Saturday, July 10, 2010
"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!"- சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்!
"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!"
சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்!
ப.திருமாவேலன்
முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.
இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.
"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?"
"எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!"
"இந்தியாவே இதில் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?"
" 'இந்தியா விரும்பிய போரை நாங்கள் நடத்தி முடித்தோம்' என்று மகிந்தா ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார்பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜய சிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம்' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். இந்த யுத்தத்துக்காகஇந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தியாவுக்கு நன்றி' என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களக் காடையர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே. அதற்கு என்ன அர்த்தம்? உண்மையைத்தானேசொல் கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப் படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப்படிப் பேச முடியும்?
ஏழு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதி களில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத்தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்டபொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு. காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்... என்று வடபுலத்துத் தலைவர்கள் பெயரை அதிகம் வைத்துக்கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கிரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத்திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரியார் பெயரோ உண்டா? காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாரில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தா லும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம்தான் சொல்லும்!"
" 'பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா உதவி செய்தது' என்று பதில் தரப்படுகிறதே?"
"அதைத் துணிந்து சொல்வதற்கான யோக்கியதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உண்டா? இதுவரை இலங்கைக் கடற்படையால் 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டார்களே... அவனெல்லாம் பயங்கரவாதியா? அதை, மன்மோகன் சிங்கும் சோனியாவும் கண்டித்தார்களா? 'தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள்' என்றால், 'யாரும் பயப்படத் தேவை இல்லை' என்கிறது டெல்லி. 'சீனாக்காரன், அருணாசலப் பிரதேசத்துக்குள் வருகிறான்' என்றால் 'யாரும் பயப்பட வேண்டாம்' என்கிறது டெல்லி. நாங்கள் எது எதற்குப் பயப்படலாம், எதற்கெல்லாம் பயப் படக் கூடாது என்று டெல்லி பட்டியல் போட்டுத் தந்தால் பரவாயில்லை.
மீனவனை அடிக்கும்போது 'ப்ளடி இண்டியன்ஸ்... ப்ளடி தமிழன்ஸ்' என்று ஒரு சிங்களவன் கத்துகிறான். 'நோ... நோ... பிரபாகரன் ரிலேஷன்ஸ்' என்று இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இந்தியன் என்றாலே பிரபாகரனின் உறவுக்காரன் என்று சிங்களவன் நினைக்கிறான். சீனாவும் பாகிஸ்தானும் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று வந்தபோது மறுத்தவர் பிரபாகரன். இந்தியாவைத் தன்னுடைய தந்தையர் தேசமாக அவர் நினைத்தார். இதை இந்தியா உணர மறுத்தது. அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கப் போகிறது. சீனாவின் காலனி ஆதிக்க நாடாக இலங்கை மாற்றப்பட்டு, பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப்போகிறது!"
"இன்றைய நிலையில் ஈழம் எப்படி இருக்கிறது?"
"ஏழைகள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக சொல்வதைப்போல மக்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு, நாடு அமைதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். மரண வாசனைக்கு மத்தியில், சிங்களத் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. ஐந்து விதமான கொடூரங்களை இரக்கம் இல்லாமல் செய்ய ஆரம்பித் திருப்பதாக எனக்குத் தகவல்கள்வரு கின்றன.
அம்பாந்தொட்டை என்ற இடத்தில் கப்பல் கட்டும் தளத்தை சீன அரசு அமைத்து வருகிறது. அதில் வேலை பார்க்க சீன தேசத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கைதிகளாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டிய ராணுவ வீரர்களே சீரழிவின் உச்சத்துக்குச் செல்லும் ஒரு தேசத்தில் வந்து இறங்கிய சீனக் கைதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. வந்திருப்பதில் 5,000 பேர் சீன உளவாளிகள் என்றும், 10 ஆயிரம் பேர் சீனத் தீவிர வாதிகள் என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ் ஆண் மக்கள் அனைவரையும்கொன்றுவிட்டு, சீனக் கலப்பினத்தை உருவாக்கும் திட்டத்துடன்தான் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இது முதலாவது ஆபத்து.
முள்வேலி முகாமில், தடுப்புக் காவல் முகாம்களில் இருக்கும் எம் தமிழ்ச் சகோதரிகளில் பலரும் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள். அதாவது, சிங்கள ராணுவவீரர் களின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுஉள்ளார் கள். அவர்களது கருக்களைக் கலைக்கவிடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள். சிங்களக் கலப்பினம் பச்சையாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது இரண்டாவது ஆபத்து.
தமிழர் வாழ்ந்த பகுதிகள் அனைத்திலும் இருந்த தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மற்றும் புத்த அடையாளங்கள் நிறுவப்படுகின்றன. இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. சிங்களக் கடைகளில் பொருட்கள் வாங்கி, புத்த சாமிகளை வணங்கித்தான் இனி தமிழன் வாழ முடியும். இது மூன்றாவது ஆபத்து.
முக்கியமான மீன் பிடி இடங்கள்அனைத் தும் சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட தால், அவர்கள் ராட்சச இயந்திரங்கள் மூலமாக மீன்களை உறிஞ்சினால், இனி இந்திய மீனவர்கள் கடலில் பிடிக்க மீனே இருக்காது. அதாவது, நம்முடைய நாட்டின் மீன் பிடி வர்த்தகம் முழுமையாக அழியப்போகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான மீனவர் வாழ்க்கையில் மண் விழப்போகிறது. இது நான்காவது ஆபத்து.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வடக்கில் இருப்பதால்தான், தென்னகத்தில் மிக முக்கியமான நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. ஆனால், இன்று நம்மு டைய எதிரிகள் ஈழத்தில் முழுமையாகக் கால் ஊன்றுவதால் அதிக ஆபத்து தமிழ்நாட்டுக்குத்தான். இது ஐந்தாவது ஆபத்து, இந்திய தேசத்துக்கே பேராபத்து!"
"கடைசிக் கேள்வி என்னவாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியுமே?"
"ம்... தலைவர் இருக்கிறாரா என்பதுதானே? பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் கொடுத்த பிறகும், ராஜீவ் வழக்கை இந்தியா ஏன் முடிக்கவில்லை? புலிகள் அமைப்பே இல்லாதபோது, இந்தியா ஏன் இன்னமும் தடையை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது? முள்ளி வாய்க்கால் முடிந்துபோன பிறகும் முன்னிலும் வேகமாக அடக்குமுறைகளை இலங்கை தொடர்வதற்கு என்ன காரணம்? காட்டுப் பகுதியே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி அழிப்பதன் பின்னணி என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான்பேசு வதற்கு அனுமதித்த கனடா, இன்று தடுப் பதற்கு என்ன அர்த்தம்?
நமக்கெல்லாம் தெரியாத விடை அவர்களுக்குத் தெரியுமப்பா. தலைவன் இருக்கிறான் என்பதை நான் நிரூபிக்கத் தேவை இல்லை. உலக நாடுகளே நிரூபித்துக்கொண்டு இருக்கின்றன!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment