Labels

Saturday, July 24, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 10


விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (94)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (95)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்
கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (96)

====

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (97)

நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண -உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (98)

இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (99)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (100)

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 9


முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)

பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)

உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 8


தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (71)

இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (73)

அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.

காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்
மாணத் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (74)

கவின் –அழகு; மாணம் –மாட்சிமை.

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (75)

உவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (76)

உவட்டுதல் –அருவருக்கத்தக்க

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (77)

மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (78)

குழுமாடு –காடையர்.


நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (79)

வன்புணர்ச்சி -கற்பழிப்பு

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (81)

திரை –அலை.

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 7


முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)
ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (62)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (63)

நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின் உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (64)

நொய்தின் -விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (65)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்
குறையுடையார் தேடியெம் குட்டி மணியின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (66)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை
எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.

ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (67)

ஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)
ஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (68)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;
ஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.

களப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறுக்கொண் டவர்க்கியார் காப்பு? (69)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்
தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு
அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.

காணலரால் எம்மவர் காணி இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (70)

காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 6


எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (51)
எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்

துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்
நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி
ஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே
தூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (52)

இகல் -பகை

துடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,
மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்
குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்
செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (53)

துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.

சிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்
இருப்பிடம் ஏகாரோ? ஏய்ப்போர் –இருக்கின்ற
நாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்
பாழ்பட்டுப் போகிறதே பார்! (54)

பார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்
நீர்சூழ்ந்த நாட்டில் நிலைகெட்டு? –தீர்வொன்றை
நாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே
தேம்பிப்பின் ஓடும் தெறித்து! (55)

தெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை
உறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்
சுட்டப் பிறந்த சுடர்கதிரே! இங்கவரை
நெட்டி நெரித்தாய் நிமிர்ந்து! (56)

தெறுநர் –பகைவர்.

நிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்
எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! –குமை*செய்
கொடுஞ்சிங் களரின் குடலை உறுவி
நெடுவான் எறிந்தாய் நிலைத்து! (57)

நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான
காலஅளவு; குமை –அழிவு, துன்பம்.

நிலைத்த புகழின் நிறையே! இகலைக்
களையப் பிறந்த கதிரே! –களத்திற்(கு)
அழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே
இழைத்தார் இமையா(து) இடர்! (58)

இகல் -பகை

இடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா!
அடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)
அடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;
எடுப்பார்கைப் பிள்ளையுமா னோம்! (59)

நோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;
நோக்கில் தெளிவன்றோ நோய்தீர்க்கும்? –போக்கொன்றே
ஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை
மோதி மிதித்தாய் முனைந்து! (60)

நோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி

நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து புகார் மனு


நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் அதன் தலைவர்கள் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து தமிழ் இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை அளிக்கின்றனர்.

இந்த தகவலை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அமைப்பாளர் ருத்ர குமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன.

சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.

சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந் திருக்கின்றன வேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.

இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது.


போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது.

1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.

1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.

நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1. இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.

2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்.

இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது.

சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.

Thursday, July 15, 2010

என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்!


இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்தும், கடந்த 10-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், 'நாம் தமிழர் இயக்கம்' ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய சீமான், 'அடிக்கு அடி' என்கிற பாணியில், தமிழகத்துக்கு வரும் சிங்களர்களை அடிப்பேன் என்று பேச, கூட்டத்தில் ஏகமாக கை தட்டல்கள்!



உடனே, சீமான் மீது வழக்கு பதிவுசெய்தது போலீஸ். அவரைக் கைது செய்ய வீடு, அலுவலகத்துக்குப் படை யெடுத்தது. 12-ம் தேதி காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களைச் சந்திக்க வந்த சீமான், ஏக தள்ளு முள்ளுகளுக்கு இடையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுக்கு முன்பு அவரை, தொலைபேசியில் பிடித்தோம்.

''இந்த முறை சற்று பலமாகவே உங்களை வழக்குகள் துரத்தும்போல் இருக்கிறதே... அப்படி என்ன பேசினீர்கள்?''

''இலங்கையில் இறக்கிவிடப்பட்டுள்ள 25,000 சீனர்களில், 5,000 பேர் கைதிகள், 10,000 பேர் பயங்கர வாதிகள் என்று தகவல்கள் வருகின்றன. இதனால் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பேராபத்து. தமிழக மீனவனை சீனாக்காரன் வந்து சுடப்போகிறான் என்று எச்சரித்தால், அது தவறா? கொக்கு, குருவியை சுட்டால்கூட ஏன்னு கேட்கிற நாட்டில், இதுவரை 501 மீனவத் தமிழர்களைக் கொலை செய்திருக்கிறான். எல்லை தாண்டியதால் சுட்டோம் என்கிறான். எல்லை தாண்டும் சிங்களனை, இந்தியப் படை இது வரை தாக்கியதுண்டா? ஆனால், தமிழன் மட்டும் கொல்லப்படுவான். இதனால்தான் வெகுண்டு, 'என் தமிழனைக் கடலில் நீ அடித்தால், இங்கு படிக்கும் சிங்கள மாணவனை அடிப்பேன். சென்னை எழும்பூரில் புத்த விகாரைக்கு எந்தெந்த சிங்களன் வந்துபோகிறான் என்பது எனக்குத் தெரியும். திருப்பூரில் எங்கெங்கே சிங்களன் வேலை பார்க்கிறான் என்பது தெரியும். இங்கு பெரும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் சிங்களனை எனக்குத் தெரியும். என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்' என்று பேசினேன்!''



''இந்திய சட்டப்படி மட்டுமல்ல... 'பல்லுக்குப் பல்' என்பதெல்லாம் தவறுதானே?''

''இரு இனங்களுக்கு இடையில் கலவரத்தை, வன்முறையைத் தூண்டியதாக சொல்வது மிகப் பெரிய வேடிக்கை. நான் பேசி என்ன வன்முறை நடந்துவிட்டது இப்போது? எந்தக் காலத்தில் சிங்களனுக்கும் தமிழினத் துக்கும் நட்பு இருந்தது, நான் அதைக் கெடுக்க? இரண்டு இனங்களுக்கும் இடையில் 60 வருடப் பகை, யுத்தம் இன்னும் முடியவில்லை!''

''புதுச்சேரியில் ஒருமுறை தமிழகத் தலைவர்களை அதிர்ச்சிகரமாக ஒப்பிட்டு, 'இவர்களுக்கு இறையாண்மையைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?' என்று பேசி, பின்பு வருத்தம் தெரிவித்தீர்கள். அதைப்போல இப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''புதுச்சேரியில் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தது உண்மைதான். அதற்காகத்தான் சிறைவைத்து விட்டார்களே... இப்போது, உண்மையை... ஆழ்மனதில் இருந்து நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இதுவரையிலும் இனியும் நான் இப்படித்தான். என் பேச்சில் எங்காவது தவறு என யார் சொன்னாலும் அதைத் திருத்திக்கொள்ளத் தயார். சென்னையில் நான் பேசியதை ஊடகங்களில் வெளியிடாமல் தடுக்கிறார்கள். கருணாநிதிக்குத் துணிவு இருந்தால், நேர்மை இருந்தால், என் பேச்சை வரிவிடாமல் முழுமையாக வெளியிடவேண்டும். என் தமிழ் மக்கள் அதைத் தவறு என்று சொன்னால், அதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்வேன். இதற்கு அவர் தயாரா? நான் கேட்கும் கேள்விகளை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிரச்னை. சென்னையில்கூட, 'இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவை வரவேற்கச் சொல்லி, மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்' எனப் பேசினேன். அவரிடம் இதற்கு பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுகிறார். எவ்வளவோ நவீனம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இது எவ்வளவு பெரிய நகைச்சுவை!

உலகத் தமிழன் இதைக் கண்டு சிரிக்கிறான். இப்படியே கடிதம் எழுதி ஒரு காலத்தில் அதையும் புத்தகம் போட்டு விற்கலாம். குடும்பத்தாருக்குப் பதவி வேண்டும் என்றால் மட்டும் நேரில் போகிறீர்களே... மீனவத் தமிழன் உயிர் மட்டும் அவ்வளவு அலட்சியமா?

பேச்சில், எழுத்தில் மட்டும், 'புறநானூற்றுத் தமிழனே, வரிப் புலி இனமே, சிங்கக் கூட்டமே சிலிர்த்து வா' என எழுதுகிறார். இவர் இப்படி எழுதுகிறாரே என்று பட்டிதொட்டியில் இருந்து எழுச்சியோடு வந்தால், 'சிங்களன் அடிப்பான்... கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்கிறார். அதற்கு நீங்கள் எங்களை உசுப்பேற்றாமல், 'மண்புழுவே, நாயே, நரியே' என எழுதி இருக்கலாமே? தன்மானம், இனமானம், சுயமரியாதை என்று சொல்வதெல்லாம் கூழைக் கும்பிடு போடுவதற்காகத்தானா? இனிமேல் புறநானூற்று தமிழ் வீரத்தைப்பற்றி எழுதுவதை இவர் நிறுத்தட்டும்!''

''ஈழ ஆதரவுத் தளத்தில் பல தலைவர்கள் தொடர்ந்து இயங்கினாலும், நீங்களும் உங்கள் அமைப்பும் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவது ஏன்?''

''பொதுவாக இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட்டதாக என் மீது வழக்குப் போடுவார்கள். இந்த முறை மட்டும் வன்முறையைத் தூண்டியதாக வழக்கு. நான் பேசியது வன்முறையைத் தூண்டுகிறது என்றால், என் மீனவத் தமிழனை ராஜபக்ஷேவின் சிங்களக் கடற்படை கொன்றது என்ன நன்முறையா? ஆனால், இதைப்பற்றி இங்கே பேசக் கூடாது. நான் எந்த ஊருக்கு, கூட்டத்துக்குப் போனாலும் தங்கும் விடுதியில் இடம் தரக் கூடாது என அரசு மிரட்டிவைத்துள்ளது. என் கார் எரிக்கப்பட்டது. இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை. ஒரே காரணம், சீமான் தமிழர்களைப்பற்றிப் பேசுகிறான். அவன் பேச்சை நிறுத்த வேண்டும். என் தம்பிகள் செயல்படக் கூடாது. அவர்கள் களத்தில் இறங்கவே அச்சப்படவேண்டும். இதுதான் ஆள்வோரின் எண்ணம்!''

''வெளிநாட்டுப் பிரச்னைகளைப் பேசி இங்கு பிரச்னை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளாரே?''

''என்னை முன்னிட்டு இந்த நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவந்தால், அதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும்? 'எதையும் சந்தேகி' எனக் கேட்கச் சொன்ன பெரியாரின் வாரிசு என சொல்பவர்களின் லட்சணம் இதுதான். சாகத் துணிந்துதான் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறேன். 'ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததே இல்லை' என என் தலைவன் பிரபாகரன் சொல்வார். மான் ஓடிக்கொண்டே இருக்கிறது... நான் போராடிக்கொண்டே இருக்கிறேன்... இருப்பேன்!'



-

நன்றி

ஜூனியர் விகடன்

Monday, July 12, 2010

என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை: சிறை செல்லும் முன் சீமான் கடிதம்


கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

உங்களை சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தை தருகிறேன்.

வன்முறை பிரிவினையை தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையை தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?

தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினை வாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது. இன்று கூட சிங்களர்கள் தமிழக மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.

மீனவர்கள் பிரச்சினையை தீர்க்காமல் பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா? இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம்தான். இப்படி சொல்வது எப்படி பிரிவினையாகும். சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய ராணுவம் சுடாதது ஏன்?

உலகமே இன்றைக்கு இலங்கையின் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா. மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்து வைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான ராஜபக்சேவே செல்கிறார்.


இலங்கை பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய ராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், ராணுவத்தின் மீதும் விசாரணை ஏதும் நடத்தமாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமின்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழுவிற்கு சாட்சியமளித்தால் அவரைத் தூக்கிலிடுவோம் என பிபிசிக்கு அளித்த நேர்காணலில் மிரட்டுகிறார்.

போர்க்குற்றம் செய்யாதவர்கள் என்றால் இப்படியெல்லாம் ஐ.நா.வை அவமானப்படுத்துவது ஏன்? விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுப்பதேன்? சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த அனுமதித்தால் இலங்கை போர்க்குற்றவாளி நாடாக அறிவிக்கப்படும் என்ற அச்சத்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதுதானே உண்மை.


ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இடம்பெற முயற்சிக்கும் இந்தியா இதுவரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? 2009 ஜனவரியில் காசா பகுதியில் சுமார் 1700 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டபோது, அதே ஆண்டு ஏப்ரலில் ஐ.நா.மன்றம் அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை வரவேற்ற இந்திய அரசு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இதுவரை ஏன் கண்டிக்கவில்லை? போர்க்குற்ற விசாரணை நடத்தச் செல்லும் ஐ.நா.குழுவை இந்தியாவும் தமிழக அரசும் ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கிறதா என்று சொல்லட்டும்.

மிகச் சிறிய நாடான இலங்கை ஐ.நா. மன்றத்தையே அவமானப்படுத்தும்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதைக் கண்டிக்க அஞ்சுவது ஏன்? சீனக் கைதிகளை இலங்கை இறக்குமதி செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்திய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இலங்கை அனுமதித்துள்ள 25,000 சீனக்கைதிகளில் பயங்கர குற்றவாளிகளும், உளவாளிகளும் இருக்க மாட்டார்கள் என்று என்ன உறுதியிருக்கிறது? அப்படிப்பட்டவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பகுதியாகவும் ராணுவத்தளங்கள் அமைக்க தகுதியான இடமாகவும் கருதப்படும் தென்னிந்தியாவிற்கு குந்தகம் விளையாதா?


இந்தியா, இலங்கை வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டு கடலோரப் படைகளும், தன் அண்டை நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக்கொல்வது கிடையாது. கைது செய்து அந்தந்த நாட்டிற்கே அனுப்பிவைத்து விடுவதுதான் வழக்கம். ஆனால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசைத் தட்டிக்கேட்க துணிவு இல்லாவிட்டாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடமோ முறையிட்டு இலங்கை அரசை, இந்தியா தண்டிக்க தவறியது ஏன்?


அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது. அவையெல்லாம் எதற்கு? ராஜபக்சேவுக்கு வெண்சாமரம் வீசுவதற்கா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 168 இந்தியர்களை சுட்டுக் கொன்றதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்த இந்தியா முள்ளிவாய்க்கால் போரில் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 15,000 பேர், 50000 ஈழத்தமிழர்களோடு இனப்படுகொலை செய்யப்பட்டதையும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்பகுதியிலேயே சிங்கள கடற்படை கொன்றதையும் உதாசீனப்படுத்திவிட்டு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்புவது இந்திய ஒருமைப்பாட்டின் இலட்சணத்திற்கு இதுதான் அடையாளமா?

சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்பட்டும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், பொறுப்புள்ள ஒரு தமிழக முதல்வர், ''சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?'' என்றும் ''கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?'' என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?

மலேசியாவில் சுமார் 250 ஆந்திர மென்பொருள் பொறியாளர்களின் கடவுச்சீட்டை அந்நாட்டின் காவல்துறை கிழித்து அவமானப்படுத்தியபோது, ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, அப்போதை பிரதமர் வாஜ்பாய்க்க்கு நெருக்கடி தந்து உடனடியாக புதுக்கடவுச் சீட்டு வழங்கக் செய்ததோடு மலேசிய அரசுடனான சுமார் 65000 கோடி ரூபாய் இந்திய வணிகத்தையே ரத்து செய்ய வைத்தார்.


ஹரியானா வம்சாவழி வந்த பிஜி நாட்டின் அதிபர் சவுத்ரி ராணுவப் புரட்சியால் தூக்கி எறியப்பட்டதற்கு, ஹரியானா முதல்வராக இருந்த சவுதாலாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய அரசு பிஜி நாட்டுடனான அரச உறவுகளை துண்டித்துக் கொண்டதோடு தன்னாட்டு தூதுவரையும், பிஜியிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது.


கென்யா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத்தியர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கென்யாவில் வாழும் குஜராத்தியர்கள் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வரலாம். அவர்களை குஜராத் அரசு பாதுகாக்கும் என்று துணிவோடு பேசினார். ஆனால் தமிழக முதல்வர் கலைஞரோ, 83 வயதான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மலேசியாவில் இருந்து இந்தியா வந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளை இரக்கமில்லாமல் விமானதளத்தில் இருந்து திருப்பி அனுப்பிய கருணைக்கடல் அல்லவா நீங்கள்?


உலகில் வாழும் 10 கோடி தமிழர்களும் ஐ.நா.மன்றம் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆய்வு செய்யும் குழுவை நியமனம் செய்ததற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கும், இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றிகள் செலுத்தி பாராட்டி வருகிறார்கள்.


இனப்படுகொலையை விசாரிக்க இவர்கள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு யார் தடையாய் இருக்க நினைத்தாலும் அதனை முறியடித்துக் காட்டும் ஆற்றல் உலகத் தமிழர்க்கு உண்டு எனவே ஈழத்தமிழரையும், தமிழக மீனவர்களையும் காத்திட ஆட்சியில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள் எங்களை இலங்கைக்குச் செல்ல தூண்டிவிடுவது போல், தமிழக இளைஞர்களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் ''பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால், சங்காரம் நிஜமென சங்கே முழங்கு'' என்கிற வழியில் எங்களை அனுமதிக்க நீங்கள் தயாரா? எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஒளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல.

என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை. எண்ணற்ற கேள்விகளோடு நேரமின்மையால் சிறை செல்கிறேன். வந்து சொல்கிறேன். நன்றியோடு உங்கள் சீமான். இவ்வாறு அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சீமான் கைது


ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சீங்களவர்களை விடமாட்டோம் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் சீமான் தலைமறைவானார்.

இந்நிலையில் இன்று சென்னை பத்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் அனுப்பிய சீமானை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.பிரஸ் கிளப்பில் பேட்டி தரும் முன்னரே சீமானை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி சிவானந்தா சாலை, வாலஜா சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நாம் தமிழர் இயக்கத்தினருக்கும் மோதல் மூண்டது.

சுமார் 15 நிமிடத்துக்குப் பின்னர் போலீசார் சீமானை கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை ஜூலை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சீமான், அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக சீமானை வேலூர் சிறைக்கு மாற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, July 10, 2010

"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!"- சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்!


"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!"

சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்!
ப.திருமாவேலன்

முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.

"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?"

"எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!"



"இந்தியாவே இதில் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?"

" 'இந்தியா விரும்பிய போரை நாங்கள் நடத்தி முடித்தோம்' என்று மகிந்தா ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார்பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜய சிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம்' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். இந்த யுத்தத்துக்காகஇந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தியாவுக்கு நன்றி' என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களக் காடையர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே. அதற்கு என்ன அர்த்தம்? உண்மையைத்தானேசொல் கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப் படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப்படிப் பேச முடியும்?

ஏழு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதி களில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத்தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்டபொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு. காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்... என்று வடபுலத்துத் தலைவர்கள் பெயரை அதிகம் வைத்துக்கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கிரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத்திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரியார் பெயரோ உண்டா? காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாரில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தா லும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம்தான் சொல்லும்!"



" 'பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா உதவி செய்தது' என்று பதில் தரப்படுகிறதே?"


"அதைத் துணிந்து சொல்வதற்கான யோக்கியதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உண்டா? இதுவரை இலங்கைக் கடற்படையால் 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டார்களே... அவனெல்லாம் பயங்கரவாதியா? அதை, மன்மோகன் சிங்கும் சோனியாவும் கண்டித்தார்களா? 'தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள்' என்றால், 'யாரும் பயப்படத் தேவை இல்லை' என்கிறது டெல்லி. 'சீனாக்காரன், அருணாசலப் பிரதேசத்துக்குள் வருகிறான்' என்றால் 'யாரும் பயப்பட வேண்டாம்' என்கிறது டெல்லி. நாங்கள் எது எதற்குப் பயப்படலாம், எதற்கெல்லாம் பயப் படக் கூடாது என்று டெல்லி பட்டியல் போட்டுத் தந்தால் பரவாயில்லை.

மீனவனை அடிக்கும்போது 'ப்ளடி இண்டியன்ஸ்... ப்ளடி தமிழன்ஸ்' என்று ஒரு சிங்களவன் கத்துகிறான். 'நோ... நோ... பிரபாகரன் ரிலேஷன்ஸ்' என்று இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இந்தியன் என்றாலே பிரபாகரனின் உறவுக்காரன் என்று சிங்களவன் நினைக்கிறான். சீனாவும் பாகிஸ்தானும் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று வந்தபோது மறுத்தவர் பிரபாகரன். இந்தியாவைத் தன்னுடைய தந்தையர் தேசமாக அவர் நினைத்தார். இதை இந்தியா உணர மறுத்தது. அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கப் போகிறது. சீனாவின் காலனி ஆதிக்க நாடாக இலங்கை மாற்றப்பட்டு, பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப்போகிறது!"

"இன்றைய நிலையில் ஈழம் எப்படி இருக்கிறது?"

"ஏழைகள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக சொல்வதைப்போல மக்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு, நாடு அமைதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். மரண வாசனைக்கு மத்தியில், சிங்களத் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. ஐந்து விதமான கொடூரங்களை இரக்கம் இல்லாமல் செய்ய ஆரம்பித் திருப்பதாக எனக்குத் தகவல்கள்வரு கின்றன.

அம்பாந்தொட்டை என்ற இடத்தில் கப்பல் கட்டும் தளத்தை சீன அரசு அமைத்து வருகிறது. அதில் வேலை பார்க்க சீன தேசத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கைதிகளாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டிய ராணுவ வீரர்களே சீரழிவின் உச்சத்துக்குச் செல்லும் ஒரு தேசத்தில் வந்து இறங்கிய சீனக் கைதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. வந்திருப்பதில் 5,000 பேர் சீன உளவாளிகள் என்றும், 10 ஆயிரம் பேர் சீனத் தீவிர வாதிகள் என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ் ஆண் மக்கள் அனைவரையும்கொன்றுவிட்டு, சீனக் கலப்பினத்தை உருவாக்கும் திட்டத்துடன்தான் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இது முதலாவது ஆபத்து.

முள்வேலி முகாமில், தடுப்புக் காவல் முகாம்களில் இருக்கும் எம் தமிழ்ச் சகோதரிகளில் பலரும் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள். அதாவது, சிங்கள ராணுவவீரர் களின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுஉள்ளார் கள். அவர்களது கருக்களைக் கலைக்கவிடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள். சிங்களக் கலப்பினம் பச்சையாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது இரண்டாவது ஆபத்து.

தமிழர் வாழ்ந்த பகுதிகள் அனைத்திலும் இருந்த தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மற்றும் புத்த அடையாளங்கள் நிறுவப்படுகின்றன. இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. சிங்களக் கடைகளில் பொருட்கள் வாங்கி, புத்த சாமிகளை வணங்கித்தான் இனி தமிழன் வாழ முடியும். இது மூன்றாவது ஆபத்து.

முக்கியமான மீன் பிடி இடங்கள்அனைத் தும் சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட தால், அவர்கள் ராட்சச இயந்திரங்கள் மூலமாக மீன்களை உறிஞ்சினால், இனி இந்திய மீனவர்கள் கடலில் பிடிக்க மீனே இருக்காது. அதாவது, நம்முடைய நாட்டின் மீன் பிடி வர்த்தகம் முழுமையாக அழியப்போகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான மீனவர் வாழ்க்கையில் மண் விழப்போகிறது. இது நான்காவது ஆபத்து.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வடக்கில் இருப்பதால்தான், தென்னகத்தில் மிக முக்கியமான நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. ஆனால், இன்று நம்மு டைய எதிரிகள் ஈழத்தில் முழுமையாகக் கால் ஊன்றுவதால் அதிக ஆபத்து தமிழ்நாட்டுக்குத்தான். இது ஐந்தாவது ஆபத்து, இந்திய தேசத்துக்கே பேராபத்து!"

"கடைசிக் கேள்வி என்னவாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியுமே?"

"ம்... தலைவர் இருக்கிறாரா என்பதுதானே? பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் கொடுத்த பிறகும், ராஜீவ் வழக்கை இந்தியா ஏன் முடிக்கவில்லை? புலிகள் அமைப்பே இல்லாதபோது, இந்தியா ஏன் இன்னமும் தடையை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது? முள்ளி வாய்க்கால் முடிந்துபோன பிறகும் முன்னிலும் வேகமாக அடக்குமுறைகளை இலங்கை தொடர்வதற்கு என்ன காரணம்? காட்டுப் பகுதியே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி அழிப்பதன் பின்னணி என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான்பேசு வதற்கு அனுமதித்த கனடா, இன்று தடுப் பதற்கு என்ன அர்த்தம்?

நமக்கெல்லாம் தெரியாத விடை அவர்களுக்குத் தெரியுமப்பா. தலைவன் இருக்கிறான் என்பதை நான் நிரூபிக்கத் தேவை இல்லை. உலக நாடுகளே நிரூபித்துக்கொண்டு இருக்கின்றன!"

Monday, July 5, 2010

எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகள்


கரும்புலி மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயல இணைப்பாளர் இராமு.சுபன் வெளியிட்ட அறிக்கையில் “எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகம் த/செ/ஊ/அ/05/10
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
05ஃ07ஃ2010

இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம் தனித்து நின்று தம்மையே அர்ப்பணித்துஇ தகர்த்து சின்னாபின்னமாக்கிய எம் தேசப்புதல்வர்களின் திருநாள்.

கரும்புலிகள் எம் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். எமது போராட்ட இலட்சியத்தின் உறுதியினை எடுத்துக்காட்டும் குறியீடுகள். எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் வேட்கையினை அடைவதற்கான தடைகளை அகற்றி முன்னே சென்ற அதிசயப் பிறவிகள்.

எமது அரசியல் இலக்கினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் பலவீனமான இனத்தின் பலங்களாகவும் எம் மக்களின் உறுதிக்கு உரமாகவும் விளங்கியவர்களே எம் தற்கொடைப் போராளிகள்.

1987 ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லரினால் தொடக்கி வைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல் 23 வருடங்களாக நூற்றுக்கணக்கான தற்கொடைப் போராளிகளை உருவாக்கியும் அர்ப்பணித்தும் எமது போராட்டத்தினை நகர்த்திச் சென்றுள்ளது.

அன்பார்ந்த மக்களே

எமது இனமும் மொழியும் நிலமும் என்றுமில்லாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படும்போது எந்தச் சக்திகளும் அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. எமது இனத்தின் பலவீனங்களையும்இ வளப்பற்றாக்குறையினையும் பயன்படுத்தி முற்றுமுழுதாக எம்மை அழிக்க சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற வேளைகளிலெல்லாம் அதை எதிர்கொள்ளும் பலமான ஆயுதமாகவே கரும்புலிகள் செயற்பட்டார்கள்.

ஓர் இனத்தின் அழிவில் தமது நலன்களை நிறைவேற்ற நினைத்த சக்திகளுக்கு எதிராகவும் அந்தச் சக்திகளைப் பயன்படுத்தி எம் மக்களை முற்றாக அழித்து நில ஆக்கிரமிப்பைச் செய்யும் சிங்களப் பேரினவாதத்தைஇ எதிர்கொள்ளும் ஒரு தடுப்பரணாகவே எம் தற்கொடைப் போராளிகள் செயற்பட்டார்கள்.

எம் தற்கொடை போராளிகள் மனித குலத்திற்கு எதிராகவோஇ இன்னோர் இனத்தினை அச்சுறுத்தவோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. எதிரியின் இராணுவஇ பொருளாதார இலக்குகளைத் தாக்கியழிப்பதே எமது தற்கொடைப் போராளிகளின் நோக்கமாக இருந்தது.

எமது தற்கொடைப் போராளிகள் எம் இனத்தின் மீதான படையெடுப்புக்களைத் தடுத்தார்கள். எம் மண் ஆக்கிரமிக்கப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். எமது போராட்டம் பேரிடர்களை எதிர்கொண்ட நேரங்களிலெல்லாம் முன்கூட்டியே எதிரியின் இதயப்பகுதியில் இடியாக இறங்கி வரவிருந்த பேரழிவுகளைத் தடுத்தார்கள்.

எம் பலம் சிதைக்கப்படும் போது எம் மக்களும் எம் மண்ணும் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் அதன் பின்னரான சிங்களத்தின் திமிர்த்தனமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

கடந்த 23 ஆண்டுகளாக எம் போராட்டத்தின் பாதுகாப்பரணாக விளங்கிய எம் தற்கொடைப்போராளிகளை இன்று நாம் எம் மனதில் நிறுத்திப் பூசிக்கின்றோம். எம் மாவீர்களினதும் மக்களினதும் தியாகங்கள் இலட்சியத்தை அடையும்வரை எம்மைத் தொடர்ந்து வழிநடத்தும். எந்த அரசியல் இலட்சியத்திற்காக அவர்கள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம். எம் அரசியல் உரிமைப் போராட்டத்தில் வரும் தடைகளை காலச் சூழலிற்கேற்பஇ உலக ஓட்டத்திற்கு அமைவாக ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பயணிப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்
இணைப்பாளர்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

media@viduthalaipulikal.net