Labels

Monday, August 30, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27.08.2010) பரிந்துரை செய்துள்ளது.

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய சிறீலங்கா அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர்.

உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.அந்த நடவடிக்கை இப்பொழுது வந்த தீர்ப் பிற்கு உதவியுள்ளது எனக் கருதலாம்

No comments:

Post a Comment