Labels

Saturday, April 2, 2011

ராஜபக்சேக்கு கறுப்பு கொடி: நாம் தமிழர் இயக்கம் அறிவிப்பு



இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:


பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.


இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும். இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? வைகோ



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்ப சிறப்புடன் வரவேற்கப்பட்டு எக்களிப்போடு வலம் வருகிறார்.

தமிழ் இனத்தின் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய ராஜபக்சே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர், ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்க குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே அரசு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக் கூடங்களும், குண்டுவீச்சுக்கு தப்பவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு அழைத்துவந்து, அவருக்கு பாராட்டு கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்து உள்ளது இந்திய அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் ரத்த சொந்தங்களை ஒருவன் அழித்து விட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக் குரல் எழுப்பிய இந்திய அரசு 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு ஒட்டு மொத்தமாக ஈழத் தமிழர் படுகொலையை எதிர்த்து கண்டனமே தெரிவிக்கவில்லை தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?

இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால் தான், இந்திய அரசு இப்போதும் இலங்கை அதிபரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவ தோடு இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்



மும்பையில் நடைபெறும் உலககோப்பை இறுதி போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். இதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியுடன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும். மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாதெனத் தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.


இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.

சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபக்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக்காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அடேல் பாலசிங்கத்தின் தாயார் மரணமடைந்துள்ளார்



தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் துணைவியாரான அடேல் பாலசிங்கத்தின் தாயார் பிரித்தானியாவில் இயற்கை மரண மடைந்துள்ளார்.அமது ஈழ போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்ததேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் ஆனா அடேல் பாலசிங்கம் எமது ஈழ மக்களால் வெள்ளை தமிழச்சி என்று அழைக்கப்படுபவர்.

தேசத்தின் குரலுடன் இணைத்து அவரின் சிந்தனைகளுக்கு துணையாக இருந்து பக்க பலமாக இருந்தவர் அடேல் பாலசிங்கம்.எமது ஈழ போராட்டத்தின் ஆரம்ப கல நிகழ்வுகளை,தனது அனுபவங்களை சுதந்திர வேட்கை என்னும் தனது நூலில் எழுதி ஈழ வரலாறு தெரியாத பல மக்களுக்கும் தெரிய வைத்தவர்.அவரின் தாயார் பிரித்தானியாவில் இன்று மரணமடைந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழ மக்களின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது -பிரதமர் வி.ருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு செவ்வி



இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம் பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள் வேறு திசையிலேயே அமைந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் இது பற்றிய தனது பார்வையையும் புலம்பெயர்ந்த மக்களின் ஏனைய கரிசனைகளையும் சண்டே லீடருக்கான மின்னஞ்சலூடான செவ்வியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கே: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய வகுபாகம் என்ன?

ப: சிங்கள தலைவர்களின் ஒதுக்கிவைக்கும் கொள்கைகளினதும், நாட்டில் நிலைபெற்றுப் பரவியுள்ள இனத்துவேசத்தினதும் விளைவாக தமிழர் தேசம் இலங்கைத் தீவின் அரசியற்செயற்பாடுகளில் பங்குபற்றுவது நடைமுறையில் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் தமக்கான சுதந்திரமான நாடொன்றிலேயே சுதந்திரமாகவும் மானத்துடனும் வாழமுடியும் என்பதை குரூரமான அடக்குமுறையும், தொடர்ந்து ஒடுக்கப்படுதலும் தெளிவாக நிரூபித்துள்ளன. 1977ன் பொதுசன தேர்தலில் தமிழ்மக்கள் தமது விருப்பைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசின் ஜனநாயக வழிமுறையிலமைந்த ஒரு செயற்பாட்டின் மூலமே தமிழரின் இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டம் தீவிரமாக ஆரம்பிப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தமக்கான தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ்மக்கள் அமைதியான முறையில் வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பாக நோக்கப்பட வேண்டும். தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தனியானதும் சுதந்திரமானதுமான இறைமையுள்ள நாடு ஒன்று மட்டுமே வழி வகுக்குமென்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த அரசியற்களம் இல்லாத நிலையிலும், தேசிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, நாட்டிலும், சர்வதேசமட்டத்திலும் வழிமுறைகள் எதுவும் இல்லாத நிலையிலும், தமிழ்மக்களின் சாத்வீக போராட்டமானது காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாக உருமாற்றம் பெற்றது. இக்காலத்தில் எழுந்த தமிழீழ நடைமுறை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு இந்த அரசியற்களத்தை வழங்கியிருந்தது. தமிழீழ நடைமுறை அரசாங்கமும் அது வழங்கிய அரசியற்களமும் அழிக்கப்பட்ட பின்னர் நிலமை முன்னர் இருந்த இடத்துக்கு மீளவும் தள்ளப்பட்டிருக்கிறது.

இச் சூழ்நிலையில், தார்மீக அடிப்படையிலும், நடைமுறைத் தேவையாகவும் நாம் ஒரு அரசியற்களத்தை இலங்கைத்தீவுக்கு வெளியில் உருவாக்குவது தேவையானதாக அமைந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது. இதற்கான அரசியல் வழிமுறை, தமிழரும் தமிழர் அல்லாதவர்களுமான அறிஞர்கள் பலரைக் கொண்ட ஒரு மதியுரைக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. 12 நாடுகளில் நாடு தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அரசியலமைப்பு உருவாக்கல் குழு அமைக்கப்பட்டு அரசியலமைப்பு வரையப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அதன்படி அரசாங்கமும் அமைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலத்தில் தமிழ்மக்களின் போராட்டத்தினை ஜனநாயக இராஜதந்திர வழியில் முன்னெடுப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; செயற்பாடாக அமைந்துள்ளது.

கே: தமிழீழ விடுதலைப்புலிகளை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத அமைப்பாக மீளவும் பட்டியலிட்டுள்ளது. இதுபற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்து என்ன?


ப: பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு இவ்வாறாக ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் பட்டியலிட்டிருப்பதை தமிழ்மக்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநியாயமாகவே பார்க்கிறார்கள். மேலும், உண்மையான நிலையையும் முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. இந்த நிலையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி தமிழ்மக்கள் எம்மை அணுகியுள்ளனர்.

இவ்வாறாக வரைவிலக்கணப்படுத்தியதையும், அதற்கான சட்டவரையறையையும் எதிர்கொண்ட சட்டத்தரணி என்ற அடிப்படையில் நான் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளேன். நீதிமன்றுகள் இவற்றை அரசியல் பிரிவுகளே முடிவெடுக்குமாறு விட்டுவிட்டுள்ளன. அரசியற் காரணங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படும்போது அது சட்டத்தின் உறுதிப்பாட்டைப் பாதிப்பதுடன், அந்த நாட்டு மக்களது சட்டவியல் சுதந்திரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும். இந்த அரசியல் முடிவை மீளாய்வு செய்யுமாறு ஐரோப்பிய யூனியனை நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது.

இன்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தம்மைத்தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். “எமது கடந்தகால செயற்பாடுகள் 60,000 தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியதா? எமது செயற்பாடுகள் கடந்தகாலத்தில் தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க உதவியதா? இல்லாவிட்டால், ஏன் உதவவில்லை? ஏதும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை எவை? எங்கு எப்படி இத் தவறுகள் இடம்பெற்றன?” கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து முன்னோக்கிச் செல்லவேண்டியதன் சிறப்பை மற்றவர்களுக்குப் போதித்து வந்தவர்களே, இன்று தாம் கடந்தகாலப் பார்வையோடு வீணே வாழ்ந்து வருவது மிகவும் கவலைக்குரியது.

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளவும் பட்டியலில் இட்டிருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கே: நீங்கள் பிரபாகரனின் பின்வந்த ’வாரிசு’ என்று பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: தமிழர் விடுதலைப்போராட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பங்களிப்பு தனித்துவமானதும் விசாலமானதுமாகும்.

நான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற பொறுப்பினை மக்கள் எனக்குத்தந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் பிரதமராகவும் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே, சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனிநாட்டினை அடைவதற்காக எனக்கு அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கூடாக நான் அனைத்தையும் செய்வேன்.

கே: நீங்கள் தன்னைத் தானே நியமித்துக்கொண்ட பிரதமர் என்று நோர்வேயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டிவருவதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு ஜனநாயக அமைப்பு. அங்கத்தவர்கள் சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான சர்வதேச தராதரத்தின் படி தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தல் ஆணையாளர்கள் நடுநிலைக்கும் நியாயத்துக்குமான அவர்களின் தராதரத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள். உதாரணமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்கத் தேர்தல்களுக்கு ஆணையாளராக அமெரிக்க அரசின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க் பணியாற்றினார். தேர்தல்கள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மணித்தியாலக்கணக்காக வரிசைகளில் நின்று வாக்களித்தார்கள். பல தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்களைக் கண்காணித்து, அவை நியாயமாகவும் நீதியாகவும் இடம் பெற்றதாக அறிவித்தனர். உலகெங்கும் உள்ள ஊடகங்கள் இத் தேர்தல்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; அங்கத்தவர்கள் அரசியலமைப்பு ஒன்றினை அங்கீகரித்து பிரதமர் உட்பட பல பதவிகளை வகுத்துள்ளனர். நான் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டவர்களான எம் மத்தியில் கொள்கை வேறுபாடுகள் எதுவுமில்லை. ஒவ்வொருவரும் உண்மையாவும், செயற்றிறனுடனும் அர்ப்பணிப்புடனும் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தை இராஜதந்திர முறைகளில் வென்றெடுக்க வெளிப்படையாகவும் அமைதியான வழியிலும் வன்முறைகளுக்கு இடமில்லாத வகையிலும் முயற்சி செய்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்களின் விருப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அங்கத்தவர்கள், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 60,000 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தமக்குள்ள பாரிய பொறுப்பை அறிந்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட இச் சம்பவங்கள் அரசு சம்பந்தப்பட்ட நடைமுறைகள் பற்றியவை என்பதுடன், இவை ஜனநாயக அமைப்புகளில் இயல்பாகவும் சாதாரணமாகவும் இடம்பெறுபவையே. இவை எந்தவகையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைத் தளரவைக்காது என்பதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான எமது செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கமாட்டாது என்பதும் எமது திடமான நம்பிக்கையாகும்.

கே: அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுகளில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து செயற்படுகிறது என்றும், இது பல “குற்றச்செயல்களில்” ஈடுபடுகிறது என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள், நல்லிணக்கக் குழு என்ற ஏமாற்றுச் செயற்பாடுகள் மற்றைய மோசமான குறைபாடுகளைக் காரணங்காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு போன்ற அமைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களோடு; மீண்டும் மீண்டும் தன்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளால்; கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசு வழமைபோல் உலகின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆயினும், ஆதாரங்கள் மிகவும் பலமாக இருப்பதனால், சிறிலங்கா அரசு இந்தமுறை தனது தந்திரங்களில் வெற்றிபெற மாட்டாது.

ஐ.நா. சபையில் பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் குழு தயாரித்த சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கை இந்த மாதம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஐ.நா. பாதுகாப்புசபைக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று நாம் கோரவுள்ளோம்.

அண்மையில் லிபியாவுக்கு எதிராக இந்த இரு சபைகளும் எடுத்த நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு என்ன நடக்கப்போகிறது எனபதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. 60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது.

கே: வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவும், சாதாரண நிலையை உருவாக்கவும் புலம்பெயர்ந்த தமிழர்களது ஆதரவினை வரவேற்பதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ்வாறான ஆதரவு தமக்குக் கிடைக்கும் என்று சிறிலங்கா அரசு உறுதியாக நம்புவதாகவும் அரச பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல எமது பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அங்கு போதிய சுதந்திரம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கும் இவ்வாறான ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளனரா?

ப: வடக்கு கிழக்கில் இன்று சாதாரணநிலை இல்லை. இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். கொலை, சித்திரவதை பாலியல் வல்லுறவு, வன்முறை மூலம் காணாமல் போகச் செய்தல், வன்முறை மூலமான விபச்சாரம் ஆகியவை எங்கும் பரந்துள்ளன. சிறிலங்கா அரசு போரில் வெற்றிபெற்றுவிட்டதாக சொல்லிக்கொள்ளும் அதேவேளை இராணுவ ஆக்கிரமிப்பு நிலைத்திருக்கிறது. மியான்மார் (பர்மா), பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் போல, சிறிலங்காவிலும் இராணுவம் வணிகச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. நிரந்தரமாக வடக்கு கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் நோக்கத்தை சிறிலங்கா கொண்டிருப்பதை இவை போதுமான அளவில் உறுதிப்படுத்துகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் அபிவிருத்தி இடம்பெற முடியும் என நாம் நம்பவில்லை. மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா உண்மையில் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்ற ஆக்கிரமிப்பிலேயே இறங்கியுள்ளது.

சிறிலங்கா அரசு அபிவிருத்தி பற்றி பேசுகின்ற அதேவேளை அதன் நடவடிக்கைகள் வேறுவிதமானவையாக இருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளையும் எல்லா நிறுவனங்களையும் சிறிலங்கா மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் தாம் முதன்மைப்படுத்தும் செயற்திட்டங்களில் பணத்தை செலவிடுவது தடுக்கப்பட்டு, சிறிலங்கா அரசு முதன்மைப்படுத்தும் திட்டங்களுக்கு பணம் திசை திருப்பப்படுவதனால் அது பாதகமாக இருக்கிறது.

சிறிலங்கா அரசில் காணப்படும் மோசமான ஊழலும் இன்னுமொரு பிரச்சினையாக இருக்கிறது. ஊழல்களற்ற நிறுவனங்கள் 10 புள்ளிகள் பெறும் ரான்ஸ்பரன்சி இன்ரநசனலின் அளவுகோலில் சிறிலங்கா 3.2 புள்ளிகளை பெற்று மிகவும் கீழான நிலையில் இருக்கிறது. சிறிலங்காவுக்குக் கிடைக்கும் பெருமளவிலான நிதியுதவி தேவையான மக்களுக்கு போய்ச்சேருவதில்லை. இவற்றிற்கு மேலாக, முடிவுகள் எடுக்கும் உரிமைகள் இல்லாத, அரசியல் சுதந்திரம் அற்ற நிலையில் அபிவிருத்தி இடம்பெற முடியாது என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

நோபல்பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் குறிப்பிட்டது போல விடுதலை என்பது அபிவிருத்திக்கான முக்கியமான பாதையாகவும் அதனது முதன்மையான விளைவாகவும் இருக்கின்றது. ஆகவே எந்தவிதமான அர்த்தமுள்ள அபிவிருத்திக்கும், முதலில் இராணுவம் அகற்றப்பட்டு, பங்குபற்றுபவர்கள் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

கே: சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழரின் முயற்சிகள் எவ்வாறு பயனளிக்கும்?

ப: நான் முன்னர் தெரிவித்து போல, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழ் தேசத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக அமைகின்றனர். இலங்கைத் தீவில் வாழும் தமிழரும், வெளியே வாழ்பவர்களும் ஒன்றே. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி அவர்களுக்கு மறுக்கப்படும்வரை, உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் அச்செயற்பாட்டினைப் பொறுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.

எமது தாயகத்தில் வாழும் மக்களும் அவர்களது அரசியல் தலைவர்களும் தாம் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை முதல், தமது சமூக, பொருளாதார நலனுக்காகவும், தமது வதிவிடத்துக்கான இயல்பான உரிமைக்காகவும், தமிழர் பிரதேசத்தைப் பாதுகாக்கவும்; அன்றாடம் போராட வேண்டியிருக்கிறது.

எமது தேசத்தின் இருப்புக்காகவும், அதன் அடிப்படைப் பாதுகாப்புக்காகவும் இப் போராட்டங்கள் அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. மேலும், கிடைக்கும் ஒவ்வொரு சிறிய இடைவெளியிலும் இவை வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சர்வதேச மட்டத்திலான எமது முயற்சிகளின் விளைவாக இலங்கைத் தீவிலும் அரசியற்களம் விரிவடையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

எமக்கென சுதந்திரமான தனியரசை அமைத்துக்கொள்வதற்கான சிறிலங்கா தீவுக்குள்ளும் வெளியிலுமான எமது போராட்டம் ஒத்தியங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எமது நம்பிக்கையாகும்.

எழுதியவர் மிரியம் அஸ்வர்
சண்டே லீடர் மார்ச் 20, 2011

Friday, April 1, 2011

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு - கையெழுத்து இயக்கம்

''காங்கிரஸ் வேட்பாளரை அவங்க கட்சிக்காரங்களே தோற்கடிப்பாங்க!'' - 63 தொகுதிகளில் சீறும் சீமான்



காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் 'நாம் தமிழர்’ கட்சி, 'காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, 'நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது!

''இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் 'நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். 'இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், 'வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து... பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் 'தொடக்கம்’... காங்கிரஸுக்கு 'அடக்கம்’!

சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்... மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் 'நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி!

இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்!

தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே... அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்... ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?!

காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை... ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை.

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்... விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை... ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது!

நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், 'கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!''

- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

நன்றி : ஜூனியர் விகடன்.