Labels

Saturday, July 24, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 7


முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)
ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (62)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (63)

நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின் உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (64)

நொய்தின் -விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (65)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்
குறையுடையார் தேடியெம் குட்டி மணியின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (66)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை
எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.

ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (67)

ஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)
ஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (68)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;
ஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.

களப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறுக்கொண் டவர்க்கியார் காப்பு? (69)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்
தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு
அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.

காணலரால் எம்மவர் காணி இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (70)

காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.

No comments:

Post a Comment