Labels

Thursday, February 10, 2011

தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள்









“வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்” என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகம், த/செ/ஊ/அ/01/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/02/ 2011.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது.

இத்தகைய சூழலில் சிங்கள அரசாங்கம் மற்றும் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை விரும்பாத சக்திகள், எம் மக்களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் போராட்ட நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சூழ்ச்சி வழிகளைக் கையாண்டு வருகின்றன. இதில் முக்கியமானது புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சாயம் பூசி அதனை ஒடுக்க முற்படுவதாகும்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு தமிழர்களின் சுயமான ஜனனாயக எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்காகவே விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளில் சிலரை தம்வசப்படுத்தி அவர்களூடாக புலம்பெயர் தமிழ்மக்களிடம் நிதி சேகரிப்பில் சிறிலங்கா அரசு ஈடுபடுவது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளின் பற்றுச் சிட்டைகளைப் போன்ற பற்றுச்சிட்டைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசு முற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புக்களையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது.

வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சட்டச் சூழலைப் பயன்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை சிங்கள அரசு நசுக்க முற்படுவதனை மக்களாகிய எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆகவே இச்சூழலை மாற்றியமைக்க புலம்பெயர் மக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்கத்தின் தடையை நீக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸ் நாட்டிலும் ‘தமிழர் நடுவம்’ எனும் அமைப்பினால் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை நீக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி இம்முயற்சிகள் வெற்றிபெற உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரியால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Tuesday, February 8, 2011

புலிகள் மீதான தடையை நீக்க என்ன தடை?



விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மீண்டும் ஒருமுறை நீட்டித்திருக்கிறது இந்திய அரசு. 1991 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையைக் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் மேலும் இரண்டாண்டுகள் நீட்டித்திருக்கிறது.

“விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டனர். அதன் முன்னணித் தலைவர் கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி வீரர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுவிட்டனர். இந்தியா, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற உலக நாடுக ளின் உதவியோடு விடுதலைப்புலிகள் இயக்கமே இல்லாமல் செய்துவிட்டோம்” என்கிறது இலங் கை அரசு. தமிழ் மக்களை மட்டுமன்றி, தமிழ் நிலங்களையும் அழிக்கும் வகையில் இப்போது அங்கே சிங்களக் குடியேற்றம் தொடங்கி யுள்ளது

ஆனால் விடுதலைப் புலிகளின் செயல் பாடுகள் அறவே இல்லாத இந்தியாவில் மட்டும், அந்த இயக்கத்திற்குத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ‘வேடிக்கை விநோத வினையாட்டு’ என்று சிறிதளவே செய்தி அறிந்துள்ளவர்களும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள நாடாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் ராஜபக்சேவுக்கு இந்தியா செய்துவருகின்ற உதவிகளில் இதுவும் ஒன்று. விடுதலைப் புலிகள் மீது இந்தியா தடை விதித்த காரணத்தால், உலக நாடுகள் ஒவ்வொன்றாக அந்த இயக்கத்தைத் தடை செய்யத் தொடங்கின. இதன் விளைவு, அந்நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்த நாட்டைவிட்டு உயிரைக்காத்துக் கொள்ள ஓடிவந்தார்களோ, அதே கொலைக்களத்திற்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இராஜபக்சேயின் இனஅழிப்பு வேலையை இந்த விதத்திலும் இந்தியா இலகுவாக்கித் தருகிறது. இல்லாவிட்டால், இல்லை என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன் ?

இலங்கை அரசின் நோக்கமும், இந்தியா வின் நோக்கமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானது தான். தமிழின விரோதப் போக்கு இரண்டு நாடுகளின் தாரக மந்திரமாக இருக்கிறது. எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசைப் பயங்கரவாத அமைப்பு என்று தடைவிதித்து, கடல் கடந்தும் ஈழத்தமிழர்களை அழிக்கத் துடிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் ராஜபக்சேவை, தமிழர்க ளின் வாழ்வோடு விளையாடிய ராஜபக்சேவை காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க அழைத்து வந்தது மத்திய அரசு. இந்தியாவின் தலைமை அமைச்சரோ, தலைவாழை இலை போட்டு விருந்தே வைத்தார். தமிழர்களின் உணர்வுகளை இதை விடக்கொச்சைப்படுத்திட முடியாது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பு சரியா, தவறா என்பதை விசாரிக்கும் ஒரு நபர் நடுவர் மன்றத்தின் விசாரணையின் போது, அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது அங்கீகரிக்கப் பட்ட உறுப்பினர்கள்தான் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியும் என்பது விதி என்று சொல்லப்பட்டது. இலங்கை அரசால் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று அறிவிக்கப் பட்ட பிறகு யார் வந்து வாதாடுவார்கள்? எல்லாம் குழப்பமாக - திட்டமிட்ட குழப்பமாக உள்ளது. ஏதோ அனிச்சை செயல்போல இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் தடை நீட்டிக்கப்பட்டு விடுகிறது.

ஈழத்தில் நடந்து முடிந்த இனப்படு கொலையைத் தொடர்ந்து இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? அங்கே நடந்தது இனப்படு கொலைதான், சர்வதேச போர்விதிகளை இலங்கை அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது, எனவே இராஜபக்சே சகோதரர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டதைப்போல, இந்தியாவும் செயலாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் அமைதி இலங்கைக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து முடித்தது.

இந்தியாவின் நிலைப்பாட்டைத்தான் இலங்கைக்கான அளவுகோலாக உலக நாடுகள் கொண்டுள்ளன. ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சகட்டத்தை எட்டியபோதும் இந்தியாவின் அசைவைப் பொறுத்தே உலக நாடுகளின் நடவடிக்கைகள் அமைந்தன. இந்தியாவே வலியப்போய் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியது, மற்ற நாடுகளும் தாராளமாக, அதிபயங்கர ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கக் காரணமா யிற்று. கடந்த காலம் இப்படி இருக்க, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருப்பதன் மூலம், உலக நாடுகளில் பரவலாக வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது இந்திய அரசு.

இந்தியாவைப் பொறுத்த வரையில், விடுதலைப்புலிகளானாலும் சரி, ஈழத்தமிழர் களின் உரிமைப்போரானாலும் சரி அது தமிழ்நாட்டோடு மட்டுமே தொடர்புடையது, தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது தான் பிற மாநிலங்களின் கருத்தாக இருக்கிறது. எனவேதான், அங்கே நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் கூட அந்த இனப்படுகொலையைக் கண்டிக்க அவை முன்வரவில்லை. ஈழத்தில் நடந்த வினைகளுக்கு எதிர்வினையாற்றியது தமிழ்நாடு மட்டுமே. அதற்காக வழக்குகளைச் சந்தித்ததும், சிறைகளுக் குள் அடைபட்டுக் கிடந்ததும் தமிழ்நாட்டு அரசியல் இயக்கத் தலைவர்களும், உணர்வாளர் களும்தான். விக்ரம் அஜித் சென் - ஐ நீதிபதியாகக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் வாதிடவந்த போதும், அவர்களுடைய வாதங்களுக்குத் தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.

அண்ணா பிறந்தநாளில் ஆயுள்தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுவித்தால், சுப்பிரம ணியசாமி உடனே வழக்குப் போடுகிறார். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள்கைதி களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்ப தால் அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட் டுள்ளதா? ஆனாலும் சம்மனே இல்லாமல் சுப்பிரமணிய சாமியால் ஆஜராக முடிகிறது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக நம்மால் வாதிட இயலவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மான் விடுவிக் கப்படுவதாகத் தடா நீதிமன்ற நீதிபதி கே.தட்சி ணாமூர்த்தி அறிவித்திருக்கிறார். இலங்கைத் துணைத் தூதரகம் மற்றும் இலங்கை அதிகாரிகள் அளித்துள்ள கடிதங்களின் அடிப்படையில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக நாங்கள் நம்புகிறோம். எனவே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. பல்நோக்குக் குழு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே தடா நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு இயக்கத்தின் தலைமையே இல்லை என்று மத்திய அரசின் புலனாய்வுத் துறையே அறிவித்த பிறகு இந்தத் தடை நீட்டிப்பு நாடகம் யாருக்கு உதவுவதற்காக?

புலிகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது, அவர்களின் ஆதரவாளர்களும் வாதங்களை முன்வைக்க முடியாது என்றால் அந்த விசாரணை மன்றமும், இத்தனை அமர்வுகளும் எதற்காக?

இல்லை என்று சொல்லுகின்ற ஒரு இயக்கத்திற்குத் தடையும், தடை நீட்டிப்பும் செய்கின்ற நாடு உலகிலேயே இந்தியாவாகத் தான் இருக்கமுடியும். எந்த விதத்தில் பார்த் தாலும் நியாயமே இல்லாத இந்தத் தடையை இந்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் உலக அரங்கில், இந்தியா ஒரு மக்களாட்சி நாடு என்பது கேள்விக்குள்ளாகி விடும்.

- இரா.உமா

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்.

மாவீரர் நாள் - எப்போது கேட்போம் அந்தக் குரலை!



நவம்பர் 27 - அன்றைய தினம் அந்தப் போராளித் தலைவனின் உரையைக் கேட்க உலகமே காத்துக் கிடக்கும். உலகின் அத்தனை ஊடகங்களும் தென் திசையை நோக்கி அலைவரிசை அதிர்வெண்ணை மாற்றிக் கொள்ளும். தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரைக்காகத்தான் இத்தனை காத்திருப் புகளும். ஆனால் கடந்த ஆண்டு தமிழீழத் தலைவரின் உரை இல்லாமலே கடந்து சென்று விட்டது மாவீரர் நாள்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 அன்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனால் நிகழ்த்தப்பெறும் மாவீரர் நாள் உரை என்பது வெறும் வழமையான உரையன்று. ஈழ விடுதலைப் போரில் இந்தியா உட்பட பிற உலக நாடுகளின் போக்குகள் ஏற்படுத்தி வருகின்ற தாக்கங்கள் குறித்த அரசியல் விமர்சனப் பார்வையுடனும், சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிப் போக்கைக் கண்டித்தும், உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்களின் மனஉறுதியைப் புடம் போடுவது, விடுதலைப்புலிகளின் படைபலம், அரசியல் செயல்பாடுகள், பகையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும், தாய்த்தமிழகத்தின் உணர்வெழுச்சிகளுக்கு நன்றி சொல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செறிவான உரையாகவும் மாவீரர் நாள் உரை அமைந்திருக்கும்.

குறிப்பாக, புலிகளின் அடுத்த கட்டப் போர் நடிவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய பேச்சில் கோடிட்டுக்காட்டுவார் என்பதே பெரும் எதிர்பார்ப்புடன் மாவீரர் நாள் உரையை உலக நாடுகள் கவனிக்கக் காரணம்.

விதைக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்தினர் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர்துயிலும் இடம் இன்று ராஜபக்சேயின் இராணுவத்தினால் சிதைக்கப்பட்டாலும், விதைக்கப்பட்ட விதைகளின் வீரியம் என்றைக்கும் குறைந்துவிடாது. அந்த மாவீரர்களின் உயிர்க்கொடை வீண்போகாது. உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு புது நம்பிக்கையை, ஊக்கத்தைத் தருகின்ற நாள் நவம்பர் 27.

முப்படையுடன் தற்கொடைப் படையையும் கொண்டு விளங்கிய தமிழ் ஈழ அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காமல் இருக்கிறது.

“ ... நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண், நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு ”- தமிழீழத் தேசிய தலைவரின் நம்பிக்கை வரிகளை நெஞ்சில் ஏந்தி காத்திருக்கிறோம் நாமும்.

தாயகப் போரினில்

சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே!

உங்களுக்கு எமது வீரவணக்கங்கள்

- இரா.உமா

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .

நினைவுகள் அழிவதில்லை...



தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்பற்ற தளபதி மாவீரன் கிட்டுவின் நினைவு நாள் சனவரி 16. 1993 ஆம் ஆண்டு மேற்குலக நாடுகள் பங்களித்த சமாதனத் திட்டத்துடன் தன்னுடைய தலைவரைக் காணச் சென்றுகொண்டிருந்த போதுதான், இந்தியக் கடல் எல்லைக்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் கிட்டு தாக்கப்பட்டார். இந்தியக் கடற்படையின் கொடுஞ்செயலால் இந்துமாக் கடலில் வீரமரணத்தைத் தழுவி 18 ஆண்டுகள் ஆகின்றன.

தன்னுடைய 17 ஆவது வயதில் தலைவர் பிரபாகரனோடு கைகோர்த்துக் களம்புகுந்த அந்த மாவீரனுக்குள்தான் எத்தனை பரிமாணங்கள் ! எத்தனை எத்தனை திறமைகள் ! அத்தனையும் தாயக விடுதலைக்காகவே என்பதுதான் அவரின் மூச்சாக இருந்தது. கிட்டுவின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மாசற்ற தலைவன் மீதான கட்டற்ற பாசமும், மரத்தமிழ் வீரமும், மக்கள் மீதும் மண்ணின் மீதும் அவருக்கிருந்த எல்லையற்ற பற்றும் நிரம்பிக் கிடக்கின்றன. குறும்புத் தனமும், கசிந்துருகும் காதலும் அவருடைய வாழ்க்கையை மேலும் அழகானதாக ஆக்கியிருக்கின்றன.

யாழ்க் கோட்டையை முற்றுகையிட்டு, சிங்கள இராணுவத்தை மாதக்கணக்கில் மண்டியிட வைத்த புலிப்படையின் தளபதி, ஒரு குரங்குக் குட்டியை வீட்டிற்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, வெளியே விட மாட்டேன் என்று அடம்பிடித்த செய்தி தெரியுமா?

ஒரு முறை தலைவரோடு தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வினால், காவல்துறை கிட்டு உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்யத் தேடியது. அதனால் அவர்கள் அனைவரும் பாபநாசத்தில் பழ.நெடுமாறன் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் மறைவாகத் தங்க வைக்கப்பட்டனர். ஒரு நாள் குரங்குக் குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார் கிட்டு. குட்டியைத் தேடிவந்த தாய்க்குரங்கு கத்திய கத்தலில் ஒரு குரங்குக் கூட்டமே வீட்டை முற்றுகையிட்டுக் கொண்டது. தோழர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் நீண்ட நேர வற்புறுத்தலுக்குப் பிறகு, விட மனமின்றி அக்குரங்குக் குட்டியை வெளியில் விட்டிருக்கிறார். பிறகு யாழ் தளபதியாக இருந்த காலத்தில் ஒரு குரங்குக் குட்டியை வளர்த்துத் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டு வாசலில் நோய்வாய்ப் பட்டுக் கிடந்த நாயைக் குளிப்பாட்டி, மருந்திட்டு, வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்து அதை மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவருடைய பிரிவைத் தாங்க மாட்டாமல் உணவுண்ணாமல் அந்த நாய் இறந்துபோனது.

எவ்வுயிரும் துன்புறுவதைப் பார்க்கச் சகியாதவன்தானே போராளியாக இருக்க முடியும். பகைவனுக்கும் அருளிய நன்னெஞ்சத்தையும் பார்ப்போம்.

யாழ் கோட்டை முற்றுகையின் போது, சிங்கள இராணுவத்தின் கையிருப்பில் இருந்த குடிதண்ணீர், விறகு தீர்ந்துபோனது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, குடிதண்ணீரையும், இரண்டு லாரிகளில் விறகையும் அனுப்பி வைத்தார் கிட்டு. அதோடு தன் அன்பினை வெளிப்படுத்த ஒரு கூடை மாம்பழங்களையும் அனுப்பி வைத்தார்.

என்ன செய்தும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆயுத மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கு, அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற குறள் மொழி எப்படிப் புரியும்.

தமிழீழக் குழந்தைகள் அவரை எப்படி அழைப்பார்கள் தெரியுமா ‡ கிட்டு மாமா என்றுதான் அழைப்பார்கள். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவர் வரும்போது மாமா மாமா என்று அன்போடு ஓடிவரும் பிள்ளைகளை வாரியணைத்து ஆசைதீரக் கொஞ்சாமல் அவர் போவதில்லை. நிற்காத குண்டுமழைக்கும், ஓயாத ய­ல் அடிகளுக்கும் நடுவில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் சரணாலயம் அமைத்தார்.

போராடிக்கொண்டே கற்றுக் கொண்டும் இருந்தார் கிட்டு. ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கையின்போது, மெக்சிகோ ஓவியர் ஒருவரிடம் தூரிகை வித்தையையும் கற்றுக்கொண்டார். பிகாசோ ஓவியங்களின் தீவிரமான ரசிகர். சிறந்த புகைப்பட நிபுணராகவும் விளங்கினார்.

சென்னை மத்திய சிறையில் இருந்த படியே அவர் எழுதிய ஈழப்போர் நிலவரம் பற்றிய தொடர், கிட்டுவின் டைரி என்னும் பெயரில் தேவி இதழில் வெளிவந்தது. பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் முழுமையான வெற்றியைப் பெற முடியாது என்று சொல்வார் தந்தை பெரியார். அதனால்தான் பெண்கள் அதிகம் பேர் படிக்கக் கூடிய பத்திரிகையான தேவியில் தங்களுடைய விடுதலைப் போர் குறித்தப் பதிவுகளை எழுதினார். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகப் பொறுப்பாளராக இருந்த காலத்தில், எரிமலை, உலகத்தமிழர், சுதந்திர தாகம் போன்ற செய்தி இதழ்களை நடத்தியிருக்கிறார். அந்நாட்டவருக்கு தன் நாட்டின் நிலையை உணர்த்திட, ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார். இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், அதைத் தமது விடுதலைப் போராட்டத்திற்கான களமாக மாற்றிய பன்முகக் கலைஞன் கிட்டு.

வீரமும் காதலும் இரண்டறக் கலந்தது தமிழர் வாழ்வு. அகமும் புறமும் கொண்டவை சங்கத் தமிழ் இலக்கியங்கள். இரண்டும் சங்கமித்த இடம் ஈழப்போராட்டக் களம் என்றால் மிகையாகாது.

தம்பி ஜெயத்தின் கல்லறை மீது வைக்கப்பட்ட புல்லாங்குழல் உயிர்சுரக்கும் காதலின் சாட்சி. களம் பல கண்ட கிட்டுவின் காதலும் ஆழமான காவியம்தான்.

ஒரு முறை மாத்தையாவுடன் தன் அன்பிற்கினிய சிந்தியாவின் வீட்டிற்குச் சென்றபோது,

“தங்கச்சி! உன்னைப் பார்க்காமல் இவனால் இருக்க முடியவில்லை. தினமும் உன்னைத் தேடி வந்து விடுகிறான்”

“இவளையா நான் தேடி வருகிறேன். தேநீர் குடிக்கக் காசிருப்பதில்லை. இங்கே வந்தால் காசில்லாமல் தேநீர் குடிக்கலாம் என்றுதான் வருகிறேன்”

காதலர்களுக்கே உரிய சீண்டல்கள் இருந்தாலும் கடமையோடு கட்டுண்ட காதல் அது.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கூடப் பொதுவுடைமைச் சிந்தனை இருக்கும். அப்படித்தான் சிந்தியாவிற்குக் கிட்டு எழுதிய கடிதங்களும். காதலிக்கு எழுதும் கடிதமே ஆனாலும் தாயகக் கடமையே முன்னிற்கும்.

“நானும் நீயும் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, வளர்ப்பது மட்டும் வாழ்க்கையாக முடியாது. எமது வாழ்க்கைக்கு நாமேதான் அர்த்தத்தைத் தேடவேண்டும். நான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நீயும் தேட வேண்டும்”

அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டார்கள்.

அக்னிக் குஞ்சுகளாய் அவர்களின் நினைவுகளை அடைகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுப்போம். வெந்து தணியட்டும் காடு.விடியலைப் பார்க்கட்டும் நாடு!

- இரா.உமா

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தெற்கு சூடான் அங்கீகாரம்



சூடான் நாட்டின் அடக்குமுறைக்கு எதிராகச் ‘ சூடான் மக்கள் விடுதலை இயக்கம் ’ நடத்தி வந்த விடுதலைப் போராட்டம், வெற்றி முனையில் முடிவுக்கு வந்திருக்கிறது.

சூடானில் தெற்கு சூடான் தனிநாடாக வேண்டும் என்று ஒரு நெடிய போராட்டத்தை சூடான் மக்கள் இயக்கம் நடத்தி வந்தது. இந்தப் போராட்டத்தில் 20 இலட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பசி, பட்டினி என்றும், மருத்துவ வசதி இன்றியும் கொடுமைக்கு ஆளான தெற்கு சூடான் மக்கள் கொத்துக் கொத்தாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் மக்கள் விடுதலைப் போராட்டம் என்றும் தோற்றதில்லை என்பதைத் தனிநாடாகும் தெற்கு சூடான் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது. தெற்கு சூடான் தனிநாடு என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ‘ நியூயார்க் டைம்ஸ் ’ இதழுக்கு அளித்த நேர்காணலில், “ இலட்சக் கணக்கான சூடானிய மக்கள், தம் விதியைத் (தனிநாடு) தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

இச்செய்தியை வரவேற்றுள்ள சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஏற்ப, இறையாண்மையுள்ள தமிழீழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்டமைக்கு, அறுதிப்பெரும்பான்மை மக்கள் வாக்களித்து, தனிஈழம் என்பதை ஈழத்தமிழர்கள் உறுதி செய்தார்கள்.

ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் காட்டிய வீரமும், போர் உத்தியும் சிங்கள இனவெறி அரசை நடுங்கச் செய்தது மட்டுமன்று, உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.

என்றாலும் தனித்து வீரம் காட்டிப் போராடிய விடுதலைப் புலிகளை நேர்கொள்ள முடியாத கோழை இராஜபக்சே, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் உதவியுடன் ஈழ மக்களைப்படுகொலை செய்து வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்கிறான்.

சூடானின் அடக்குமுறைக்கும், சிங்கள இலங்கை அரசுக்கும் ஆதரவாகவும், பாது காவலனாகவும் செயல்பட்ட சீனாவையும் மீறித் தெற்குச் சூடான் விடுதலை பெறுகிறது. சூடானின் முதல் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழீழம் நாளை விடுதலை பெறும் என்பதற்கான அடையாளம் இது.

சூடான் நாட்டின் அடக்குமுறைத் தலைவர் பசீர், சூடான் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இராஜபக்சேவும் ஈழமக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலை குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.

தவிர, 2009 ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரத்தில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கான, தம் பிரதிநிதி டொமாக் வால்லு ஆச்சே வை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. இன்று நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதிகள் தெற்கு சூடான் விடுதலை நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழீழப் பிரதிநிதிகளை சூடான் மக்கள் விடுதலை இயக்க உயர் அதிகாரிகள் வரவேற்க இருக்கிறார்கள். அவ்விழாவில் பங்கேற்க வரும் பிற நாடுகளின் தலைவர்களை ஈழப்பிரதிநிதிகள் சந்திக்க இருக்கிறார்கள்.

இது கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் ஐயமில்லை.

விடுதலை பெறும் தெற்கு சூடானை வாழ்த்தி வரவேற்போம் ! ஈழத்தின் விடுதலையை எதிர்பார்ப்போம் !

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன்



இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன்,


உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன்.


அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வாக்குவாதம் நிறைந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தேன். அது எனக்கு நியாயமானதாகத் தெரிந்தது. அந்த நிபுணர் குழு இன்னமும் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்கவில்லை, அது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகின்றனர்.


குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். அதுவே நீதியின் கொள்கை என்று பான் கி மூன் கூறியுள்ளார்.