Labels

Wednesday, March 2, 2011

விஜய் நம்பியார் ஒரு போர்க் குற்றவாளி?! - சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு







2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரண​டைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.

தமிழீழத் தலைவர்களை சரணடைவதற்காக வெளியே வரும்படி அழைத்​த​வர், ஐ.நா. பொதுச் செய​லாளர் பான் கி மூனின் அலுவலக தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார். அதனால், 'அவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறார்’ என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'இனப் படுகொலைக்கு எதிரான அமெரிக்காவில் உள்ள தமிழர்கள்’ என்ற அமைப்பும், 'ஸ்விட்சர்லாந்து ஈழத் தமிழர் கவுன்சில்’ என்ற அமைப்பும் கூட்டாகச் சேர்ந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளன.

இலங்கையில் நடந்த இனப் படுகொலையை மூடி மறைப்பதில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிந்தோ தெரியாமலோ, பெரும் பங்கு வகித்திருப்பதாக சர்வதேசத் தமிழர்கள் மத்தியில் நிலவி வரும் சந்தேகத்​துக்கு வலு சேர்ப்பதாக இந்த வழக்கு அமைந்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்குக்காக முக்கியமான குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் தொடர்பு​கொண்டு பேசியபோது, அவர்களுடைய பாது​காப்புக்கு உறுதி அளித்திருக்கிறார். விஜய் நம்பியாரின் உறுதி​மொழியை நம்பி வந்த தலைவர்கள் அனைவரும் கூண்டோடு சுட்டுக் கொல்​லப்பட்டு இருக்​கிறார்கள் என்றும் உறுதியாக நம்பப்படுவதாக இன்னர் சிடி பிரஸ் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அல் ஜசீரா என்ற அரபுத் தொலைக்​காட்சிக்கு விஜய் நம்பியார் அளித்த பேட்டியில், ''மகிந்தா ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்கள மருத்துவர் பலித கோஹனே ஆகியோர், சரணடைய வரும் புலிகள் அனைவரும் போர்க் கைதிகளுக்கு உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்த​னர்!'' என்று கூறியிருக்கிறார். மேலும் அதே பேட்டியில், இலங்கை அரசைத் தொடர்புகொண்டு புலிகளின் உயிருக்கு அரசு அளித்த உத்தரவாதத்தை உறுதி செய்துகொண்ட​தாகவும் தெரிவித்து உள்ளார்.

இத்தனை உறுதிமொழிகளுக்குப் பின்னரும் எப்படி இப்படி ஒரு படுகொலை நடந்தது என்ற வினாவுக்கு, ''தலைவர்கள் இலங்கை ராணுவத்​திடம் சரணடைவதை விரும்பாத விடுதலைப் புலிகள் ராணுவத்துடன் போரிட்டிருக்கலாம். அப்போது நடந்த சண்டையில் சரணடைய வந்த புலித் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம்...'' என்று நம்பியார் கூறியுள்ளார்.

''இது உங்கள் அனுமானம்தானே... நடந்த உண்மை என்ன?'' என்ற கேள்விக்கு விஜய் நம்பியார் தெளிவான பதில் கொடுக்காமல் மழுப்பிவிட்டார்.

இந்த வழக்கில் விஜய் நம்பியாருடன் சேர்த்து ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்களவரும் டாக்டருமான பலித கோஹனேவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணி​யாற்றியவர். இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்​பட்டு இருப்பதால், ஆஸ்திரேலிய அரசாங்கமும், உயர் அதிகாரிகளும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

ராஜபக்ஷேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது, உலகத் தமிழர்கள் வைத்​திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து​கொண்டே வருகிறது. அதனால் 'நான் நேர்மையானவன்’ என்று உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்!

- மலைமகன்

இவர்தான் நம்பியார்!

கேரள நம்பியார், தமிழர்களுக்கு மட்டும் வில்லனாக விளங்கவில்லை. உரிமை கேட்டுப் போராடுகிற அனைத்து மக்களுக்கும் எதிரியாகவே செயல்படுகிறார். விஜய் நம்பியாரை டிசம்பர் 2010-ல் பர்மாவுக்கான சிறப்புத் தூதராக பான் கி மூன் நியமித்தார். இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பர்மா மக்கள் குழுவினர், ''நம்பியார், பர்மா அரசாங்கத்துடன் இணைந்து ராஜபக்ஷேவுடன் நடத்திய இனப் படுகொலையை அரங்கேற்றிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே அவரை மாற்ற வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த குழுவினர் சார்பாக மார்க் ஃபார்மனர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா-வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லையல் கிராண்ட், ''பர்மாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பதவியில் இருந்து நம்பியாரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்!'' என்று ஆதரவுக் குரல் எழுப்பி இருக்கிறார்.

* நன்றி : ஜூனியர் விகடன் 06-மார்ச் -2011

No comments:

Post a Comment