Tuesday, March 29, 2011
காவல்தெய்வம் பிரபாகரனின் வருகைக்காக தமிழீழ மக்கள் காத்திருக்கிறார்கள் - பத்மா ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி
10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்… அடையாள அட்டை இல்லாமல் நகரவே முடியாது என்ற திகில் சூழலில் இருக்கிறது இலங்கை. இவ்வாறு ம.தி.மு.க-வின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளரான க.பத்மா வார சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தமிழ்ச் சங்கம், கலாசார பண்பாட்டு இயக்கம், பெரிய கோயில் மீட்புக் குழு ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் பத்மாவிடம், இலங்கைப் பயண அனுபவங்களை ஜூனியர் விகடன் நிருபர் கேட்டபோது பின்வருமாறு விபரிக்கிறார்.
10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்… அடையாள அட்டை இல்லாமல் நகரவே முடியாது என்ற திகில் சூழலில் இருக்கிறது இலங்கை.
ஆனாலும், புலித் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறப்பதற்கு ஆறு நாட்கள் முன், தன்னந்தனியாக சென்று அவரை சந்தித்துத் திரும்பியிருக்கிறார், ம.தி.மு.க-வின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளரான க.பத்மா.
தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழர் மேல் எனக்குப் பேரன்பு உண்டு. அந்த உணர்வால்தான் ம.தி.மு.க-வில் இணைந்தேன். இதற்கு முன்பு 84, 86-ம் ஆண்டுகளில் இலங்கை சென்றேன்.
இப்போது போர் முடிந்த சூழலில் எம் மக்கள் அங்கே எப்படி இருக்கிறார்கள், தற்போதைய நிலை என்ன, அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
மேலும், பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிய கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. அந்த அன்னையின் முகத்தை ஒரு முறையேனும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உந்தித் தள்ளவேதான், ஜனவரி 27-ம் தேதி இலங்கைக்குச் சென்றேன்.
எப்படி விசா வாங்கினீர்கள்?
கொழும்பில் உள்ள என் உறவினர்களைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லித்தான் விசா பெற்றேன். வவுனியாவில் நான் சந்தித்த ஒரு உணவு விடுதியின் உரிமையாளருக்கு யாழ்ப்பாணத்தில்தான் வீடும் குடும்பமும் இருந்தது. அங்கே போவதாகச் சொல்லி எப்படியோ அனுமதி வாங்கி, யாழ்ப்பாணம் சென்று இரண்டு நாட்கள் தங்கினேன்.
எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம்?
ஒரு காலத்தில் பரந்து விரிந்த வீடுகளும் அழகிய கோயில்களும் வயல்வெளிகளுமாகக் காட்சியளித்த இடங்கள், இப்போது இராணுவம் குடியிருக்கும் இடங்களாகவே இருக்கின்றன.
மண் குவியல், கல் குவியல், பனைமரக் குவியல்… என்று எது இருந்தாலும், அதற்கு பின்னே இருக்கும் இராணுவத்தினரின் துப்பாக்கி நம்மைக் குறிபார்த்துக்கொண்டே இருக்கிறது!
முன்பு குடும்பங்கள் இருந்த இடத்தில் எல்லாம், இப்போது முள் செடியின் விதைகளைத் தூவித்தூவி, காடாக மாற்றுகிறார்கள் சிங்களக் காடையர்கள்.
அநாதைக் குழந்தைகளும், பிள்ளைகளை இழந்த முதியோர்களும் விரவிக்கிடக்கிறார்கள். அநாதைகள்போல் அவல வாழ்வுதான் வாழ்கிறார்கள் நம் சொந்தங்கள்.
பார்வதி அம்மாளை சந்தித்தீர்களா?
எப்படி வல்வெட்டித் துறை சென்று அம்மாவைப் பார்ப்பது என்று யாழ்ப்பாணத்தில் கவலையுடன் இருந்த என்னை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் தந்தைதான் கடந்த மாதம் 16-ம் தேதி வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்!
எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி… மயக்கம் வந்துவிட்டது என்று நாடகமாடி, பார்வையாளர் நேரமான மதியம் 12 மணிக்கு அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தோம்.
காவலுக்கு இருந்த இராணுவத்தினர் நல்ல வேளையாக என்னைக் கேள்வி எதுவும் கேட்கவில்லை. சரசரவென உள்ளே நுழைந்து, தாதியிடம் அம்மா என்று கேட்பதற்குள் 3-ம் நம்பர் வார்டு என்றார்.
அங்கே பொதுப் படுக்கை அறையில் இருந்த எட்டு படுக்கைகளில் ஒன்றில், அந்த வீரத் தாய் படுத்துக் கிடந்தார். ஓடோடிப்போய் அவரது கால்களைக் கட்டிப்பிடித்துக் கதறினேன்.
கால்கள் ஐஸ் போல ஜில்லிப்புடன் இருந்தன. தாதிப் பெண் ஓடோடி வந்து என்னை ஆறுதல்படுத்தி நீங்கள் அவருக்கு உறவா? என்றார். ஆமாம், அவரின் மகள் என்றேன்.
என் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அவர், அம்மாவின் காதில் அம்மா! உங்கள் மகள் வந்திருக்கிறார் என்று சொன்னார். அவ்வளவு நேரம் மூடியே இருந்த அம்மாவின் விழிகள் மெள்ளத் திறந்தன. அந்த விழிகளின் கடையோரத்தில் நீர்க்கசிவு.
கண்களைத் துடைத்துவிட்டு தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்தேன். அப்படியே கண்களை மூடிக்கொண்டார் அம்மா. பிறகு உலகத் தமிழர்களின் நாயகனைப் பெற்றெடுத்த அந்த வயிற்றில் என் முகம் பொதித்து, நெடு நேரம் ஆசை தீர தாய்மையின் பெருமையை அனுபவித்தேன்.
என் வாழ்க்கையின் பயனைப் பெற்றுவிட்ட திருப்தியோடு கொழும்பு திரும்பி, இந்தியாவுக்கு வந்தேன். நான் இந்தியா வந்த ஆறாம் நாள் அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது.
அங்கு உள்ள தமிழர்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன?
நம் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து தங்கள் ஈழக் கனவைத் தகர்த்துவிட்டதாகத்தான் அனைவருமே சொல்கிறார்கள்.
அவர்களை அழித்தொழிக்க இலங்கை அரசுக்கு இந்தியா செய்த உதவிகளைப் பட்டியலிடும் அவர்கள், இந்தியா தலையிடாமல் இருந்திருந்தாலே, ஈழம் பெற்றிருப்போம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
இன அழித்தொழிப்பு நடந்த வேளையில் அதை உண்மையாகத் தடுக்க முனையாமல், கடிதம்… உண்ணாவிரதம் என்று நாடகங்கள் நடத்திய கருணாநிதி மீது அவர்களுக்குக் கடுமையான கோபம்.
வல்வெட்டித்துறையில் இருக்கும் பிரபாகரனின் வீட்டுக்கும் போனேன். அங்கு முள்வேலிக்குள் கையைவிட்டு ஒரு பிடி மண் எடுத்துவந்தேன். அதை யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் திருநீறாகக் கருதி பூசிக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் பூசிவிட்டனர்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே உறுதியாக நம்புகிறார்கள். தங்கள் காவல் தெய்வம் வரும் என்று காத்திருக்கிறார்கள், அப்போது மீண்டும் இலங்கை செல்ல நானும் காத்திருக்கிறேன்! என்றார் பத்மா.
நன்றி - ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment