Labels

Friday, November 26, 2010

கருணை மனுக்களுக்கு மத்தியில் கசங்கியே கிடக்கின்றன நான்கு உயிர்கள்! - ஜூனியர் விகடன்



சிறை வாழ்க்கை பற்றி சினிமாவில் பார்த்து இருக்கிறோம். சிறை பற்றிய
கற்பனைகள் நிறைய நமக்கு உண்டு. ஆனால், உண்மையான சிறை வாழ்க்கைக்கும் நம் கற்பனைக்கும் வெகுதூரம்! சுற்றி வளைக்கப்பட்ட மதில் சுவர்களின் உள்ளே துளித்துளியாகக் கழியும் வாழ்க்கை, பெரிய ரணம். வேலூர் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்கு உள்ளாகக் கிட்டத்தட்ட இருபது வருடங்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர், ராஜீவ் கொலை வழக்கின் கைதிகள்.

சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி என அனைவரும் சிறைக்குச் சென்று 19 வருடங்கள் முடிந்துவிட்டன. இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகள். பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரைத் தவிர, மற்றவர்கள் ஈழத் தமிழர்கள். இன்று ராஜீவ் காந்தியும் இல்லை, விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. இவர்களுக்கு விடுதலையும் இல்லை!



கடந்த வாரம் சென்னை வழக்கறிஞர்கள் சிலர் வேலூர் சிறைக்குச் சென்று... நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் நீங்கலாக இதர ராஜீவ் கொலை வழக்கின் கைதிகளை சந்தித்துத் திரும்பி உள்ளனர். ''ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரே ஒரு முறையாவது ஊர், உலகத்தை, உறவுகளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தைக் கண்டோம்...'' என்று தாங்கள் வேலூரில் சந்தித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

'சிறைக்குள் நுழைந்ததுமே வலது புறம் இருக்கும் ஒரு சிறிய அறையில்தான் அவர்களை சந்தித்தோம். ஒரு சிறை அதிகாரி அருகில் அமர்ந்து இருந்தார். என்றாலும், அவர் எங்களை அத்தனை நுணுக்கமாகக் கண்காணித்தார் என்று சொல்ல முடியாது. கிட்டத் தட்ட 11 வருடங்களாக அவர்கள் வேலூர் சிறையில் இருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் பழக்கமும், சுதந் திரமும் கிடைத்து இருக்கிறது. வெள்ளைச் சட்டையும், லுங்கியும் அணிந்துகொண்டு முதலில் முருகன் வந்தார். முடியில்லாத மொட் டைத் தலையுடன் பல வருடங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பார்த்த அதே முகம். இப்போது நாற்பதை ஒட்டிய வயதுக்கான முதிர்ச்சி மட்டும் சேர்ந்திருக்கிறது. 'நளினியை, பிரியங்கா வந்து சந்திச்சதா சொன்னாங்க. அப்புறம் நளினி போனில் பேசுனதா, புழல் சிறைக்கு மாத்தினாங்க. எல்லாத்தையும் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். மகள் அரித்ராவைக்கூட நாலு வருஷத்துக்கு முன்னாடி பார்த்ததுதான். யாருடைய தொடர்பும் இல்லை. படிப்பு, ஓவியம், தையல் என ஜெயிலுக்குள் என்ன இருக்கோ, அதை எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன். பி.பி.ஏ. முடிச்சு இப்போ எம்.சி.ஏ. சேர்ந்து இருக்கேன்...' என்று படபடவெனப் பேசிய முருகன், தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஆர்வத்துடன் காட்டினார். புறா ஒன்று, சிறைக் கம்பிகளை திறந்துகொண்டு சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கும் ஓவியம் அது. கீழே அவரது சொந்தப் பெயரான வெ.சிறிகரன் என்பதைக் கையெழுத்திட்டு, 12,840 என்ற அவரது கைதி எண் எழுதப்பட்டு இருந்தது. முருகன் உட்பட யாரும் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. எப்படி யேனும் தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்றே எல்லோரும் நம்பி இருக் கின்றனர்.



ராபர்ட் பயஸ் பற்றி செய்திகளில்கூட அதிகம் வருவது இல்லை. யாரிடமாவது பேசுவதற்கு அவரது கண்கள் அலைபாய்கின்றன. 'யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற பகுதிதான் என் சொந்த ஊர். 20 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பியபோது என் மகன் தமிழ்கோ, மூன்று மாதக் குழந்தை. அவனின் சிரித்த முகம் பார்த்து, மனைவி பிரேமாவின் ஆறுதல் கண்ணீருடன் தமிழகத்துக்கு அகதியாக வந்தேன். இருபது வருடங்கள் ஆகிவிட்டது. இடைப்பட்ட நாட்களில் என் உறவினர்கள் யாருடைய தொடர்பும் இல்லை. நான் கைது செய்யப்பட்டவுடன் இலங்கையில் இருந்த என் மனைவி பிரேமாவையும் ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது. பிறகு விடுவிக்கப்பட்டு வெளியில் இருந்தவள், இறுதிக்கட்டப் போரின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில்தான் இருந்திருக்கிறாள். பிறகு மாணிக் ஃபார்ம் முகாமில் இருந்தவள், வெளியில் வந்து சமீபத்தில் மகனுடன் என்னைப் பார்க்க வந்தாள். மூன்று மாதக் குழந்தையாகப் பார்த்த மகன் தமிழ்கோ இன்று 20 வயது இளைஞனாக என் முன்னால் நின்றபோது, எனக்கு கைகள் நடுங்கின. மூன்றுபேரும் மாறி மாறி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்? 'நேரமாச்சு, கிளம்புங்க' என்ற சிறை அதிகாரியின் குரலுக்குப் பிறகு அவர்கள் கிளம்பி இலங்கை போய்விட்டனர். நான் கம்பிக்குள் காத்திருக்கிறேன்...' என்ற ராபர்ட் பயஸின் விடுதலை கோரும் மனு, சமீபத்தில் அறிவுரை கழகத்தில் நிராகரிக்கப்பட்டது. அதற்கு சொன்ன காரணங்களில் ஒன்று, 'ராபர்ட் பயஸின் வழக்கறிஞர் வீடு சென்னை காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவன் அருகே இருக்கிறது. இவரை வெளியே விட்டால்... அந்தக் கட்சிக்கும் கட்டடத்துக்கும் ஆபத்து!' என்பது.

சிறைக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும் ஒளிபரப்பாகும். அதுபோக, அவ்வப்போது டி.வி.டி. வாங்கிவந்து ஏதேனும் ஒரு படம் போடுவதுண்டாம். நாங்கள் சென்றதற்கு முந்தைய வாரம் தனுஷ் நடித்த 'தேவதையைக் கண்டேன்' படம் திரையிட்டுள்ளனர். 'இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்த சமயத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?' என்று கேட்டபோது எல்லோரும் முகம் இறுகிப் போனார்கள். 'அங்கு மிக மோசமாக ஏதோ நடக்கிறது என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. பத்திரிகைகள் மூலமே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டோம். ஒவ்வொரு நாளும் பதைபதைப்பாக இருக்கும். கடைசியில் எல்லாம் முடிந்து விட்டதாக அறிவித்த நாளன்று நம்ப முடியாமல் திகைத்துப்போனோம். ஏமாற்றமும், அவநம்பிக்கையுமாக இருந்தது...' என்று வருத்தத்துடன் பேசினார்கள்.

இத்தனை வருட சிறைவாழ்வும், இப்படியான ஏமாற்றங்களும் ஒவ்வொருவரையும் ஒரு மாதிரி மாற்றியிருக்கிறது. சாந்தன் ஓர் உதாரணம். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைத் தாடியில் ஒரு முனிவரைப் போன்று இருந்த சாந்தன் கைகளில் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். 'சிறைக் கைதிகளுக்காக உள்ளளி என்ற பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தப்படுகிறது. அதில் நான் நிறைய எழுதுகிறேன்' என்று சொல்லி அந்த இதழைக் காட்டினார். 'கனவொன்று நனவான வேளை', 'சிறையறை சின்ன ஜன்னல்', '13,905' என்ற தலைப்புகளில் மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் சாந்தன். இதில் இரண்டு நூல்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. 'சிறைக் கைதிகள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு உள்ளே சின்னதாக ஒரு பாபா கோயில் கட்டி இருக்கிறோம். நான்தான் அதை கவனித்துக்கொள்கிறேன்' என்று அந்த பாபா கோயிலின் புகைப்படத்தை எல்லோரிடமும் ஆர்வத்துடன் காட்டினார். இப்படி சில ஏக்கர் பரப் பளவுக்குள் தங்கள் வாழ்க்கையை முடிந்த வரை வேறு மாதிரி மாற்றிக்கொள்ள முயல்கின்றனர் ஒவ்வொருவரும்.

வெள்ளைச் சட்டையும், வெள்ளை டிரவுசருமாகக் கைதிகளுக்கான உடையில் இருந்த பேரறிவாளன் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. தூய தமிழ்ச் சொற்களில் கனிவுடன் பேசுகிறார். '19 ஆண்டுகள் 10 திங்களுமாக என் வயது இருக்கும்போது சிறைக்குள் வந்தேன். உள்ளே வந்து 19 ஆண்டுகள் 6 திங்கள் முடிந்துவிட்டது. நான் வெளியில் இருந்ததும் உள்ளே இருப்பதும் சரிபாதி காலம் ஆகிவிட்டது. எப்படியாவது வெளி உலகத்தைப் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய ஒரே ஆசை. தொலைக்காட்சியும் சினிமாவும் எனக்கு வெளியுலகம் காட்டுகின்றன. என்னைப் பெத்த தாய் அற்புதம்தான் என் ஒரே உலகம். அவர் என்னைப் பார்க்க வரும்போது விவரிக்கிற செய்திகளுக்கு, என் கற்பனையில் உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன். சிறை வாழ்க்கை மனதையும், உடம்பையும் பழக்கி விட்டது. ஆனாலும் இங்கே இருக்க முடியவில்லை. இப்போது என்னுடைய கோரிக்கை ஒன்றுதான்... நான் சாகத் தயாராக இருக்கிறேன். உடனே என்னைத் தூக்கில் போடுங்கள். இல்லையென்றால் விடுதலை செய்யுங்கள். எதையும் செய்யாமல் எத்தனை நாள் காத்திருப்பது?' என்று பேரறிவாளன் கேட்டபோது அவரது உதடுகள் என்னவோ புன்னகையுடன்தான் இருந்தன. எல்லோருக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் சொல்லிக் கிளம்பினோம். வழக்கறிஞர்களான எங்களால்கூட வேறு என்னதான் செய்ய முடியும்?'' என்று நெகிழ்ந்துருகிய குரலில் பேசி நிறுத்தினார்கள் அந்த வழக்கறிஞர்கள்.

கருணை மனுக்களுக்கு மத்தியில் கசங்கியே கிடக்கின்றன நான்கு உயிர்கள்!

பாரதிதம்பி
-

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment