Thursday, August 5, 2010
இலங்கை தமிழர்களின் பிரச்சனை: உலகப் பெருந்தலைவர்கள் குழு வேதனை
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக உலக நாடுகளுக்கு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுமாறு, ராஜபக்சே அரசை வலியுறுத்தும்படி உலகப் பெருந்தலைவர்கள் குழு இந்தியா மற்றும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபிஅனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் இலங்கை அரசை கடுமையாக குறை கூறி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் இக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கடுமையான போர் குற்றங்கள் புரிந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், உலகப் பெருந்தலைவர்கள் குழுவும் இலங்கை அரசுக்கு எதிராக தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கும் இக்குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எதையும் எடுக்காததையும் இக்குழுவினர் வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment