Labels

Friday, January 21, 2011

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!?



விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

"சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்த ஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள். பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தினோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது. ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார். அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப்பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும்போது தலைவர் வெளியே வருவார்' என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள். அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின்போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.


நன்றி : நக்கீரன்

முள்வேலி முகாமில் தமிழர்களை படம் பிடித்ததாக புகார்: இலங்கையில் தமிழக பெண் வக்கீல் கைது

இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களை படம் பிடித்ததற்காக தமிழக பெண் வக்கீல் உள்ளிட்ட இருவரை அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி என்கிற கயல். இவர் திருமலை என்ற தனது நண்பருடன் கடந்த 19ஆம் தேதி சுற்றுலா விசாவில் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றுள்ளார்.


பின்னர் அங்கிருந்து இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.


அப்போது அவர்கள் இருவரும் அங்கு தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அந்நாட்டு ராணுவத்தினரின் அனுமதியுடன் அந்த முகாமுக்கு சென்று அங்குள்ள தமிழர்களை அவர்கள் பார்த்துள்ளனர்.


அப்போது புகைப்படம் எதையும் எடுக்கக் கூடாது என்று இவர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் முகாமை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர் கயலின் செல்போனை இலங்கை ராணுவம் பரிசோதித்து பார்த்துள்ளது. அப்போது முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை விளக்கும் படங்களை எடுத்திருப்பதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.


இதனையடுத்து இலங்கை ராணுவம் இருவரையும் நிபந்தனைகளை மீறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.


கைது செய்யப்பட்டுள்ள பெண் வழக்கறிஞர் கயல், மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி ஆவார். கைதான இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை கண்டித்து மதுரை தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பகத்சிங், மனோகரன் தலைமையில் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் கொடுஞ்செயலை கண்டித்து நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம். மேலும், வழக்கறிஞர் கயல்விழியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

கடலில் கலக்கும் ரத்தம்!





இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என 'உருளைக்கிழங்கு’ விளையாட்டு அரை நூற்றாண்டாக நடக்கிறது.

முள்ளி வாய்க்கால் முற்றுகையின் மூலமாக ஈழத் தமிழினத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த மகிந்தா ராஜபக்ஷேவுக்கு 'மகா வீர’ என்ற பட்டத்தை சிங்கள இனவாதிகள், கொழும்பில் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வழங்கினார்கள். தமிழக மீனவனது சந்ததிக்கும் அதேபோன்று முற்றுப்புள்ளி வைத்து, 'மகா சூர’ என்ற பட்டத்தை மகிந்தா பெற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கடந்த வாரத்தில் கடல் நடுவே மீன் பிடிக்கப் போனபோது, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனது மரணம், தமிழ் நாட்டுக்கு இதைத்தான் சங்கு ஊதிச் சொல்கிறது!

கடலே நம் காவல்!

இந்தியாவைப் பாதுகாப்பான பூமி என்பார்கள். முப்புறமும் கடலும் தலைப் பகுதியில் மலையுமாக இயற்கையே நமக்கு நான்கு பக்கமும் அரணாக அமைந்தது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத இந்த வளம் தமிழகத்துக்கு உண்டு. வடக்கிலும் மேற்கிலும் மட்டும்தான் ஆந்திராவும் கேரளாவும் உள்ளன. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவுமாக தமிழகம் தண்ணீர் சூழ்ந்த மாநிலம். சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும்... சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும் சொல்வார்கள். 1,125 கி.மீ பரப்புள்ள கடற்கரை நமக்கு இருக்கிறது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையுமாக 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்டவர்கள் இதில் கால்வாசிப் பேர். இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தமிழக மீனவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கிலான மதிப்புள்ள மீன்களை இவர்கள் பிடித்தாலும், அன்றாட சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் வாழ்க்கை. நாட்டுப் படகும், கட்டு மரங்களும் புழங்கிய கடலில், இன்று விசைப் படகுகளின் ராஜ்யம். கடலையே திருப்பிப் போடும் காற்று வீசினாலும் ஊரையே உருமாற்றும் புயல் வீசினாலும் கடல் பயணத்தை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தாதவர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலே, இலங்கைக் கடற்படைதான்!


கடலில் ரத்தம் கலந்தது எப்போது?


இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு, வெட்டுக் குத்துக் கொலைகள் அதிகமாகிப்போன 70-களின் தொடக்கம்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் தொல்லை தொடங்கியது. இலங்கை அரசுக்கு எதிராக அணி திரளும் தமிழ் இளைஞர்களுக்கு கடலுக்கு அப்பால் இருக்கிற தமிழ்நாடுதான் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற எண்ணம் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதுவரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரைக்கும் மீன் பிடித்து நிம்மதியாகத் திரும்பி வந்த காலம் எல்லாம் உண்டு. இந்த சந்தேகம் வந்த பிறகு, இலங்கையை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் அத்தனை மீனவர்களையும் தடுத்தார்கள். கைது செய்து சிலரைக் கொண்டுபோனார்கள். பின்னர் விடுவித்தார்கள். அங்கு போராட்டம் தீவிரம் அடைய... விடுதலைப் புலிகள் மீது காட்ட முடியாத கோபத்தை அப்பாவித் தமிழ் மீனவர்கள் மீது காட்டினார்கள். கைது செய்யும் சம்பிரதாயத்தை விலக்கி, கண்ணில் பட்டதும் சுட ஆரம்பித்தார்கள்.

''1983 முதல் 1991 வரை தமிழக மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3,003 படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்'' என்று ஓர் அறிவிப்பு 1991-ம் ஆண்டு வந்தது. இது முழுமையான புள்ளிவிவரம் இல்லை. அதற்குப் பிறகு எந்தக் கணக்கும் எடுக்கப்படவில்லை. ''கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்'' என்று ராமேஸ்வரம் மீனவர்கள் சொல்கிறார்கள்!


என்ன காரணம் சொல்வார்கள்?


ஒரு காலத்தில் 'கடத்தல்காரர்கள்’ என்று சொல்லித் தாக்கினார்கள். புலிகளுக்கு தமிழக மீனவர்கள்தான் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றைக் கடத்திக்கொண்டு போய்த் தருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கினார்கள். அதன் பிறகு தமிழர்களை, 'கள்ளத் தோணிகள்’ என்றார்கள். போராளி இயக்கங்கள் வலுவடைந்த பிறகு, 'புலிகள்’ என்றார்கள். 2001-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. மகிந்தா ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு, புலிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்ட பிறகு, தமிழக மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மீனவர்களைக் கொல்வதும், அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுப் பயமுறுத்துவதும் அதிகமாகின. ''தமிழக மீனவர்கள் நம்முடைய எல்லையைத் தாண்டிப் போவதால்தான் இலங்கைக் கடற்படை சுடுகிறது'' என்று இலங்கை அரசு சொன்ன காரணத்தையே, நம்முடைய மத்திய அரசாங்கமும் ஆமோதித்தது.

இந்தியக் கடல் எல்லைக்குள், பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மீனவர்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களைக் கைது செய்கிறது. அந்த நாட்டுக்குத் தகவல் தருகிறது. அதன் பிறகு நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த மனோபாவம் இலங்கை அரசுக்கு ஏன் வரவில்லை? அதை இந்திய அரசாங்கத்தால் ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை. சிங்களக் கடற்படை தமிழ் மீனவர்களைத் தாக்கும்போது, இந்தியக் கடற்படைக்கு அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு வேண்டாமா? மீனவர்களின் கேள்விகளுக்கு இதுவரை அரசாங்கம் பதில் சொல்லவே இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வந்து ஒரு முஸ்லிம் சுட்டால், 'இந்தியாவுக்கு ஆபத்து’ என்று பூதாகாரமாக்குபவர்கள், ராமேஸ்வரத்துக்குள் வந்து 600 பேரைச் சுட்ட பிறகும், அமைதியாக இருப்பது சகிக்கவே முடியாதது!


கச்சத் தீவு வந்தால் அழுகை நிற்கும்!


ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகான தீவு கச்சத் தீவு. கச்சம் என்றால் ஆமை என்று அர்த்தமாம். ஆமைகள் அதிகம் உள்ள இடம் என்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாம். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பகுதி அது. சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் இதுவும் ஒன்று. பிரிட்டிஷார் ஆட்சியின்போது அவர்களது எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்காகச் சொல்லப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத் தீவு எங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். ஆனால், அதற்கு முந்தைய 300 ஆண்டு கால இலங்கை வரைபடத்தில் கச்சத் தீவைச் சேர்த்தது இல்லை. இலங்கையின் இந்தக் கோரிக்கை சாத்தியமானது அல்ல என்று அன்றைய பிரதமர் நேரு மறுத்தார். ஆனால், காலப் போக்கில் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்கும் மனநிலைக்கு பிரதமர் இந்திரா வந்தார். அமெரிக்காவை, இலங்கை அரசாங்கம் அதிகமாக நம்புகிறது, அமெரிக்காவின் காலடி இலங்கையில் பதியாமல் தடுக்க, இலங்கைக்கு ஏதாவது கைமாற்றாகக் கொடுக்கலாம் என்று நினைத்து இந்திரா, கச்சத் தீவை 1974-ம் ஆண்டு தூக்கிக் கொடுத்தார்.

அதுவரை நிம்மதியாகப் போய் மீன் பிடித்து வந்த மீனவர்களைத் தைரியமாக அடிக்க ஆரம்பித்த சிங்களக் கடற்படை, இன்று வரை நிறுத்தவில்லை. அந்த ஒப்பந்தத்தில்கூட இந்திய மீனவர்கள் கச்சத் தீவு வரை வந்து இளைப்பாறவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் உரிமை உண்டு என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் வந்து வணங்கிச் செல்லவும் தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் போட்ட ஒப்பந்தமும் இந்த ஷரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மீனவர்களை அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால், தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது.

'கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. 2007-ம் ஆண்டு ஒரு மீனவர் கொல்லப்பட்டபோது, 'கச்சத் தீவை மீட்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்று சொன்னவர் கருணாநிதி. இவர்கள் இருவரும் சொன்னதைச் செய்தால் மட்டும்தான், கடலோரத்தில் ரத்தக் கசிவு நிற்கும்!

மீனவர்கள் என்ன செய்யலாம்?

''எங்களுக்குக் கடல் எல்லை தெரியவில்லை. அதனால்தான், தாண்டிவிடுகிறோம். கரைக்கு அருகே மீன் வளம் குறைந்ததால்தான் உள்ளே தூரமாகச் செல்ல நேர்கிறது'' என்று யதார்த்தமான காரணத்தைச் சொல்கிறார்கள் மீனவர்கள். இந்தக் காரணத்தை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே, இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது'' என்று சொன்னவர் எம்.கே.நாராயணன்.

அதையும் மீறித்தான் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியே சொன்னார், ''இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக்கொண்டு இருக்காது!''

ஆனால், அது அவருக்கே இப்போது நினைவில் இருக்குமோ, என்னவோ?

நன்றி
- விகடன்

Tuesday, January 18, 2011

ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு



நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தெற்கு சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டிக்கொள்கிறது.

விடுதலை பெற்ற தெற்கு சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு சூடான் போலவே தமிழ் ஈழமும் விரைவில் விடுதலை பெறுமென ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

தெற்கு சூடானில் வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா "நியுயார்க் டைம்ஸ்" பத்திரிகையில், "லட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒபாமாவின் இச்செய்தியை வரவேற்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேபோல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழ் ஈழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய இலங்கைவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது.

சூடானின் அதிபர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 17, 2011

என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?











முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும் ஈழத் தமிழர்களின் படுகொலையின், போர் நிகழ்வின் 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாட்சி இல்லா ஓர் இனப் படுகொலையாக ராஜபட்சேவின் இலங்கை அரசால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரினை பற்றி உலக நாடுகள் அறியும் சாட்சியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த, ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணமான “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு விழா 9.1.2011 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நூல் குறித்து நூலாசிரியர் ஜெ.பிரபாகரன், “இந்தப் புத்தகத்திற்காக 6மாதங்களுக்கும் மேலாக அலைந்து போராடி படங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியர் நான் அல்ல, ஈழ விடுதலைப்போரில் ரத்தம் வெள்ளமாய் ஓட, உடல்கள் சிதற குண்டுகளுக்கு பலியான என் ஈழத் தமிழர் ஒவ்வொருவரும்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள். நான் இதற்கு ஆசிரியன் என்பது வெறும் மரபினால் குறிப்பிடப்படுவதே ஆகும்.

உலக மனச்சாட்சியை தட்டி எழுப்பக்கூடிய வகையிலும், ராஜபட்சேவின் கொலைவெறியை உலகம் அறியும் வகையிலும் இந்தப் புத்தகத்தை போரில் உயிர் இழந்த எம் தமிழ் உடன்பிறப்புக்கள் தந்துள்ளனர்.

இந்த நூலில், 371 படுகொலைப் படங்களுக்கு கீழ், அவை எப்போது ?, எங்கு? நிகழ்ந்தன என்ற விவரம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிழற்படங்கள் மட்டுமல்லாமல், 4 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன.

1) இலங்கையின் பூர்வீகக்குடி தமிழ்க்குடிதான் என்பதற்கான 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதாரச்சான்றுகள் அடங்கிய பட்டியல், 2) 1956 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான போர் மற்றும் இனப்படுகொலை பற்றிய விவரப் பட்டியல் 3)இலங்கையில் அமைதியான முறையில் நடந்த அரசியல் போராட்டம் மற்றும் 4) அப்போராட்ட முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியடைந்ததின் விவரப்பட்டியல் என 4வகையான பட்டியல்கள் தரப்பட்டுள்ளன.

ஆக மொத்தம், இந்நூல் ஈழத் தமிழரின் ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. ராஜபட்சேவால் நம் தமிழ் உடன்பிறப்புகள் படுகொலை செய்யப்பட்டதற்கு நாம் என்ன செய்தோம்? என்ற வேதனையான கேள்விதான் இந்தப் புத்தகம் உருவாக காரணமாக அமைந்தது.

ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர்

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டு பேசவரவில்லை. இந்தப் புத்தகம் என் நண்பர் ஒருவரின் மூலம் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் மகன்களும் பார்க்க நேர்ந்தது. மூத்தவனுக்கு 21 வயது. அவன் இலங்கைப் பிரச்சனை குறித்து ஓரளவு அறிவான். இரண்டாவது மகனுக்கு இதைப்பற்றி தெரியாது. மூன்றாவது மகன் 7ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு இதைப்பற்றி அறியும் பக்குவமான வயதுகூட இல்லை. இவர்கள் இந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு இரவில் சாப்பிடவில்லை. இதுபற்றி இரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 7வது படிக்கும் எனது மூன்றாவது பையன், இந்த புத்தகத்தின் தலைப்பையே என்னிடம் கேள்வியாக கேட்டான். இதற்காக நான் என்ன செய்ய முடியும்?. அப்படிக் கேட்டவனுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பெரியவர்களான நாமே இதற்காக ஒன்றும் செய்யவில்லையே!

நான் தமிழனாக அல்ல. இந்தியனாகவும் அல்ல. ஒரு மனித நேயமுள்ளவனாக, ஈழத்தமிழனின் படுகொலைக்கு நான் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தப் புத்தகத்தை தமிழர்களிடம் கூட காட்டி இதைப் பற்றி விளக்கப்போவதும் இல்லை. நான் எனது தொழில் நிமித்தமாக ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானப் பயணத்தின் போது என்னுடன் கூடவே இந்தப் புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன்.

அப்போது, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இது பற்றி பேசப் போகிறேன். நான் சந்திக்கும் மொழியறியாத பல்வேறு நாட்டு மக்களிடம் ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றி விளக்கப்போகிறேன். அப்படிப்பட்ட வேற்று நாட்டு மக்களும் ஈழத் தமிழனின் அவலநிலையை அறியச்செய்யப் முயற்கிக்கப் போகிறேன். இதுதான் ஈழத்திற்காக நான் செய்யப்போகும் ஒரு சிறு பணியாக நினைக்கிறேன். இது என் கடமை.

தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான்

இந்த நூலில், இவர்களுக்கு கிடைத்த 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் நம்மால் ஓரளவு சகித்துப் பார்க்கக்கூடிய படங்களாகவே உள்ளன. இவற்றை பார்க்கும் போதே நமது மனம் பதைபதைக்கிறது. இவற்றைவிட கொடூரமான படங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்தால் உண்மையில் நம் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், அதையெல்லாம் 60 வருடங்களாக எம் ஈழத்தமிழன் கண்ணெதிரே கண்டுகொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் அளவு துயரினில் இந்த உலகம் அறிந்திட ஒரு துளியளவே இந்நூலில் தரப்பட்டுள்ளது. இன்னும் ஆவணப்படுத்தப்படாத, ஆவணப்படுத்த முடியாத எத்தனையோ அவலங்கள் உள்ளன.

பாலூட்டும் போது ஒரு தாய் குண்டு பாய்ந்து இறந்துவிடுகிறாள். இறந்துவிட்ட தாயின் மார்பில் பால்குடித்தபடி இருக்கிறது அந்தக் குழந்தை. இதை எப்படி ஆவணப்படுத்துவது. பெற்றவர்கள் கண்முன்பாகவே மகள், சிங்கள ராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்படுவதை எப்படி ஆவணப்படுத்துவது.

ஒருமுறை அங்குள்ள பள்ளிச் சிறுவர்கள் என்னிடம் கூறினார்கள்... அண்ணா, நாங்கள் பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்தான் பதுங்கி வாழ்வோம். அப்போது நாங்கள் அமர்ந்திருப்பதற்கே இடமிருக்காது. அப்படி இருக்கையில் எப்படி உணவு சமைப்பது. அப்படி உணவு சமைப்பதற்காக பதுங்குக் குழிகளின் மேட்டில் உலைவைப்போம். விறகுத் தீ பற்றி எரிகிறதா?, தண்ணீர் கொதித்துவிட்டதா?, அரிசி வெந்துவிட்டது என்று தலைதூக்கி எட்டி எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மனித உடல்கள் கைவேறு, கால்வேறாக சிதறுவதைதான் பார்க்க முடியும் என்று அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள். அவற்றை எல்லாம் எப்படி ஆவணப்படுத்துவது.

இப்படி தம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதைக்கூட கூப்பிடும் தூரத்தில் இங்கு இருக்கும் தமிழன் அறிய வழியில்லை. இலங்கையில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி ஒரு சூழலிலும் துணிந்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் அடங்கிய குறுந்தகடுகளை எம் சகோதரர்கள் கொண்டுவந்து தந்தால், அதனை ஒளிபரப்ப இங்கிருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும் முன்வரவில்லை. இது ஊடக பயங்கரவாதம் இல்லையா?

குண்டுவைத்தால் தேசிய பாதுகாப்புச்சட்டம் போடுவது நியாயம். ஆனால் குறுந்தகடு வைத்திருந்தவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதே.

அமைதியாக போராடிய தமிழர்கள் மீது, இலங்கை அரசு ஆயுதம் ஏந்தி தாக்கியது. தம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு பொறுக்கமுடியாமல், ஆயுதத்தால் தாக்குபவர்களுக்கு ஆயுதத்தால்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்து பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். பிரபாகரன் ஆயுதம் ஏந்தியது பயங்கரவாதம் என்றால், அந்தப் பயங்கரவாதம் தோன்றக் காரணமாக இருந்த ராஜபட்சேவின் இலங்கை அரசு பயங்கரவாதத்தின் தாய்.

புலிகள் பயங்கரவாதிகள், அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இந்தப் போரில், பச்சிளம் குழந்தைகள் கூட கொடூரமாக கொல்லப்பட்டனரே. அதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்.

ஐ.நா சபையே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்கிறது. ஆனால் இந்தியா தங்கள் நண்பன் என்கிறது. காமன் வெல்த் விளையாட்டுக்கு விருந்தினராக அழைத்து, ரத்தினக் கம்பளம் விரிக்கிறது. அது ரத்தினக் கம்பளம் அல்ல. அங்கே படுகொலை செய்யப்பட்ட நம் தமிழனின் ‘ரத்தக் கம்பளம்’. 20 மைல்கல் தூரத்தில் இருக்கும் தம் இனம் கொல்லப்பட்டதற்கு, இந்தத் தமிழக திமுக அரசு ராஜபட்சேவிற்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை.

ஈழத்தமிழன் கொல்லப்பட்டதிற்கு நாம் என்ன செய்யலாம்?. நாம் என்ன செய்ய முடியும். உள்ளத்தில் பற்றி எரியும் தீயை, முத்துக்குமாரன் போல் உடலில் ஏற்றி நம்மை சாம்பலாக்கிக்கொள்ளதான் முடியும். இதற்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தமிழக ஆட்சியில் இருக்கும் கலைஞரும், ஜெயலலிதாவும்தான். ஆனால் அவர்களும் அந்த நேரத்தில் குரல் கொடுக்கவில்லை.

இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியதே. ஆனால், நடந்தது என்ன? இப்போதும் நடப்பது என்ன?.

போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே. பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியானார்களே. போர் முடிந்தும் ஆயிரக் கணக்கானோர் முள்வேலி முகாமிற்குள் இன்றும் வாழ்கிறார்களே. அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை.

மறு குடியேற்றத்திற்கான வீடுகள் கட்ட இந்தியா கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. ஆனால் அந்தப் பணம் சிங்கள ராணுவத்தினர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும், ராணுவ குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும்தான் பயன்படுகிறது. ஆனால், போரில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலி முகாமிற்குள்தான் வதைபடுகிறார்கள்.

இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கு அதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது. இப்போது நாங்கள் கோட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே.

அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம். நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்.

ராஜபட்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு அகதிகளாக குடியேறிய நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப் படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?. இதையாவது செய்ய நாம் ஒன்று படுவோம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்.

“கண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார்கள்” என்று பைபிளில் வாசகம் ஒன்று உள்ளது. நாம் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தி விதைத்திருக்கிறோம். நிச்சயம் கௌரவத்தோடு அறுவடை செய்வோம். தனி ஈழத் தமிழ் நாட்டை வென்றெடுப்போம்.

நன்றி : நக்கீரன் நந்தவனம்

Saturday, January 1, 2011

சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன்



நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய ஆண்டு மலரும் இத்தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


கடந்து சென்ற 2010ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப்புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம்.


நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.


இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும்.

தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது.

இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது.

புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரை மணி நேரத்தில் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் உயிரோடு இல்லை என்பதை தெரிந்துகொள்!! – நடேசனின் கடைசி நிமிடங்கள்! – விபரிக்கிறார் மகன் பிரபாத்







மனித குலத்தையே குலைநடுங்க வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித்தனியாகத் தொங்கத் தொங்க, ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க, எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக,வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ்…..

என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள இராணுவம். – இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில் சுட்டெரிக்க, குழந்தைகள் கதறக் கதற… ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அப்பாவி ஈழ மக்கள் மீது எறிகணைகள், வெடிகணைகள், நச்சுக் குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் நிகழ்த்திய இனப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அமைப்புகள்.

இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றி, விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த ஏராளமானவர்கள், இந்தக் குழுவுக்கு தங்களின் சாட்சியங்களை அனுப்புகிறார்கள். வாக்குமூலங்களை அனுப்பிவைக்க கடைசித் தேதி கடந்த 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது அந்தக் கெடு, காலவரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சிங்கள அரசின் போர்க் குற்றங்களை நிரூபிப்பது, தமிழீழ மண்ணில் இருக்கும் மக்களுக்கு, புலம்பெயர்ந்தவர்களால் செய்யக்கூடிய ஒரே உதவியாக இருக்கும் எனும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு இதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கான தனித் துறையை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பெற்று ஐ.நா. பொதுச் செயலாளர் குழுவுக்கு அனுப்புகிறது, அந்த அமைப்பு.

இதன் ஒரு பகுதியாக, சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனின் மகன், சிறப்புத் தளபதி ரமேஷின் மனைவி ஆகியோரின் எழுத்து வடிவிலான வாக்குமூலங்கள் ஐ.நா. குழுவிடம் போயிருக்கின்றன. அந்த வாக்குமூலங்கள் நமக்கும் கிடைத்தன.

நடேசனின் மகன் பிரபாத்:

நடேசன் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் இறுதிக்கால அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் மகேந்திரனின் மகனான எனது பெயர் பிரபாத் சுரேஷ் மகேந்திரன். வயது 30. இங்கிலாந்தில் வசிக்கிறேன்.

கடைசியாக நான், என் தந்தை மற்றும் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணி அளவில்… அதாவது, அவர்கள் சரண் அடைவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு பேசினேன்.

அப்பா என்னிடம் கடைசியாகச் சொன்னது,

வெளிநாட்டு இராஜதந்திரிகள் எங்களை சிங்கள இராணுவத்திடம் சரண் அடையச் சொல்கிறார்கள். ஆனால், நானோ என்னுடன் இருப்பவர்களோ, சிங்கள இராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருப்போம் என நம்பவில்லை. காயம்பட்ட போராளிகள் 1,000 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நான் சரண் அடைந்துதான் தீர வேண்டும். அது குறித்து, மேலதிக அறிவுரைகளைப் பெறுவதற்காக தலைவரைத் ( பிரபாகரனைக் குறிப்பிடுகிறார்!) தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அம்மாவும் புலித்தேவனும் என்னுடன்தான் இருக்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில், நான் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்!’ என்றார்.

அரசியல் பிரிவினரும், பொதுமக்களும் படுகாயம் அடைந்திருக்க, உடனடியாக சிகிச்சைபெற வேண்டிய நிலையில் துன்பகரமான நிலையில் இருந்தார்கள் அவர்கள்.

கடைசி நாட்களில் சுற்றி இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே என் அப்பாவின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாத நிராயுதபாணிகளாகவே நின்றனர்.

ஆனாலும், அப்பாவையும் உடன் சென்றவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது. நேரில் கண்டவர்களும் என்னிடம் அதுபற்றிக் கூறினார்கள். தேவைப்பட்டால், ஐ.நா. குழுவானது அவர்களுக்கு சாட்சியப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்…” என்று கூறி உள்ள பிரபாத், ”அந்த சாட்சியங்கள் இன்னும் இலங்கை மண்ணில்தான் இருக்கிறார்கள்!’ என்பதையும் கூறி இருப்பது அசாதாரணமானது. அவரின் இந்த வார்த்தைகள், அர்த்தம் பொதிந்தவை.

ரமேஷின் மனைவி வத்சலாதேவி

புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நேரத்தில், புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக நின்றவர் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷ். நடேசனைப் போலவே, எதிரியிடம் எப்படியும் தன் உயிர் போகும் எனத் தெரிந்தும், படுகாயம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் இவர். ‘போரில் கொல்லப்பட்டார்’ என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ரமேஷ்தான், கைகள் கட்டப்பட்டு கேவலமாக நடத்தப்பட்ட காட்சியின் வீடியோ பதிவு அண்மையில் வெளியானது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார். அவரது வாக்குமூலமும் ஐ.நா. குழுவுக்குப் போய் இருக்கிறது.

1964-ம் ஆண்டு பிறந்த என் கணவர் துரைராஜசிங்கம், 84-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். ‘ரமேஷ்’ என இயக்கப் பெயர் சூட்டப்பட்ட அவருக்கு, இயக்கத்தில் கேணல் எனும் உயர் நிலை வழங்கப்பட்டது. கடைசி ஒரு மாதத்தில் மோதல் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டதால், அங்கு இருந்து வெளியேறினோம். ஏப்ரல் 28-ம் தேதி, மட்டக்களப்புக்குச் சென்றோம். மேற்கொண்டு அங்கு தங்கி இருக்க முடியாத நிலையில், தென் ஆபிரிக்காவுக்கு வந்தோம்.

என் கணவர் கடைசியாக மே 15-ம் தேதி என்னிடம் பேசினார்.’எங்களின் கடமையை முடித்துவிட்டு விரைவில் உங்களுடன் சேர்ந்துகொள்வேன்’ என சொன்னார். ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. போரில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. நான் அங்கு இருந்தபோதே, என் கணவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய உடலைக் காட்டவே இல்லை. அதனால், அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை.

இப்போது, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் என் கணவர் சரண் அடைவதாகக் காட்டப்படுகிறது. எனவே, அவர் போரின்போது கொல்லப்படவில்லை, உயிருடன்தான் பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன், இருக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். என் கணவர் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியும், அவருடைய நிலைமைபற்றி ஒன்றுமே தெரியவில்லை. நானும், என் பிள்ளைகளும் அவருக்கு என்ன ஆனது என்பதைப்பற்றிய கவலையிலேயே இருக்கிறோம்.

அவரைப்பற்றி பலவிதத் தகவல்கள் வருகின்றன. என் கணவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்பதை வீடியோ காட்சி நிரூபிக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட போர்க் கைதி ஒருவரின் நிலைமையைப்பற்றி இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஐ.நா. குழுவானது விசாரணை நடத்தி, என் கணவரின் கதி என்ன என எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்திருந்தால், என் கணவர் உயிருடன் இல்லை என்றால் இலங்கை இராணுவம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும். அது இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான போர்க் குற்றம்!” என்கிறார்.

இந்த வாக்குமூலங்களை அடிப்படையாகவைத்து, நாடு கடந்த தமிழீழ அரசு, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை ஐ.நா. குழுவின் முன்பு நிறுத்தி சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது.

பிரபாத், வத்சலாதேவி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். இருவரின் உயிர்ப் பாதுகாப்பு மட்டும் இன்றி, லட்சம் மக்களின் உயிரைக் குடித்த கொடிய குற்றத்துக்கான வலுவான சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஐ.நா. விசாரணைக்கு முன்பு, தங்கள் படமோ பேட்டியோ இடம்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என நமக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் ‘இனப் படுகொலை, போர்க்குற்ற விசாரணை துறை’ அமைச்சர் டிலக்சன் மொரிஸ் நம்மிடம் பேசினார்.

இலங்கைத் தீவில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அப்பட்டமான இனப் படுகொலை. அவை நிரூபிக்கப்பட்டால், அங்கு இரு தேசங்கள் உருவாக வழிவகுத்துவிடும். இதனால், இதை சில மேலைநாடுகள் போர்க் குற்றம் என்று மட்டும் கூறுகின்றன. அப்படி சுருக்கிப் பார்ப்பது, மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் ஆக்குவதற்கு மட்டுமே உதவி செய்வதாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில், நடேசனுடைய மகன், தளபதி ரமேஷின் துணைவி ஆகியோரின் வாக்குமூலங்களையும், இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் குழுவுக்கு அனுப்பி உள்ளோம். ஏற்கெனவே, டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் மூலம் இனப் படுகொலை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்திவிட்டோம். அதைப்போலவே, சட்ட ரீதியாகவும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மூலமும் ஈழ மக்கள் மீதான இனப் படுகொலையை நிரூபிக்காமல் விடமாட்டோம்! என்றார்.

புலம்பெயர்ந்த ஈழ மக்கள் மத்தியில் புல்லுருவிகளை உருவாக்கி, போர்க் குற்றங்களை மறைக்க ராஜபக்‌ஷே முயன்றாலும், இனவெறிப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என அழுத்தமாக நம்புகிறார்கள் ஈழத் தமிழர்கள்… கூடவே தமிழக ஈழ உணர்வாளர்களும்!

நன்றி: ஜூனியர் விகடன்