவி வத்சலாதேவி
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நேரத்தில், புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக நின்றவர் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷ். நடேசனைப் போலவே, எதிரியிடம் எப்படியும் தன் உயிர் போகும் எனத் தெரிந்தும், படுகாயம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் இவர். ‘போரில் கொல்லப்பட்டார்’ என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ரமேஷ்தான், கைகள் கட்டப்பட்டு கேவலமாக நடத்தப்பட்ட காட்சியின் வீடியோ பதிவு அண்மையில் வெளியானது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார். அவரது வாக்குமூலமும் ஐ.நா. குழுவுக்குப் போய் இருக்கிறது.
1964-ம் ஆண்டு பிறந்த என் கணவர் துரைராஜசிங்கம், 84-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். ‘ரமேஷ்’ என இயக்கப் பெயர் சூட்டப்பட்ட அவருக்கு, இயக்கத்தில் கேணல் எனும் உயர் நிலை வழங்கப்பட்டது. கடைசி ஒரு மாதத்தில் மோதல் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டதால், அங்கு இருந்து வெளியேறினோம். ஏப்ரல் 28-ம் தேதி, மட்டக்களப்புக்குச் சென்றோம். மேற்கொண்டு அங்கு தங்கி இருக்க முடியாத நிலையில், தென் ஆபிரிக்காவுக்கு வந்தோம்.
என் கணவர் கடைசியாக மே 15-ம் தேதி என்னிடம் பேசினார்.’எங்களின் கடமையை முடித்துவிட்டு விரைவில் உங்களுடன் சேர்ந்துகொள்வேன்’ என சொன்னார். ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. போரில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. நான் அங்கு இருந்தபோதே, என் கணவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய உடலைக் காட்டவே இல்லை. அதனால், அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை.
இப்போது, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் என் கணவர் சரண் அடைவதாகக் காட்டப்படுகிறது. எனவே, அவர் போரின்போது கொல்லப்படவில்லை, உயிருடன்தான் பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன், இருக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். என் கணவர் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியும், அவருடைய நிலைமைபற்றி ஒன்றுமே தெரியவில்லை. நானும், என் பிள்ளைகளும் அவருக்கு என்ன ஆனது என்பதைப்பற்றிய கவலையிலேயே இருக்கிறோம்.
அவரைப்பற்றி பலவிதத் தகவல்கள் வருகின்றன. என் கணவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்பதை வீடியோ காட்சி நிரூபிக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட போர்க் கைதி ஒருவரின் நிலைமையைப்பற்றி இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஐ.நா. குழுவானது விசாரணை நடத்தி, என் கணவரின் கதி என்ன என எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்திருந்தால், என் கணவர் உயிருடன் இல்லை என்றால் இலங்கை இராணுவம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும். அது இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான போர்க் குற்றம்!” என்கிறார்.
இந்த வாக்குமூலங்களை அடிப்படையாகவைத்து, நாடு கடந்த தமிழீழ அரசு, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை ஐ.நா. குழுவின் முன்பு நிறுத்தி சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது.
பிரபாத், வத்சலாதேவி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். இருவரின் உயிர்ப் பாதுகாப்பு மட்டும் இன்றி, லட்சம் மக்களின் உயிரைக் குடித்த கொடிய குற்றத்துக்கான வலுவான சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஐ.நா. விசாரணைக்கு முன்பு, தங்கள் படமோ பேட்டியோ இடம்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என நமக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் ‘இனப் படுகொலை, போர்க்குற்ற விசாரணை துறை’ அமைச்சர் டிலக்சன் மொரிஸ் நம்மிடம் பேசினார்.
இலங்கைத் தீவில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அப்பட்டமான இனப் படுகொலை. அவை நிரூபிக்கப்பட்டால், அங்கு இரு தேசங்கள் உருவாக வழிவகுத்துவிடும். இதனால், இதை சில மேலைநாடுகள் போர்க் குற்றம் என்று மட்டும் கூறுகின்றன. அப்படி சுருக்கிப் பார்ப்பது, மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் ஆக்குவதற்கு மட்டுமே உதவி செய்வதாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில், நடேசனுடைய மகன், தளபதி ரமேஷின் துணைவி ஆகியோரின் வாக்குமூலங்களையும், இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் குழுவுக்கு அனுப்பி உள்ளோம். ஏற்கெனவே, டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் மூலம் இனப் படுகொலை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்திவிட்டோம். அதைப்போலவே, சட்ட ரீதியாகவும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மூலமும் ஈழ மக்கள் மீதான இனப் படுகொலையை நிரூபிக்காமல் விடமாட்டோம்! என்றார்.
புலம்பெயர்ந்த ஈழ மக்கள் மத்தியில் புல்லுருவிகளை உருவாக்கி, போர்க் குற்றங்களை மறைக்க ராஜபக்ஷே முயன்றாலும், இனவெறிப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என அழுத்தமாக நம்புகிறார்கள் ஈழத் தமிழர்கள்… கூடவே தமிழக ஈழ உணர்வாளர்களும்!
நன்றி: ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment