Labels

Monday, May 9, 2011

இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த கோரி கனடாவில் கையெழுத்து போராட்டம்





போர்க்குற்றம், இனஅழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்து வரும் சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் கையெழுத்துப் போராட்டம் 27.04.2011 மாலை கனடாவின் மொன்றியல் மாநகரில் தொடங்கியது.

நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஆரம்பமாகிய இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் அதிகமாக சென்றுவரும் இடங்களிலும், வர்த்தக பகுதிகளிலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நோக்கியும் விரிவடைய இருக்கின்றது.


போராட்டத்தின்போது இலங்கை அரசு அறுபது வருடமாக திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ பல்வேறு இன மக்களும், சர்வதேச மனிதநேய அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


கையெழுத்து போராட்ட ஆரம்ப நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நடைபெற இருக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 514 400 5331 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தொடர் போராட்டம் நடைபெற இருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அறிக்கை இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்தியுள்ளது : ருத்ரகுமாரன்



ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது, இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகத்தை விளைவித்தார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த ருத்ரகுமாரன், புலம்பெயர் தமிழர் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும், இலங்கையில் இருந்த தமிழர்களே அதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.


இந்தப் போர் குறித்து முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட்டாலே முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று ருத்ரகுமாரன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சபையின் அனுமதி தேவை. ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்தவற்கு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரைப்பதை ஐ.நா. செயலாளர்தான் செய்ய முடியும். அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது என்றும் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வீரமணி ஆர்ப்பாட்டம்



சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை முன் 28.4.2011 காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர்.

ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம் வந்துவிட்டது - கி.வீரமணி :

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி,


இலங்கை புரிந்த இனப் படுகொலையை கடந்த 10 மாதங்களாக விசாரித்து இலங்கை அரசு ராஜபக்சே அரசு குற்றவாளி என்பதை ஐ.நா. மன்றம் அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. சிங்கள இன வெறியர்கள் தமிழின அழிப்பு வேலையை அங்கு நடைபெற்ற போருக்கு முன்பும் சரி, போருக்குப் பின்பும் சரி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.


உலக நாடுகளின் கண்கள் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளிதான் என்பதை அய்.நா. மன்றம் அறிவித்திருக்கிறது. எனவே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகத்தின் முன்பு போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம் வந்துவிட்டது.


எம் இனம் அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை சிங்கள அரசு தர மறுக்கிறது. ஆட்டிக்குட்டி ஓநாயிடம் பாதுகாப்பாக உள்ளது என்று சிங்கள அரசு சொல்கிறது.


ஈழத் தமிழருடைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். தனி ஈழம் மலரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும். தனி ஈழம் வந்தாக வேண்டும். நம்மிடையே அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்கள் எந்தவித சுருதி பேதமும் இல்லாமல் குரல் கொடுக்க வேண்டும்.


இந்திய அரசு ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோகக் கூடாது. கடந்த கால செயல்களுக்கு கழுவாய்த் தேட வேண்டும். இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


இந்தியா தமிழர்களுக்கு விரோதமான செயல்களுக்கு துணை நிற்கக் கூடாது. ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை கவலையோடு கவனம் செலுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுடைய உரிமையை மத்திய அரசு மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அடுத்து மலரப் போவது தமிழ் ஈழம்தான். தமிழ் ஈழ மாநாட்டை அடுத்து நடத்தலாம் என்று இருக்கின்றோம். மத்திய அரசு மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகத்தான் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.


ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, உலக குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி கைது செய்யும் வரை போராட்டம் ஓயாது. இது போன்ற போராட்டங்கள் தொடரும். பிறவியிலேயே ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இன்றைக்கு ஏதோ ஆதரவாளர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள். தமிழ் ஈழம் வருகிற வரை தமிழர்களுடைய போராட்டம் தொடரும்
என்றார்.

இலங்கைக்கு உதவினால் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள் - சுப.வீரபாண்டியன் :

ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசும்போது,


இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பு குறித்து இன்று உலக நாடுகள் விழிப்படைந்துள்ளன. இப்போது ஐ.நா. மன்றம் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், இந்திய கட்சிகள் கருத்து வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இலங்கைக்கு யார் உதவ முன் வந்தாலும் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இன அழிப்பு வேலையை செய்ததற்காக சிங்கள இலங்கை அரசை ராஜபக்சேவை குற்றவாளி என்று உலக நாடுகள் ஐ.நா. மன்றத்தின் மூலமாக முதல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.


அதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து என்ன சொன்னார்? இலங்கை அரசை போர் குற்றவாளி என்று அறிவித்ததற்காக மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி ஐ.நா.வுக்கு எதிர்ப்பைக் காட்டுவோம் என்று சொல்லியிருக்கின்றார்.

இரண்டாவது தமிழக மக்களுக்கு வழங்கும் உதவி பாதிக்கும். மூன்றாவது எங்கள் அரசுக்கு இந்தியா உதவு வதாக அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.

இந்தியா உதவி செய்யும் என்று ராஜபக்சே கூறியிருப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி ராஜபக்சே கூறியிருப்பது தமிழர்களுக்கும் இந்தியாவுக்குப் பெருத்த அவமானமாகும். உலகம் முழுவதிலும் இருக்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட நேரிடும். ராஜபக்சேவை சிறைக் கைதியாக ஆக்கும் வரை ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்க வேண்டும்
என்றார்.

இலங்கை போர்க்குற்றம் பற்றி மேலும் விசாரணை தேவை: ஐ.நா.சபை மனித உரிமைகள் கமிஷன்




இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கமிஷன் தலைவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் இறுதிக் கட்ட போர் நடத்திய போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது பற்றி விசாரணை நடத்த இந்தோனேசிய அட்டார்னி ஜெனரல் மார்சுகி தருஷ்மென் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை ஐ.நா.சபை அமைத்தது.


அந்த குழு விசாரணை நடத்தி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடந்த 5 மாத காலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனைகள் மீது ராணுவம் குண்டுகளை வீசியதாகவும், மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு தடுத்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. பெண்கள் ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதனால், இலங்கை அரசை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வற்புறுத்தி உள்ளன.


இந்த நிலையில், ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கமிஷன் தலைவர் நவி பிள்ளை, இலங்கையில் நடந்த போர்குற்றம் பற்றி மேலும் விசாரணை நடத்த வேண்டும் வற்புறுத்தி இருக்கிறார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.


ஐ.நா.சபை அமைத்த 3 பேர் குழு விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்து இருப்பதால் சர்வதேச சட்டப்படி இந்த பிரச்சினையை அணுக வேண்டிய கடமை உள்ளது.


போரின் போது நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நம்பகமான தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்று உள்ளன. எனவே இறுதிக் கட்ட போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து மேலும் முழு அளவில் பாரபட்சமின்றி ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும். போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று இலங்கை அரசு மறுத்து வருவதால் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் ஆகிறது.


ஐ.நா. விசாரணை குழுவிடம் சாட்சியம் அளித்தவர்கள், தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரின் பாதுகாப்பு கவலை அளிப்பதாக உள்ளது.


ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் படி, நெருக்கடி நிலை நடவடிக்கைகளை ரத்து செய்வது, தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறைகளை மாற்றி அமைப்பது, காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து நிலைமையை மேம்படுத்துவதோடு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரில் உயிரிழப்பை ஐ.நா. தடுத்திருக்கலாம் - ஐ.நா. முன்னாள் பேச்சாளர் :

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐ.நா தவிர்த்திருக்க முடியு‌ம் என ஐ.நாவின் முன்னாள் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும்.


போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெரும்பாலான பொதுமக்கள் ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.


பொதுமக்களிடம் கணக்கெடுப்புகளை ஐநா எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: திருமா




இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலையை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. விசாரணை குழு



இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளையும் செய்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு: இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

* இலங்கை அரசின் விசாரணைகளை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

* கண்காணிப்பு குழு இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக கண்காணித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்க வேண்டும்.

* இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை ராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் எச்சங்கள் வழங்குவதுடன் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

* போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்க வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

* விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத் துலக தராதரத்திற்கு மாற்ற வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்.

* அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், வக்கீல்களும் அனுமதிக் கப்பட வேண்டும்.

* நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
* குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* சுதந்திரமான நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

* பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப் பிரச்சனைகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக் குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* போரின் இறுதி நாட்களில் இடம் பெற்ற பொது மக்களின் இழப்புக்களுக்கு அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

* இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* 2009 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்த தீர்மானத்தை ஐ.நா. மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

* மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பாக போரின் போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் - ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி :

இலங்கைப் பிரச்சினை குறித்து பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும் என்றும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாகவும், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விருப்பத்திற்கிணங்கவே பாதுகாப்புச் சபையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


நிபுணர் குழு அறிக்கை வெளியான பின் இலங்கையில் அதற்கான பிரதிபலிப்புகள் குறித்தும் நாம் தீவிரமாக கவனித்து வருகின்றோம். இதுவரை அங்கு பொதுமக்களின் பிரதிபலிப்புகளே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இதுவரை எந்தவித பதிலையும் அதிகாரப்பூர்வ ரீதியில் அளிக்கவில்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காகவும் காத்திருக்கின்றோம்.


மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் உட்பட போருக்குப்பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கின்றது
என்றும் மார்ட்டின் நெசர்கி பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் - சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட மனித உரிமைகள் குழு வலியுறுத்தல் :

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து ஐ.நா. சபை நடத்திய விசாரணையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது, இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டு அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு மழைகள் பொழிந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.


இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரால் அப்பாவித் தமிழர்கள் 40 ஆயிரம் பேர் குண்டு வீசி கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட எந்தவித மனிதாபிமான உதவிகளும் கிடைக்கவிடாமல் இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்ததாவும் கூறப்பட்டுள்ளது. இந்த போரில் சர்வதேச உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே ஐ.நா. அறிக்கை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தவிட வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.


சர்வதேச விசாரணைகள் நடைபெற்றால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: பான் கி மூன்



இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடந்தபோது அப்பாவி தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை சிங்கள விமானப்படை வீசியது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினார். மேலும், ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இந்த கொடுஞ்செயல் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ்மென் தலைமையில் 3 பேர் விசாரணை குழுவை ஐ.நா அமைத்தது. அந்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என ராஜபக்சே அரசு அறிவித்தது. எனினும், கடந்த 10 மாதங்களாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து அந்த குழுவினர் விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.


அந்த அறிக்கையில், இறுதிகட்ட போரின் போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்களை கொன்று இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்துள்ளது. 214 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது 5 மாத காலத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய குண்டு வீச்சினாலேயே அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. போர் நடைபெறும் நிலையில் மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கிடைப்பதை அரசு மிக கவனமாக தடுத்துள்ளது.


எனவே, இலங்கை ராணுவம் நடத்திய இறுதிகட்ட தாக்குதலானது, போர்க் குற்றங்களாகவே உள்ளன. இதுபோல, அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய விடுதலைப்புலிகளின் செயலும் போர்க்குற்றமாகும்.


இறுதிகட்ட போர் நடந்தபோது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் முடக்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்ட குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இரு தரப்பினருமே பொது மக்களின் அருகிலேயே அபாயகர ஆயுதங்களை பயன்படுத்தினர். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை கூட அளிக்காமல் மனித உரிமைகள் மீறப்பட்டன.


பத்திரிகைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஊடக அடக்கு முறை கையாளப்பட்டுள்ளது. பெண்கள் ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டனர். எனவே, இலங்கையில் நடந்தது போர்க்குற்றமாகும். இது தொடர்பாக இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தலாம். அதற்காக, சுதந்திரமான விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கலாம்.


இவ்வாறு ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதனால், இலங்கை அரசை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. இதற்கிடையே, அறிக்கை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியதாவது:


இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு தனியாக என்னால் உத்தரவிட முடியாது. அத்தகைய விசாரணை நடத்த சம்பந்தம்பட்ட நாடு (இலங்கை) ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை கவுன்சில் அல்லது சர்வதேச அமைப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்பினால் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம்.


இலங்கையில் போர்க்குற்ற செயலில் ஈடுபட்டதற்காக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.


இவ்வாறு பான் கி மூன் தெரிவித்துள்ளார்.