Labels

Sunday, May 16, 2010

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் - பாகம் ஒன்று



1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வேலையின் நிமித்தம் மீண்டுமொருமுறை மட்டக்களப்பிற்கு மாற்றல் கிடைத்தது.

முன்னதாக இதே போன்றதொரு வேலை நிமித்தமான‌ மாற்றலில் தான் 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரத்துக்கு சென்றார்கள் அவர்கள்.

அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினர்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அதே தெருவில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறு வயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார்.

பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்பேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார் பிரபா.

பின்னர் 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை(இன்றைய மஹஜனாக் கல்லூரி)யில் தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப்பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963ல் தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார்.

முன்னதாக மட்டக்களப்பில் நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்த 1958 இனக்கலவரத்தில் தனது கணவரை இழந்த அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து பிரபா பெற்றுக்கொண்ட ஒரு நல்ல பண்பாகும்.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடியவில்லை.

தனது 3ம்,4ம்,5ம் வகுப்புகளை சிவகுரு வித்தியாசாலையில் கற்ற பிரபா 6ம் வகுப்பை சிதம்பரா கல்லூரியில் பயிலச் சென்றார். அப்போது அறிமுகமானவர் தான் வேணுகோபால் மாஸ்டர். இவரிடம்தான் பிரத்யேக வகுப்பிற்காக பிரபாகரன் போய்ச் சேர்ந்தார். ஏறத்தாழ 7 ஆண்டுகள் அவரிடம் பாடம் படித்தார் பிரபா.

முன்னாள் கைதடி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் சுயாட்சி கழகத்தின் தாபகருமான நவரத்னத்தின் தீவிர ஆதரவாளர் இந்த‌ வேணுகோபால் மாஸ்டர்.

நிராயுதபாணிகளான தமிழர்களுக்கெதிராக ஆயுதத்தை பிரயோகிக்கும் சிங்கள இனவெறி அமைப்பினை ஆயுதம் கொண்டே எதிர்க்கமுடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர்தான் துடிப்புமிக்க இளைஞ‌னாகவிருந்த பிரபாவிற்குள் விடுதலை வேட்கையை மூட்டியவர் என்றால் அது மிகையாகாது.

யாழ்ப்பாணத்திலிருந்த மூன்று ஆதிதிராவிடப்பள்ளிகளை சிங்கள பவுத்த பள்ளிகளாக மாற்றும் நிகழ்விற்கு வருகை தரும் அப்போதய கல்வி அமைச்சர் இரியகோலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவினர் தீவிரமாக இருந்தனர்.

காவல்படை குவிக்கப்பட்ட சூழலில் போராட்டத்தை கைவிடும்படி முன்னணி தலைவர்கள் கேட்டுக்கொள்ள இளைஞர்கள் விரக்திக்குள்ளாகிறார்கள். சிறு சிறு குழுக்களாக வெளியேறுகிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் குட்டிமணி தங்கதுரை. அறுபதுகளில் சாதாரண உணர்வாளர்களாக இருந்த பலர் எழுபதின் மத்தியிலும் எண்பதுகளிலும் ஈழப்போராட்டத்தின் தவிர்க்கமுடியாத அடையாள‌மாக மாற்றம் அடைகிறார்கள்.

இந்தக்கட்டத்தில் இருந்த துடிப்பான இளைஞர்களில் முக்கியமானவர்கள் பெரியசோதி, சின்னசோதி, தனபாலசிங்கம், சிவகுமாரன், சிறிசபாரத்தினம், பிரபாகரன். இவர்களில் வயதில் மிகவும் இளைய‌வர் பிரபாகரன். அதனாலேயே தம்பி என்றும் அழைக்கப்பட்டவர். தம்பி என்னும் சொல்லுக்கு தமிழர் மத்தியில் பிரபாகரன் என்ற அர்த்தம் உண்டு. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழியை மெய்ப்பிக்க வந்தவர் போலும்.

ஈழப்போராட்ட வரலாற்றில் தந்தை செல்வநாயகத்தின் பங்கும் அவரது தமிழரசுக் கட்சியின் பங்கும் மிக முக்கியமானது. மலையகத்தமிழர்கள் உரிமைகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் ஜிஜிபொன்னம்பலத்திடம் இருந்து பிரிந்து வந்து 1949ல் தமிழரசு கட்சியை தொடங்கினார்.

அடிப்படையில் காந்தியவாதியான செல்வநாயகம் இந்தியாவைப் போன்றே காந்திய வழியில் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். கூட்டாச்சி முறையில் தீர்வு காணலாம் என்பதே தந்தை செல்வாவின் எண்ணமாக இருந்தது.

இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் காங்கிரசு கட்சி வகித்ததொரு பாத்திரத்தை தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி வகித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழீழ போராட்டத்த்தின் அனைத்து குழுக்களும் மதித்த ஒரே தலைவர் தந்தை செல்வநாயகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் தொடர்ச்சியான சூழ்ச்சியினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார். சாலமன் பண்டராநாயகே, டட்லி சேனநாயக, ஜெயவர்த்தனா என ஒவ்வொரு சிங்கள அரச தலைவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் தேர்தல்கள் முடிந்த பின் சிங்களர்கள் அந்த ஒப்பந்தங்களை காற்றில் பறக்கவிட்டதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்.

1972ல் தான் தனித் தமிழீழமே இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு தந்தை செல்வா வருகிறார். அதையே வாக்குறுதியாக வைத்து 1975ல் காங்கேசன் துறை பாராளுமன்ற தொகுதியில் அவர் வென்றது தமிழீழ தேசத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கிய நிகழ்வாகும்.

வேலுப்பிள்ளை அவர்களின் மச்சான் ஒருவரின் பெயர் ஞானமூர்த்தி. 1972ஆம் ஆண்டு மே 14ல் இவரது வீட்டில் கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில்தான் தமிழ்க்கட்சிகள் தமிழர் ஐக்கிய கூட்டணியை (TUF) ஏற்படுத்தினர். அதுவே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி(TULF) ஆனது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வல்வெட்டித்துறைப் பொறுப்பாளர் இந்த ஞானமூர்த்தி. ஞானமூர்த்திதான் தனது மகனின் அரசியல் மீதான ஆர்வத்துக்கு காரணம் என்று அவர் மீது வேலுப்பிள்ளைக்கு கடும் கோபம்.

இளம்பராயத்திலேயே அரசியலில் ஈடுபட்டதால் தகப்பனாரின் கோபத்துக்கு ஆளானார் பிரபா. படிக்கும்போது அரசியலுக்கு என்ன வேலை என்று பிரபாவை அவர் பல முறை கடிந்து கொண்டதுண்டு

கடவுள் பக்தி மிகுந்தவரும் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவருமான‌ வேலுப்பிள்ளைக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அதனால் பிரபாவை அவர் தனது குடும்பத்தின் கறுப்பு ஆடு என்று கூட சமயத்தில் திட்டியதுண்டு.

ஆனால் தனது மகன் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கப் போகிறார் என்பதை தனது கனவிலும் நினைக்கவில்லை வேலுப்பிள்ளை. அது நிகழ்ந்தபோது உண்மையிலேயே நொறுங்கித்தான் போனார் அவர்.

1970ல் சிறிமாவோ பண்டாராநாயக்கா அரசில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் கொண்டுவந்த தரப்படுத்துதல் சட்டம் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்க‌ள் மத்தியில் பெரும் கோப‌த்தை தூண்டிவிட்டது.

இங்கேதான் சிங்கள இனவாதத்தின் நயவஞ்சகத்தை நாம் உணர வேண்டும். பதியுதீன் தமிழர் மற்றும் முஸ்லீம். தமிழருக்கு எதிரான ஒரு சட்டத்தை தமிழரைக் கொண்டே நிறைவேற்றினார்கள். தமிழர்களை பிளவுபடுத்த இஸ்லாமியர்களை ஒரு கருவியாக பயன்படுத்தும் யுக்தி அப்போதே தொடங்கிவிட்டது, ஈழத்தின் ஒரு பெரும் அவலம் இந்தத் துரோகம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆட்கள் மட்டுமே மாறுகிறார்கள். இனவெறி அடக்குமுறையை தமிழர் மீது பிரயோகிக்க ஒரு ஆயுதமாக மதப்பிணக்கை சிங்களம் கையாண்டு வருகிறது.

இந்த தரப்படுத்துதல் சட்டத்திற்கு தமிழரசுக் கட்சியிலிருந்த இளைஞர்கள் எதிராகத்திரண்டார்கள். பொன்னுதுரை சத்தியசீலன் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார்கள். சிவகுமாரன் அதன் தலைவரானார். இந்த சிவகுமாரனே தமிழீழ விடுதலைப்போரில் முதற் தற்கொடையாளியாவார். அவரின் மரணதினம் விடுதலைப்புலிகளால் மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொடரும்...

No comments:

Post a Comment