Labels

Friday, January 21, 2011

கடலில் கலக்கும் ரத்தம்!





இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என 'உருளைக்கிழங்கு’ விளையாட்டு அரை நூற்றாண்டாக நடக்கிறது.

முள்ளி வாய்க்கால் முற்றுகையின் மூலமாக ஈழத் தமிழினத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த மகிந்தா ராஜபக்ஷேவுக்கு 'மகா வீர’ என்ற பட்டத்தை சிங்கள இனவாதிகள், கொழும்பில் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வழங்கினார்கள். தமிழக மீனவனது சந்ததிக்கும் அதேபோன்று முற்றுப்புள்ளி வைத்து, 'மகா சூர’ என்ற பட்டத்தை மகிந்தா பெற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கடந்த வாரத்தில் கடல் நடுவே மீன் பிடிக்கப் போனபோது, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனது மரணம், தமிழ் நாட்டுக்கு இதைத்தான் சங்கு ஊதிச் சொல்கிறது!

கடலே நம் காவல்!

இந்தியாவைப் பாதுகாப்பான பூமி என்பார்கள். முப்புறமும் கடலும் தலைப் பகுதியில் மலையுமாக இயற்கையே நமக்கு நான்கு பக்கமும் அரணாக அமைந்தது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத இந்த வளம் தமிழகத்துக்கு உண்டு. வடக்கிலும் மேற்கிலும் மட்டும்தான் ஆந்திராவும் கேரளாவும் உள்ளன. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவுமாக தமிழகம் தண்ணீர் சூழ்ந்த மாநிலம். சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும்... சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும் சொல்வார்கள். 1,125 கி.மீ பரப்புள்ள கடற்கரை நமக்கு இருக்கிறது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையுமாக 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்டவர்கள் இதில் கால்வாசிப் பேர். இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தமிழக மீனவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கிலான மதிப்புள்ள மீன்களை இவர்கள் பிடித்தாலும், அன்றாட சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் வாழ்க்கை. நாட்டுப் படகும், கட்டு மரங்களும் புழங்கிய கடலில், இன்று விசைப் படகுகளின் ராஜ்யம். கடலையே திருப்பிப் போடும் காற்று வீசினாலும் ஊரையே உருமாற்றும் புயல் வீசினாலும் கடல் பயணத்தை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தாதவர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலே, இலங்கைக் கடற்படைதான்!


கடலில் ரத்தம் கலந்தது எப்போது?


இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு, வெட்டுக் குத்துக் கொலைகள் அதிகமாகிப்போன 70-களின் தொடக்கம்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் தொல்லை தொடங்கியது. இலங்கை அரசுக்கு எதிராக அணி திரளும் தமிழ் இளைஞர்களுக்கு கடலுக்கு அப்பால் இருக்கிற தமிழ்நாடுதான் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற எண்ணம் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதுவரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரைக்கும் மீன் பிடித்து நிம்மதியாகத் திரும்பி வந்த காலம் எல்லாம் உண்டு. இந்த சந்தேகம் வந்த பிறகு, இலங்கையை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் அத்தனை மீனவர்களையும் தடுத்தார்கள். கைது செய்து சிலரைக் கொண்டுபோனார்கள். பின்னர் விடுவித்தார்கள். அங்கு போராட்டம் தீவிரம் அடைய... விடுதலைப் புலிகள் மீது காட்ட முடியாத கோபத்தை அப்பாவித் தமிழ் மீனவர்கள் மீது காட்டினார்கள். கைது செய்யும் சம்பிரதாயத்தை விலக்கி, கண்ணில் பட்டதும் சுட ஆரம்பித்தார்கள்.

''1983 முதல் 1991 வரை தமிழக மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3,003 படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்'' என்று ஓர் அறிவிப்பு 1991-ம் ஆண்டு வந்தது. இது முழுமையான புள்ளிவிவரம் இல்லை. அதற்குப் பிறகு எந்தக் கணக்கும் எடுக்கப்படவில்லை. ''கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்'' என்று ராமேஸ்வரம் மீனவர்கள் சொல்கிறார்கள்!


என்ன காரணம் சொல்வார்கள்?


ஒரு காலத்தில் 'கடத்தல்காரர்கள்’ என்று சொல்லித் தாக்கினார்கள். புலிகளுக்கு தமிழக மீனவர்கள்தான் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றைக் கடத்திக்கொண்டு போய்த் தருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கினார்கள். அதன் பிறகு தமிழர்களை, 'கள்ளத் தோணிகள்’ என்றார்கள். போராளி இயக்கங்கள் வலுவடைந்த பிறகு, 'புலிகள்’ என்றார்கள். 2001-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. மகிந்தா ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு, புலிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்ட பிறகு, தமிழக மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மீனவர்களைக் கொல்வதும், அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுப் பயமுறுத்துவதும் அதிகமாகின. ''தமிழக மீனவர்கள் நம்முடைய எல்லையைத் தாண்டிப் போவதால்தான் இலங்கைக் கடற்படை சுடுகிறது'' என்று இலங்கை அரசு சொன்ன காரணத்தையே, நம்முடைய மத்திய அரசாங்கமும் ஆமோதித்தது.

இந்தியக் கடல் எல்லைக்குள், பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மீனவர்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களைக் கைது செய்கிறது. அந்த நாட்டுக்குத் தகவல் தருகிறது. அதன் பிறகு நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த மனோபாவம் இலங்கை அரசுக்கு ஏன் வரவில்லை? அதை இந்திய அரசாங்கத்தால் ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை. சிங்களக் கடற்படை தமிழ் மீனவர்களைத் தாக்கும்போது, இந்தியக் கடற்படைக்கு அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு வேண்டாமா? மீனவர்களின் கேள்விகளுக்கு இதுவரை அரசாங்கம் பதில் சொல்லவே இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வந்து ஒரு முஸ்லிம் சுட்டால், 'இந்தியாவுக்கு ஆபத்து’ என்று பூதாகாரமாக்குபவர்கள், ராமேஸ்வரத்துக்குள் வந்து 600 பேரைச் சுட்ட பிறகும், அமைதியாக இருப்பது சகிக்கவே முடியாதது!


கச்சத் தீவு வந்தால் அழுகை நிற்கும்!


ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகான தீவு கச்சத் தீவு. கச்சம் என்றால் ஆமை என்று அர்த்தமாம். ஆமைகள் அதிகம் உள்ள இடம் என்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாம். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பகுதி அது. சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் இதுவும் ஒன்று. பிரிட்டிஷார் ஆட்சியின்போது அவர்களது எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்காகச் சொல்லப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத் தீவு எங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். ஆனால், அதற்கு முந்தைய 300 ஆண்டு கால இலங்கை வரைபடத்தில் கச்சத் தீவைச் சேர்த்தது இல்லை. இலங்கையின் இந்தக் கோரிக்கை சாத்தியமானது அல்ல என்று அன்றைய பிரதமர் நேரு மறுத்தார். ஆனால், காலப் போக்கில் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்கும் மனநிலைக்கு பிரதமர் இந்திரா வந்தார். அமெரிக்காவை, இலங்கை அரசாங்கம் அதிகமாக நம்புகிறது, அமெரிக்காவின் காலடி இலங்கையில் பதியாமல் தடுக்க, இலங்கைக்கு ஏதாவது கைமாற்றாகக் கொடுக்கலாம் என்று நினைத்து இந்திரா, கச்சத் தீவை 1974-ம் ஆண்டு தூக்கிக் கொடுத்தார்.

அதுவரை நிம்மதியாகப் போய் மீன் பிடித்து வந்த மீனவர்களைத் தைரியமாக அடிக்க ஆரம்பித்த சிங்களக் கடற்படை, இன்று வரை நிறுத்தவில்லை. அந்த ஒப்பந்தத்தில்கூட இந்திய மீனவர்கள் கச்சத் தீவு வரை வந்து இளைப்பாறவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் உரிமை உண்டு என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் வந்து வணங்கிச் செல்லவும் தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் போட்ட ஒப்பந்தமும் இந்த ஷரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மீனவர்களை அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால், தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது.

'கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. 2007-ம் ஆண்டு ஒரு மீனவர் கொல்லப்பட்டபோது, 'கச்சத் தீவை மீட்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்று சொன்னவர் கருணாநிதி. இவர்கள் இருவரும் சொன்னதைச் செய்தால் மட்டும்தான், கடலோரத்தில் ரத்தக் கசிவு நிற்கும்!

மீனவர்கள் என்ன செய்யலாம்?

''எங்களுக்குக் கடல் எல்லை தெரியவில்லை. அதனால்தான், தாண்டிவிடுகிறோம். கரைக்கு அருகே மீன் வளம் குறைந்ததால்தான் உள்ளே தூரமாகச் செல்ல நேர்கிறது'' என்று யதார்த்தமான காரணத்தைச் சொல்கிறார்கள் மீனவர்கள். இந்தக் காரணத்தை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே, இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது'' என்று சொன்னவர் எம்.கே.நாராயணன்.

அதையும் மீறித்தான் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியே சொன்னார், ''இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக்கொண்டு இருக்காது!''

ஆனால், அது அவருக்கே இப்போது நினைவில் இருக்குமோ, என்னவோ?

நன்றி
- விகடன்

No comments:

Post a Comment