Sunday, May 16, 2010
பிரபாவின் சிறு மற்றும் இளமைப் பராயம் - பாகம் இரண்டு
பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை பிரபாவின் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான நபர்.
பிரபா தனது 17வது வயதில் தனது குடும்பத்துடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டார். தனது புகைப்படமோ அல்லது புகைப்படத் தொகுப்போ வீட்டில் இல்லாதவாறு எல்லாவற்றையும் அகற்றினார் பிரபா. பிரபாவை தேடிய பொலிஸார் வைத்திருந்த ஒரே புகைப்பட ஆதாரம் அஞ்சலக அடையாள அட்டை ஒன்று மட்டுமே.
பிரபாவின் போராட்ட வாழ்விற்கு அவரது தகப்பனாரிடமிருந்து எந்தவிதமான உதவியோ ஆதரவோ கிடைக்கவில்லை. ஆனால் உதவிக்கரம் கொடுத்தவர்கள் வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியின் கணவரும் மச்சினனுமாகிய மதியாபரணம் ஆகியோர்தான்.
பிரபா பிறந்ததன் பிற்பாடு திருவேங்கடம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் வல்லிபுரம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் எழுதப்படாத உடன்பாடு ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பிரபாவுக்கு தாய் மாமன் மகள்களில் ஒருவரை மணம் முடித்து வைப்பது. ஆனால் பிற்காலத்தில் பிரபா மதிவதனி ஈரம்பு மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டபோது தனது சங்கடங்களுக்கு நடுவிலும் பிரபாவிடம் தாலி எடுத்துக் கொடுத்ததும் இதே தாய் மாமன் வேலுப்பிள்ளை தான்.
1984 அக்டோபர் 1 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த அந்தத் திருமணத்திற்கு திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாவின் அன்னை பார்வதிப்பிள்ளையின் உடன் பிறந்த சகோதரரான வல்லிபுரம் வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்திருந்த அரச பண்ணைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். வீட்டுடனான உறவை முறித்துக் கொண்ட பிரபா தாய் மாமன் வீட்டில் தங்குவதே அதிகம். பிரபாவிற்கு அவர் மீது மிகுந்த விருப்பம். வல்லிபுரம் வேலுப்பிள்ளையின் மகள் ஒருவர் தற்போது இலண்டனில் வசிக்கிறார். அவருடைய மகன் ஒருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இறுதி யுத்தத்தின் போது அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.
இவ்வாறாக பிரபாவின் வாழ்வில் மிக முக்கிய பாத்திரம் வகித்த வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் அவரது மனைவியும் கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெற்ற ஒரு எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம்.
வீட்டை விட்டு வெளியேறிய போதும் பிரபாவிற்கு அவரது தாய் மீது மிகுந்த பாசம் இருந்தது. அவர் சமைக்கும் உணவை சுவைப்பதற்காக பிரபா ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிற்கு களவாக வந்து செல்வது வழக்கம். பிரபா தாயிடமிருந்துதான் தனது சிறப்பான சமையல் கலையைக் கற்றுக் கொண்டார்.
ஒருமுறை வேலுப்பிள்ளை வேலை நிமித்தம் துணுக்காய் சென்றிருந்த சமயம் ஆலடி வீட்டிற்கு சென்றிருந்தார் பிரபா. அவசரமாகச் செய்த உணவை பார்வதி அம்மா தனது மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்த சமயம் பார்த்து வீடு வந்தடைந்தார் வேலுப்பிள்ளை. தனது சொல்படி கேளாத தனது இளைய மகனைக் கண்டதும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர் பல மணி நேரம் கழித்தே வீடுதிரும்பினாராம். இது பிராபாவே தனது தோழர்களிடம் சொல்லிச் சிலாகித்த ஒரு விடயம். "அப்பர் ஒரு சொல்லுத்தானும் பறையேல".
பிரபா குட்டிமணி தங்கத்துரை குழுவில் 1969ல் இணைந்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 15.
1970ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாராநாயக்கா அரசில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் கொண்டுவந்த தரப்படுத்துதல் சட்டம் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டிவிட்டது.
இங்கேதான் சிங்கள இனவாதத்தின் நயவஞ்சகத்தை நாம் உணர வேண்டும். பதியுதீன் தமிழர் மற்றும் முஸ்லீம். தமிழருக்கு எதிரான ஒரு சட்டத்தை தமிழரைக் கொண்டே நிறைவேற்றினார்கள். தமிழர்களை பிளவுபடுத்த இஸ்லாமியர்களை ஒரு கருவியாக பயன்படுத்தும் யுக்தி அப்போதே தொடங்கிவிட்டது, ஈழத்தின் ஒரு பெரும் அவலம் இந்தத் துரோகம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆட்கள் மட்டுமே மாறுகிறார்கள். இனவெறி அடக்குமுறையை தமிழர் மீது பிரயோகிக்க ஒரு ஆயுதமாக மதப்பிணக்கை சிங்களம் கையாண்டு வருகிறது.
இந்த தரப்படுத்துதல் சட்டத்திற்கு தமிழரசுக் கட்சியிலிருந்த இளைஞர்கள் எதிராகத்திரண்டார்கள். பொன்னுதுரை சத்தியசீலன் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார்கள். சிவகுமாரன் அதன் தலைவரானார்.
இந்த சிவகுமாரனே தமிழீழ விடுதலைப்போரில் முதற் தற்கொடையாளியாவார். அவரின் மரண தினம் விடுதலைப்புலிகளால் மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர் பேரவைக்குப் போட்டியாக அமிர்தலிங்கத்தால் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது.
தரப்படுத்துதல் சட்டத்தை அரசியலைப்பில் இணைப்பதற்காக அமைச்சவரவை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக கோல்வின் டி சில்வா நியமிக்கப்பட்டார். இவர்மீது தமிழரசுக்கட்சியினருக்கு மரியாதை இருந்தது. அவர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு நாடு இரு மொழி அல்லது இரு நாடு ஒரு மொழி என்று முழங்கியிருந்தவர் ஆவார்.
இந்த அரசியலமைப்பு மாற்றத்தில் கூட்டாச்சி தத்துவத்தை இடம்பெற வைக்க முடியும் என்று தமிழரசுக்கட்சியினர் உறுதியாக நம்பினர். அதற்கேற்றார் போல் டட்லி சேனநாயகவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திருச்செல்வத்திடம் தமிழர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆசை காட்டப்பட்டது.
தமிழரசுக்கட்சியில் தந்தை செல்வாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த அமிர்தலிங்கத்திடம் இது குறித்து முறையிடப்பட்டது. இன்னொருமுறை சிங்கள இனவாத அரசால் ஏமாற்றப்பட்டால் அது தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பதாக அமையும் என்று கூறப்பட்டது.
அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பிறர் கூறத்தேவையில்லை என்று அமிர்தலிங்கம் சொல்லிவிட்டார். இது தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாக சிங்கள இனவாதத்தின் வலைக்குள் மீண்டும் மீண்டும் விழுவதை உணர்த்துகிறது.
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக ஒரு குழு அமிர்தலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு கூட்டாச்சி சட்டவரவு ஒன்றும் தயாரிக்கப்பட்டது. அதன்படி அயல்நாட்டு உறவுகள், பாதுகாப்பும் சட்ட ஒழுங்கும், குடியுரிமை, குடிவரவு, சுங்கம், அஞ்சல், தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் வான் வழிப்போக்குவரத்து, மின்சாரம் கல்வி மற்றும் சுகாதாரக்கொள்கைகள், நிதிக்கொள்கை உட்பட அனேக அதிகாரங்கள் மத்திய அரசின் கையில் இருக்கும் என்று கூறியது.
கிட்டத்தட்ட எல்லா உரிமைகளும் மத்திய அரசுக்கு, அதாவது சிங்கள அரசுக்கு, இந்த்தியாவிலாவது மாநிலங்களிடத்தில் சட்டம் ஒழுங்கு, காவல் மாநில அரசுகளிடம் உண்டு.
சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக இருக்கும் வட கிழக்கில் நீதிமன்றம் தமிழில் இயங்கும் என்றும் ஏனைய பகுதிகளில் சிங்களத்தில் இயங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிங்கள பெரும்பான்மையினர் இதை முற்றாக நிராகரித்துவிட்டனர்.
அரசியல் நிர்ணய சபை கூட்டாச்சி தத்துவத்தை நிராகரித்துவிட்டு அதிகாரம் குவிந்த ஒற்றை அரசாங்க அமைப்பை 1971 மார்ச்சில் நிறைவேற்றியது. புதிய அரசியலமைப்பின் சட்டத்தின் படி புத்தமதம் அரசாங்க மதமாக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு மே 14 திருகோணமலையில் கூடிய தமிழ்க்கட்சிகள் ஒன்று கூடி தமிழர் ஐக்கிய கூட்டணியை (TUF) ஏற்படுத்தினர். அதன் படி புதிய அரசியலைமைப்புச் சட்டத்தினை முழுதாக நிராகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த அரசியலைமைப்புச் சட்டம் அமுலுக்கு வரும் தினமான மே22 துக்கதினமாக கடைபிடிக்கப்பட்டது. கூட்டணியின் சார்பில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரில் 15 பேர் அந்த நிகழ்வை புறக்கணித்தனர்.ஐந்து பேர் மட்டும் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார்கள்.ஐவரில் ஒருவரான அருளம்பலத்தின் நண்பர் குமரகுலசிங்கத்தை குட்டிமணி-தங்கத்துரை குழு கொன்றது.
இளைஞர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு அமிர்தலிங்கத்திற்கு தரப்பட்டது. புதிய அரசியலைப்புச்சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டாம் என தமிழர் ஐக்கிய கூட்டணித் தலைவர்களை இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அதை நிராகரித்துவிட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். எதை எதிர்த்தார்களோ அதையே ஏற்பதாக அறிவித்துவிட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். நாடாளுமன்ற அவைக்குள் உள்நுழைந்து தமிழர் உரிமைகளை பெற்றுவிடலாம் என்று மறுபடியும் தமிழர்களை ஏமாற்றினர்.
தமிழ்க்கட்சிகளின் தொடர்ச்சியான தவறுகள் இளைஞர்களை ஆயுதப்பாதைக்கு திருப்பியது. அப்படிப்பட்ட பல ஆயுதக்குழுக்களில் ஒன்றுதான் பிரபாகரனின் குழுவும்.
அக்குழு 1972-ம் ஆண்டு மே 22-ம் தேதி புதிய தமிழ்ப் புலிகள்(Tamil New Tigers(TNT)) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.பின்னர் 1976ம் ஆண்டு மே 5ல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உமா மகேஸ்வரன் அதனது தலைவர். பிரபா அதனது இராணுவப் பொறுப்பாளர்.
இந்த காலகட்டத்தில் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு இடையே நெருக்கமான உறவும் இருந்து வந்தது. யாழ்ப்பாண துரையப்பா மைதானத்தில் 1972ம் ஆண்டு செப்டம்பர் 17ல் நடந்த விழா ஒன்றில் பிரபா தலைமையிலான குழு குண்டு வீசியது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இளைஞர்களின் கொதிநிலையை அது உணர்த்துவதாக இருந்தது.
இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தந்தை செல்வா தனது காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். துரையப்பா மைதான குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகம் குட்டிமணி தங்கத்துரையின் மீதும் தமிழ் மாணவர் பேரவையின் மீதும் திரும்பியது. பலர் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாத இளைஞர்களை ஒடுக்கும் பணி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தான் ஏற்படுத்தியிருந்த வலுவான உளவு அமைப்புகளின் துணையுடன் தீவிரவாத இளைஞர்களை வேட்டையாடத் துவங்கினார் பஸ்தியாம்பிள்ளை. சந்தேகம் பிரபாகரன் மீது திரும்பியதும் அவர் வீடு தேடிச்சென்றார் பஸ்தியாம்பிள்ளை ஆனால் அவர் வரும் முன்பே பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை என்பது வரலாறு.
தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் இளைஞர் மன்றத்தால் கட்சி அலுவலக்ம் முன்பு போராட்டம் ஈழவேந்தன் மற்றும் உமா மகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாணவர் பேரவைக்கு போட்டியாக அமிர்தலிங்கத்தால் உருவாக்க்கப்பட்ட அமைப்பு போராடியது அவருக்கு மிகுந்த தர்மசங்கடத்தை தோற்றுவித்தது.
ஆனாலும் அவர் இளைஞர்களை அமைதிப்படுத்தினார். தனிநாடு கோரிக்கையில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதாக உறுதியளித்தார். 1973 ஆண்டு ஜூலையில் நடந்த கட்சி மாநாட்டில் தனிநாடு குறித்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. இளைஞர்கள் உற்சாகத்தோடு திரும்பினர். தனிநாடு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள இளைஞர்கள் மேலும் விரக்தி அடைந்தனர்.
ஆயுதக்குழுக்கள் பல இருந்தாலும் அவைகள் யாவும் தமிழரசுக்கட்சியையும், தந்தை செல்வாவையும், அமிர்தலிங்கத்தையும் மிக உயர்வாக மதித்திருந்தனர். தலைவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டும் இருந்தனர். போராளிக்குழுக்கள் இந்த சமயத்தில் அடிக்கடி தமிழகம் வருவதும் போவதுமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு சிங்கள காவல்துறை அதிகாரி சந்திரசேகரா வின் வருகைக்குப் பிறகு ரத்தக்களறியாக மாறியது. மொத்தம் ஒன்பது உயிர்களைப் பலிவாங்கிய அந்த துயரச் சம்பவத்தை சிறிமாவோ கண்டுகொள்ளவே இல்லை மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் அமைச்சர் குமரசூரியர் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரீகமற்றவராகவே இருந்தார்.
இனத்துரோகிகளான மேயர் ஆல்பிரட் துரையப்பா, குமரசூரியர், சந்திரசேகாராவை தீர்த்துக்கட்ட இளைஞர்கள் முடிவு செய்தனர். ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார். அதற்கு முன்பே சிவகுமாரன் முயற்சி செய்திருந்தும் துரையப்பா தப்பிவிட்டார்.
கோப்பாய் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு தோல்வியுற்ற சிவகுமாரன் காவல்துறையின் கையில் சிக்கிவிடாதிருக்க சயனட் குப்பியைச் சுவைத்து முதல் தற்கொடையாளியானார். ஈழவரலாற்றில் முதல் அரசியல் கொலை இது. அன்று தொடங்கியது பல ஆண்டுகாலம் தொடர்ந்தது. பிரபாகரனோடு இணைந்திருந்த மற்ற மூவர் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள பிரபாகரனின் பெயரும் அவரது புதிய புலிகள் அமைப்பும் வெளிச்சத்திற்கு வந்தன.
துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் முகாம் வவுனியாக்காட்டுக்குள் பூந்தோட்டம் என்னும் பகுதியில் தொடர்ந்தது. பயிற்ச்சிக்குத் தேவையான பணத்தட்டுப்பாட்டை போக்கவும் சிங்கள அரசாங்கம் வரியாக வசூலித்து சிங்கள் நலனுக்கே பயன்படுத்தப்படும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக வங்கிக்கொள்ளைக்கு திட்டமிடப்பட்டது, அது வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்பட்டது. ஆயுதக்குழுவாக விளங்கிய போதும் சுதந்திரத் தமிழ் இன உணர்வு பெயரிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரபாகரன் தன் இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் என்று பெயர் மாற்றம் செய்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு மே 5ம் தேதி துவங்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான சின்னத்தையும் கொடியையும் வடிவமைக்கும் பொருட்டு பிரபாகரன் தமிழகம் வந்தார், ராஜபாளயத்தை சேர்ந்த ஓவியர் பிரபாகரனின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து அதை அமைத்துத் தந்தார். அந்த ஓவியர் முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுற்கு சில காலத்திற்கு பின் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கத்திற்கான கொள்கைகளும் வரையறுக்கப்பட்டன. புகை பிடித்தல், மது அருந்துதல், உடலுறவு வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும், குடும்பத்துடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் அதை விட முக்கியமாக இயக்கத்தை விட்டு வெளியேறுபவர் புதிய இயக்கம் காணக்கூடாது என்பது மிக்கியமாகும். இவைகளை தன் இயக்கத்தின் கட்டுப்பாடாக பிரபாகரன் கொண்டுவருவதற்கு காரணமும் இருந்தது.
இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபியினர் தங்களது சக தோழர்களின் தங்கைகளோடு உறவு கொண்டதும் அதன் காரணமாக நடந்த கருக்கலைப்புகளுமே.
விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த சமயத்தில் செய்தியாளராக இருந்த அனிதா பிரதாப் அவர்களின் கூற்றை கூறலாம். கிட்டத்தட்ட 20 இளைஞர்களுடன் ஒரு இரவு முழுவதும் இருந்த போதும் ஒரு நொடிப்பொழுது கூட நான் ஒரு பெண்ணாக பாதுகாப்பின்மையை உணரவில்லை என்றும் டெல்லி மேல்வர்க்கத்தினருடன் இயங்கும் போது அத்தகைய பாதுகாப்பின்மையை உணர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1977ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும் அந்த ஆண்டு தொடக்கத்தில் ஈழத்தந்தை செல்வா மரணம் அடைந்திருந்தார். தனிநாடு கோரிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த தமிழர் விடுதலைக்கூட்டணி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தனி ஈழக்கோரிக்கையை ஒத்திவைத்தால் எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு அமிர்தலிங்கத்துக்கு வந்தது. அவரும் பயன்படுத்திக்கொண்டார், எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.
இது அமிர்தலிங்கத்தின் இரண்டாவது தவறாகவும் தனது நிலைப்பாட்டில் அவர் தெளிவற்றராகவும் சந்தர்ப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மனிதராகவும் அடையாளம் காணப்பட முக்கியமானதொன்றாகிப்போனது. இறுதில் அது அவரது கொலையில் முடிந்தது.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சி புனித பேட்ரிக் கல்லூரியில் நடைபெற்றது. அந்த சமயத்தில் சீருடை இல்லாமல் சென்ற காவல்துறையினர் உள்நுழைய முயன்ற போது டிக்கெட் வாங்குங்கள் என்று அமைப்பாளர்களால் தடுக்கப்பட்டனர்.
மறுநாள் அவர்கள் போதையேற்றிக்கொண்டு வந்து தகறாறு செய்த போது மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் முகமாக யாழ்ப்பாணக்கடைகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன, கலவரமாக உருவெடுத்தது. இந்தக்கலவரம் இனக்கலவரமாக அங்கு படித்துவந்த சிங்கள மாணவர்களே காரணாமாகும். இந்தக் கலவரம் தலைநகர் கொழும்புவிற்கும் பரவியது.
சிங்கள இனவாத நரி ஜெயவர்த்தனேவின் அனல் கக்கும் பேச்சின் விளைவாக தமிழர் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன, 112 தமிழர்கள் கொல்லப்பட்டனர். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தமிழர்கள் தேடிப்பிடித்து அழிக்கப்பட்டனர். அந்த வகையில் குஜாராத் கலவரத்திற்கும் மோடிக்கும் முன்னோர்களாக ஜெயவர்த்தனாவும் அவரால் வெறியூட்டப்பட்ட சிங்கள இனவாதிகளும் இருந்தனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்தார். ஜெயவர்தனே தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்றும் கிழக்கு பிராந்திய மக்கள் தமிழர் கூட்டணிக்கு வாக்களித்தாலும் அது தனி ஈழத்திற்கான வாக்காக கருதக்கூடாது என்றும் தன் துரோகத்தை பறைசாற்றினார். அவரை அப்புறப்படுத்தும் பணி பிரபாகரனுக்கும் உமாமகேசுவரனுக்கும் வந்தது. இருவரின் தாக்குதலில் தப்பித்தாலும் பின்பு சிறிது காலத்திலே அவர் மரணமடைந்தார். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாஸ்தியம்பிள்ளைக்கு வந்தது.
மன்னாருக்கருகே மறைவாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகளை பிடிப்பதற்காக பஸ்தியம்பிள்ளை வந்தார். அங்கு அவர் செல்லக்கிளியின் நொடி நேர துப்பாக்கித் தாக்குதலில் பலியாகிப் போனார். அவரிடம் இருந்த சப் மிசின் கன்னும் போராளிகளால் கைப்பற்றப்பட்டது. இந்தக்கொலைக்கும், ஆல்பிரட் துரையப்பாவின் கொலைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் பொறுப்பேற்பதாக அறிக்கைவிடப்பட்டது.
அறிக்கையை தட்டச்சு செய்தவர் ஊர்மிளா, இவர் விடுதலைப்புலிகளின் முதல் பெண் உறுப்பினர், விடுதலைப்புலிகளுக்கிடையே முதல் பிளவு உண்டாகவும் காரணமாக அமைந்தவர் இவரே.
ஊர்மிளாவுடன் திருமணத்திற்கு அப்பாற்ப்பட்ட பாலியல் உறவில் உமா மகேசுவரன் ஈடுபட்டிருந்தார். அதனால் அவர் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
தான் நீக்கப்பட்டதை ஏற்காத உமா மகேசுவரன் தன் தலமையில் இருப்பதே உண்மையான இயக்கம் என்றும் கூறினார். அவரது ஆதரவாளர் சுந்தரம் பெருமளவு ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டார். எஞ்சியதை பிரபாகரன் கைப்பற்றினார்.
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment