Tuesday, March 29, 2011
அதிமுக கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய பின்னணியில் ராஜபக்சே
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, கர்நாடக தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஜெயலலிதாவிடம் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.
21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ”அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்று பழைய ராகம் பாடினர்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள்.
இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ”நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்” என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.
இப்படி வைகோவை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.
சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள ‘உதவி’ தான் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து உதவும் கர்நாடக தொழிலதிபர்.
விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறுவனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.
நன்றி : புதினம் நியூஸ்.காம்
நாயைச் சுட்டுப்போட்ட நாய்களுக்கு சென்னை கடற்கரையில் செருப்படி
தமிழீழ அன்னை பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் அஸ்தி சென்னைக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர் புடைசூழ கரைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி 22.03.2011 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கடலில் கரைக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டனர். சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பிடித்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக் கொடிகளும் பறந்தன.
மாலை 5.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தனர். அவர்களோடு கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோரும் கலந்துக்கொள்ள, பார்வதி அம்மாளின் படத்துடன் பெரும் திரளாய் கடலை நோக்கிச் சென்றனர்.
கடல் நீரில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைக்கப்படும்போது, பார்வதி அம்மாள் புகழ் வாழ்க என்று உரத்த குரலில் வைகோ முழக்கமிட, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் முழக்கமிட்டனர்.
இந்நிகழ்ச்சி கடற்கரையில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று வல்வை ஊறணிச் சுடலையில் அன்னையின் ஈம நெருப்பில் நாயைச் சுட்டுப்போட்ட நாய்களுக்கு மானத் தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் கூடி செருப்படி போட்டார்கள் என்றார் உணர்வாளர் ஒருவர். ம.தி.மு.க செயலாளர் வை.கோ, பழ. நெடுமாறன், காசி. ஆனந்தன், புகழேந்தி உட்பட ஏராளமான தன்மானம் மிக்க தமிழர்கள் சென்னை மெரீனாவை நிறைத்தனர்.
எல்லாம் இழந்து ஈழத் தமிழினம் நாதியற்று உலகப் பந்தில் நிற்கிறது. வட இந்தியர் மோசம் செய்துவிட்டார்கள், தென்னிந்திய ஆட்சியாளர் பதவிக்கு விலை போய்விட்டார்கள் என்ற கடும் விமர்சனங்கள் ஈழத் தமிழர் மத்தியில் உருவாகியிருக்கும் வேளையில் இந்த நிகழ்வு சிறிய ஆறுதல் தருவதாக இருந்ததாக சென்னையில் இருந்து தமிழ் உணர்வாளர்கள் கூறுகிறார்கள்.
காவல்தெய்வம் பிரபாகரனின் வருகைக்காக தமிழீழ மக்கள் காத்திருக்கிறார்கள் - பத்மா ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி
10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்… அடையாள அட்டை இல்லாமல் நகரவே முடியாது என்ற திகில் சூழலில் இருக்கிறது இலங்கை. இவ்வாறு ம.தி.மு.க-வின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளரான க.பத்மா வார சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தமிழ்ச் சங்கம், கலாசார பண்பாட்டு இயக்கம், பெரிய கோயில் மீட்புக் குழு ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் பத்மாவிடம், இலங்கைப் பயண அனுபவங்களை ஜூனியர் விகடன் நிருபர் கேட்டபோது பின்வருமாறு விபரிக்கிறார்.
10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்… அடையாள அட்டை இல்லாமல் நகரவே முடியாது என்ற திகில் சூழலில் இருக்கிறது இலங்கை.
ஆனாலும், புலித் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறப்பதற்கு ஆறு நாட்கள் முன், தன்னந்தனியாக சென்று அவரை சந்தித்துத் திரும்பியிருக்கிறார், ம.தி.மு.க-வின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளரான க.பத்மா.
தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழர் மேல் எனக்குப் பேரன்பு உண்டு. அந்த உணர்வால்தான் ம.தி.மு.க-வில் இணைந்தேன். இதற்கு முன்பு 84, 86-ம் ஆண்டுகளில் இலங்கை சென்றேன்.
இப்போது போர் முடிந்த சூழலில் எம் மக்கள் அங்கே எப்படி இருக்கிறார்கள், தற்போதைய நிலை என்ன, அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
மேலும், பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிய கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. அந்த அன்னையின் முகத்தை ஒரு முறையேனும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உந்தித் தள்ளவேதான், ஜனவரி 27-ம் தேதி இலங்கைக்குச் சென்றேன்.
எப்படி விசா வாங்கினீர்கள்?
கொழும்பில் உள்ள என் உறவினர்களைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லித்தான் விசா பெற்றேன். வவுனியாவில் நான் சந்தித்த ஒரு உணவு விடுதியின் உரிமையாளருக்கு யாழ்ப்பாணத்தில்தான் வீடும் குடும்பமும் இருந்தது. அங்கே போவதாகச் சொல்லி எப்படியோ அனுமதி வாங்கி, யாழ்ப்பாணம் சென்று இரண்டு நாட்கள் தங்கினேன்.
எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம்?
ஒரு காலத்தில் பரந்து விரிந்த வீடுகளும் அழகிய கோயில்களும் வயல்வெளிகளுமாகக் காட்சியளித்த இடங்கள், இப்போது இராணுவம் குடியிருக்கும் இடங்களாகவே இருக்கின்றன.
மண் குவியல், கல் குவியல், பனைமரக் குவியல்… என்று எது இருந்தாலும், அதற்கு பின்னே இருக்கும் இராணுவத்தினரின் துப்பாக்கி நம்மைக் குறிபார்த்துக்கொண்டே இருக்கிறது!
முன்பு குடும்பங்கள் இருந்த இடத்தில் எல்லாம், இப்போது முள் செடியின் விதைகளைத் தூவித்தூவி, காடாக மாற்றுகிறார்கள் சிங்களக் காடையர்கள்.
அநாதைக் குழந்தைகளும், பிள்ளைகளை இழந்த முதியோர்களும் விரவிக்கிடக்கிறார்கள். அநாதைகள்போல் அவல வாழ்வுதான் வாழ்கிறார்கள் நம் சொந்தங்கள்.
பார்வதி அம்மாளை சந்தித்தீர்களா?
எப்படி வல்வெட்டித் துறை சென்று அம்மாவைப் பார்ப்பது என்று யாழ்ப்பாணத்தில் கவலையுடன் இருந்த என்னை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் தந்தைதான் கடந்த மாதம் 16-ம் தேதி வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்!
எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி… மயக்கம் வந்துவிட்டது என்று நாடகமாடி, பார்வையாளர் நேரமான மதியம் 12 மணிக்கு அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தோம்.
காவலுக்கு இருந்த இராணுவத்தினர் நல்ல வேளையாக என்னைக் கேள்வி எதுவும் கேட்கவில்லை. சரசரவென உள்ளே நுழைந்து, தாதியிடம் அம்மா என்று கேட்பதற்குள் 3-ம் நம்பர் வார்டு என்றார்.
அங்கே பொதுப் படுக்கை அறையில் இருந்த எட்டு படுக்கைகளில் ஒன்றில், அந்த வீரத் தாய் படுத்துக் கிடந்தார். ஓடோடிப்போய் அவரது கால்களைக் கட்டிப்பிடித்துக் கதறினேன்.
கால்கள் ஐஸ் போல ஜில்லிப்புடன் இருந்தன. தாதிப் பெண் ஓடோடி வந்து என்னை ஆறுதல்படுத்தி நீங்கள் அவருக்கு உறவா? என்றார். ஆமாம், அவரின் மகள் என்றேன்.
என் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அவர், அம்மாவின் காதில் அம்மா! உங்கள் மகள் வந்திருக்கிறார் என்று சொன்னார். அவ்வளவு நேரம் மூடியே இருந்த அம்மாவின் விழிகள் மெள்ளத் திறந்தன. அந்த விழிகளின் கடையோரத்தில் நீர்க்கசிவு.
கண்களைத் துடைத்துவிட்டு தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்தேன். அப்படியே கண்களை மூடிக்கொண்டார் அம்மா. பிறகு உலகத் தமிழர்களின் நாயகனைப் பெற்றெடுத்த அந்த வயிற்றில் என் முகம் பொதித்து, நெடு நேரம் ஆசை தீர தாய்மையின் பெருமையை அனுபவித்தேன்.
என் வாழ்க்கையின் பயனைப் பெற்றுவிட்ட திருப்தியோடு கொழும்பு திரும்பி, இந்தியாவுக்கு வந்தேன். நான் இந்தியா வந்த ஆறாம் நாள் அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது.
அங்கு உள்ள தமிழர்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன?
நம் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து தங்கள் ஈழக் கனவைத் தகர்த்துவிட்டதாகத்தான் அனைவருமே சொல்கிறார்கள்.
அவர்களை அழித்தொழிக்க இலங்கை அரசுக்கு இந்தியா செய்த உதவிகளைப் பட்டியலிடும் அவர்கள், இந்தியா தலையிடாமல் இருந்திருந்தாலே, ஈழம் பெற்றிருப்போம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
இன அழித்தொழிப்பு நடந்த வேளையில் அதை உண்மையாகத் தடுக்க முனையாமல், கடிதம்… உண்ணாவிரதம் என்று நாடகங்கள் நடத்திய கருணாநிதி மீது அவர்களுக்குக் கடுமையான கோபம்.
வல்வெட்டித்துறையில் இருக்கும் பிரபாகரனின் வீட்டுக்கும் போனேன். அங்கு முள்வேலிக்குள் கையைவிட்டு ஒரு பிடி மண் எடுத்துவந்தேன். அதை யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் திருநீறாகக் கருதி பூசிக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் பூசிவிட்டனர்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே உறுதியாக நம்புகிறார்கள். தங்கள் காவல் தெய்வம் வரும் என்று காத்திருக்கிறார்கள், அப்போது மீண்டும் இலங்கை செல்ல நானும் காத்திருக்கிறேன்! என்றார் பத்மா.
நன்றி - ஜூனியர் விகடன்
மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு நா.க.தமிழீழ அரசின் பிரதமர் வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெரு விருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர்குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக்குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு - 12 நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.
முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம். அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.
இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாகபீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம். இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்;களிடமும் கோரினோம். தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.
தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம். இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலைநோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம். முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும். நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது. ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.
இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம். எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இக்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது.
இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்;தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி.
இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படாவிடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன். மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது.
இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம். இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.
இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.
இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காhகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.
இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன். நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம். பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாhந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம். இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும். நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;
நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.
தமிழ் உறவுகளே!
நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம். தமது குருதியால் நமது தாயகப்ப+மியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம். தாயக ப+மியில் சிங்கள இனவாதப் ப+தத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம். நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.
உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.
நன்றி.
விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மாவீரன் தடம் பதித்த மண்! – கொளத்தூர் மணி
பெரியார் திராவிடர் கழகத் தலைவர். தமிழ் உணர்வாளர். ஈழத் தோழர். இனிய தமிழர். ”மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகில் உக்கம்பருத்திக்காடுதான் நான் பிறந்த மண். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே நகரப் பேருந்து வந்து போகும் குக்கிராமம். இனிப்பும் புளிப்பும் கலந்த மிட்டாயாக என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களை அங்குதான் சுவைத்தேன்!
ஊருக்கு நதி அழகு. அதுவும் எங்கள் கிராமத்தில் தண்ணீர் சலங்கை சலசலக்க பேரழகி காவிரி ஓடினாள். அவள்கூடவே நாங்களும் ஓடுவோம். அவள் இருப்பினால் எங்கள் ஊருக்குள் எட்டிப் பார்க்கத் தாகத்துக்குப் பயம். கிணறு வெட்டினால், 10 அடியில் நன்னீர் கிடைக்கும். வயல்கள் எங்கும் கரும்பு, மஞ்சள், வாழை என்று எல்லாம் பசுமை. ஊருக்கு வெளியே செம்மலை, கத்திரி மலைகளும் பசுமை போர்த்தி இருக்கும்.
1984-ம் ஆண்டு. விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாட்டில் இடம் தேடிக்கொண்டு இருந்தார் கள். கும்பாறப்பட்டி யில் இருக்கும் எங்கள் தோட்டம் அவர்களுக்குப் பிடித்துப்போனது. அங்கேதான் மாத்தையா, பொன்னம்மான், புலேந்திரன், யாழ்ப்பாணம் தளபதி ராதா ஆகியோர் நூற்றுக்கணக்கான புலிகளுக்குக் களத்தில் சமராட ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள்.
புதிய ஆயுதங்கள் எது வாங்கினாலும், பயிற்சி நடக்கும் இடத்தில்தான் சோதனை நடத்துவார்கள். ஒரு முறை புதிதாக வாங்கிய ‘எம்.60’ கிரைனைட் லாஞ்சரை சோதனை செய்ய மாவீரன் பிரபாகரன் எங்கள் கிராமத் துக்கு வந்தார். அந்த கிரைனைட் லாஞ்சர் 300 மீட்டர் தூரம் பாய்ந்து சென்று வெடிக்கும் திறன்கொண்டது. ஆனால், அன்றைய சோத னையில் 10 மீட்டர் தொலைவிலேயே வெடித்து சிதறி, அதில் ஒரு கூரிய சிதறல் பிரபாகரனின் தொடையில் பாய்ந்துவிட்டது. நண்பர் சின்ன ஜோதி என்பவர் அவரைத் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு, பிரதான சாலை வரை ஓடி வந்தார். பின்பு, சேலம் மருத்துவமனையில் சேர்த்தோம். அந்தக் காலகட்டத்தில் பல முறை இந்த மண்ணில் மாவீரனின் கால் தடம் பட்ட தால், இந்த மண்ணை புலியூர் என்றே அழைத்தார்கள்!
எங்கள் கிராமத்தின் ஆற்றுக்கு மறு கரையில் இருக்கிறது செங்கப்பாடி கிராமம். மறைந்த வீரப்பனின் சொந்த ஊர். எங்கள் குடும்பத்துக்கும் வீரப்பனின் குடும்பத்துக்கும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நட்பு. ஆனால், வீரப்பன் சிறு வயதிலேயே காட்டுக்குள் சென்றுவிட்டதால், பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோதுதான் வீரப்பனை நேரில் சந்தித்தேன். ஊரைப்பற்றி யும், குடும்பத்தைப் பற்றியும் நிறையப் பேசி னோம். என்னைப் பொறுத்தவரை மரியாதை தெரிந்த மனிதாபிமானி வீரப்பன்.
நான் வளர்ந்த கிராமம் கொளத்தூர். சுற்றுவட்டாரக் கிராமத்தினர் எல்லா நல்லது கெட்டதுக்கும் கொளத்தூருக்கு வந்தாக வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கொளத்தூரில் சந்தை கூடும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடைகளைத் தூக்கிக் கொண்டு சந்தைக்குப் படை எடுப்பார்கள். ஒதுங்கக்கூட இடம் இருக்காது. டவுசரை மாட்டிக்கொண்டு அம்மாவுடன் சந்தைக்கு வந்துள்ளேன். இப்போது கிராமத்தில் நிறையக் கடைகள் முளைத்துவிட்டன. சந்தையில் கூடிய கூட்டமும் குறைந்துவிட்டது!
இயக்க வேலைகளுக்காக நான் அடிக்கடி வெளியூர் போக வேண்டும் என்பதால், மேட்டூ ருக்குக் குடி மாறினேன். மேட்டூர் முழு நகரம் இல்லை. தொழிற்சாலைகள் நிறைய இருக்கும். புகைக்கும் புழுதிக்கும் பஞ்சம் இல்லை. எப்போதும் ஏதாவது ஓர் ஆலையின் பரபரப்பு ஓசை மிரட்டிக்கொண்டே இருக்கும். அந்த இரைச்ச லையும் தாண்டி காவிரியின் முணுமுணுப்பு காதுக்கு இதம். வெளியூர்களில் இருந்து புலம் பெயர்ந்து இங்கே வந்தவர்கள்தான் அதிகம். எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்பதால் இன்றும் நம்பி வருகிறார்கள்.
ஆனாலும், பிறந்த மண்போல எதுவும் வாய்க்காது என்பதால், நேரம் கிடைக்கும் போது என் கிராமத்துக்குக் கிளம்பிவிடுவேன். எப்போதும் மனதுக்கு நிறைவைத் தருவது எங்கள் கிராமம்தான். என் உயிரும் உணர்வும் கலந்த இடம் அது!”
- கே.ராஜாதிருவேங்கடம்.
படங்கள்: க.தனசேகரன்.
நன்றி: விகடன்
வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட... பாடலாசிரியர் : தலித் சுப்பையா
வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...
பாடல்-பண் : தலித் சுப்பையா
பல்லவி :
வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட
கள்ளப்பிள்ளை காங்கிரசு
இத்தாலிப் பெண்மணியின்
ஏவல் படையாய் மாறிப்போச்சு.
அ.பல்லவி :
ஊருக்கு நாளுபேரு கணக்குங்க சும்மா
பேருக்கு காங்கிரசு இருக்குங்க. (வெள்ளை)
சரணம் 1 :
காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது
குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை
தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா (வெள்ளை)
சரணம் 2 :
அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு
கரைகளாக கழகங்கள் வெளிப்படை
மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில்
மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது! (வெள்ளை)
சரணம் 3 :
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம்
கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது
சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை
தடுத்துநிறுத்த துப்பில்லாமல் மழுப்புது (வெள்ளை)
சரணம் 4 :
அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு
அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது
எறிந்தபந்து எதிர்த்திசையை தாக்குமே - அதை
தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே. (வெள்ளை)
சரணம் 5 :
தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன்
தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது
இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை
இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது. (வெள்ளை)
சரணம் 6 :
புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம்
தடயமறிய ராடர்களை கொடுக்குது
படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று
மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை)
சரணம் 7 :
சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை
சலூன்கடை தாள்என்று நினைக்குதா
மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப்
பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை)
சரணம் 8 :
பாகி°தானை பிரித்துதந்தார் தாத்தனார்
பங்களாதேசுக்கு காரணமே மாமியார்
ஈழத்தமிழர் அழிப்பைசெய்தார் கணவரு - அந்த
இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார். (வெள்ளை)
சரணம் 9 :
காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக்
கடனடைக்க களமாடுது தமிழ்நாடு
தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக்
காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம் (வெள்ளை)
Wednesday, March 2, 2011
விஜய் நம்பியார் ஒரு போர்க் குற்றவாளி?! - சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.
தமிழீழத் தலைவர்களை சரணடைவதற்காக வெளியே வரும்படி அழைத்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் அலுவலக தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார். அதனால், 'அவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறார்’ என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'இனப் படுகொலைக்கு எதிரான அமெரிக்காவில் உள்ள தமிழர்கள்’ என்ற அமைப்பும், 'ஸ்விட்சர்லாந்து ஈழத் தமிழர் கவுன்சில்’ என்ற அமைப்பும் கூட்டாகச் சேர்ந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளன.
இலங்கையில் நடந்த இனப் படுகொலையை மூடி மறைப்பதில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிந்தோ தெரியாமலோ, பெரும் பங்கு வகித்திருப்பதாக சர்வதேசத் தமிழர்கள் மத்தியில் நிலவி வரும் சந்தேகத்துக்கு வலு சேர்ப்பதாக இந்த வழக்கு அமைந்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்குக்காக முக்கியமான குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர்களுடைய பாதுகாப்புக்கு உறுதி அளித்திருக்கிறார். விஜய் நம்பியாரின் உறுதிமொழியை நம்பி வந்த தலைவர்கள் அனைவரும் கூண்டோடு சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்பப்படுவதாக இன்னர் சிடி பிரஸ் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அல் ஜசீரா என்ற அரபுத் தொலைக்காட்சிக்கு விஜய் நம்பியார் அளித்த பேட்டியில், ''மகிந்தா ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்கள மருத்துவர் பலித கோஹனே ஆகியோர், சரணடைய வரும் புலிகள் அனைவரும் போர்க் கைதிகளுக்கு உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தனர்!'' என்று கூறியிருக்கிறார். மேலும் அதே பேட்டியில், இலங்கை அரசைத் தொடர்புகொண்டு புலிகளின் உயிருக்கு அரசு அளித்த உத்தரவாதத்தை உறுதி செய்துகொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இத்தனை உறுதிமொழிகளுக்குப் பின்னரும் எப்படி இப்படி ஒரு படுகொலை நடந்தது என்ற வினாவுக்கு, ''தலைவர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைவதை விரும்பாத விடுதலைப் புலிகள் ராணுவத்துடன் போரிட்டிருக்கலாம். அப்போது நடந்த சண்டையில் சரணடைய வந்த புலித் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம்...'' என்று நம்பியார் கூறியுள்ளார்.
''இது உங்கள் அனுமானம்தானே... நடந்த உண்மை என்ன?'' என்ற கேள்விக்கு விஜய் நம்பியார் தெளிவான பதில் கொடுக்காமல் மழுப்பிவிட்டார்.
இந்த வழக்கில் விஜய் நம்பியாருடன் சேர்த்து ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்களவரும் டாக்டருமான பலித கோஹனேவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதால், ஆஸ்திரேலிய அரசாங்கமும், உயர் அதிகாரிகளும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
ராஜபக்ஷேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது, உலகத் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் 'நான் நேர்மையானவன்’ என்று உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்!
- மலைமகன்
இவர்தான் நம்பியார்!
கேரள நம்பியார், தமிழர்களுக்கு மட்டும் வில்லனாக விளங்கவில்லை. உரிமை கேட்டுப் போராடுகிற அனைத்து மக்களுக்கும் எதிரியாகவே செயல்படுகிறார். விஜய் நம்பியாரை டிசம்பர் 2010-ல் பர்மாவுக்கான சிறப்புத் தூதராக பான் கி மூன் நியமித்தார். இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பர்மா மக்கள் குழுவினர், ''நம்பியார், பர்மா அரசாங்கத்துடன் இணைந்து ராஜபக்ஷேவுடன் நடத்திய இனப் படுகொலையை அரங்கேற்றிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே அவரை மாற்ற வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த குழுவினர் சார்பாக மார்க் ஃபார்மனர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா-வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லையல் கிராண்ட், ''பர்மாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பதவியில் இருந்து நம்பியாரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்!'' என்று ஆதரவுக் குரல் எழுப்பி இருக்கிறார்.
* நன்றி : ஜூனியர் விகடன் 06-மார்ச் -2011
பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!
கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?
* * * * *
மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!
* * * * *
தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!
* * * * *
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
* * * * *
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
* * * * *
அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!
* * * * *
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!
இடம் : வாணியம்பட்டி கவியரங்கம்
நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011
Subscribe to:
Posts (Atom)