Saturday, July 24, 2010
நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து புகார் மனு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் அதன் தலைவர்கள் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து தமிழ் இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை அளிக்கின்றனர்.
இந்த தகவலை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அமைப்பாளர் ருத்ர குமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந் திருக்கின்றன வேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது.
போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.
இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது.
1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.
1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.
நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.
2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம்.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.
1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்.
இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது.
சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment