Labels

Friday, August 19, 2011

தமிழர்கள் இலங்கையில் வதைப்படும் நிலைகுறித்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வாய்ப்பு மறுக்கப்படுகிறது: திருமா



18.8.11 அன்று நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொல்.திருமாவளவன் பேசுகையில்,

பிரதமர் அவர்கள், தனது நீண்ட நெடிய அறிக்கையில் அத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அன்னா அசாராவை கைது செய்ய நேரிட்டது என்று விரிவாக எடுத்துரைத்தார். அந்த அறிக்கையில் அன்னா அசாரேவிற்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்கபட்டதாகவும் ஆனால் அதில் சில நிபந்தனைகள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் அவரது பிடிவாதமான நிலைபாட்டால், அவர் மேற்கொள்ள இருந்த சில செயல்பாடுகள் சட்டம்,ஒழுங்கை பாதித்து விடுமோ என்கின்ற ஐயத்தில் அவரை கைது செய்யும் நிலைக்கு அரசு தள்ளபட்டது என தனது நீண்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இந்த அரசு அமைதியான போராட்டங்களுக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கபட்டது என்று பிரதமர் சொன்னாலும் கூட, இந்த சூழலை இன்னும் திறன்பட கையாண்டு இருக்கலாம். இதுபோன்ற கைது நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீது ஓர் எதிர்மறையான எண்ணம் தோன்றியுள்ளது.


ஆளும் காங்கிரஸ் கட்சி, ஊழலை ஒழிக்க முன்வரவில்லை என்ற ஓர் கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனோ எதிர்கட்சிகள் மட்டுமே ஊழலை ஒழிக்க மெனக்கிட்டு எதிர்த்து போராடி வருவதைப்போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அவர்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு வசமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.

அன்னா அசாராவை கைது செய்ததற்கு பதிலாக அவரை வீட்டு காவலில் வைத்து இருக்கலாம் அல்லது அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர அனுமதித்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்திருக்கலாம். இந்த பிரச்னையை தக்க வழிமுறையில் கையாண்டு சுமூகமாக அதே நேரத்தில் ஒரே அடியாக தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் இதனை இப்போது கையாண்ட முறையினால் அரசுக்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த அவையினை இன்றைக்கு வழிநடத்துவது ஆளும் கூட்டணியா? அல்லது எதிர்க்கட்சிகளா என்கின்ற ஒரு தெளிவற்ற நிலை உள்ளது.


எதிர்கட்சியினர் இந்த அரசை அடிக்கடி பணையம் வைக்கின்றனர் .அவர்கள் இந்த அவையை தாங்கள் இழுத்த இழுப்பிற்கு ஏற்றவாரு செயல்ப்பட வேண்டுமென நினைகிறார்கள், தொடர்ந்து இந்த அவையினை செயலிழுக்க வைக்கின்றனர்.


சொந்த மண்ணில், மனித தன்மையற்ற முறையில் இலங்கையில் பரிதாபத்திற்கும், பட்சதாபதிற்கும் உரிய அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையினை எடுத்துரைத்து, அவர்களுக்காக இந்த அவையிலே குரல் எழுப்பமுடியாத ஒரு மோசமான நிலை இதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்தோடு இந்த அவையில் பதிவு செய்கின்றேன்.


பல லட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகததான் நாங்கள் இந்த அவையிலே இருகின்றோம். இலட்சகணக்கான தமிழர்கள் இலங்கையில் வதைப்படும் நிலைகுறித்து, இந்த அவையில் குரல் எழுப்புவதற்கு எங்களுக்கு ஜனநாயக வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எதிர்கட்சிகள் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதும், அசாரே கைதின் மூலம் ஏற்பட்டுள்ள சுழலும் அவர் விடுவிக்கப்பட்ட முறையும் இந்த அரசு, எதிர்கட்சியினரின் இதுபோன்ற போராட்டத்தின் அழுத்தத்திற்கு பணிந்துவிட்டது என்றே தோன்றுகிறது.


நான் இந்த அரசிடம் வழியுறுத்துவது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது, ஊழலை எதிர்த்து போராடுபவர்கள்மீது அல்ல ஊழலுக்கு எதிராகத்தான் இன்னும் குறிப்பாக ஊழலுக்கான ஆணிவேராக இருப்பவர்கள் மீதும் ஊழல்வாதிகள் மீதும்தான் இருக்க வேண்டுமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.


எனது இந்த நிலையினை எதிர்க்கட்சி ,ஆளும்கட்சி சார்ந்த இருவரிசையில் உள்ளவர்களும் ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன் இன்றைக்கு எதிர்கட்சியினர், எதோ அவர்கள்தான் ஊழலை வேரோடு பிடிங்கி ஏறிய வந்தவர்கள் போன்ற ஒரு போலித்தனமான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.


இந்த மாயையை உடைத்து ஏறிய வேண்டும் .நாம் அனைவரும் நம் அறிவாற்றலை ஓன்று சேர்த்து ஊழலை, இந்த சமூகத்தில் இருந்து துடைத்து ஏறிய வேண்டும். இதற்கு நாம் ஊழலில் ஆணிவேரை கண்டறிய வேண்டும் .ஏழ்மையும் ஊழலும் ஒரே நாணையத்தின் இருவேறு பக்கங்களாகும் ,ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையில் பல புரட்சிகரமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் ,வியாபார நிறுவனங்களும் தான் பல முக்கிய வேட்பாளர்களுக்கும் நிதி ஆதாரம் அளித்து அதன்மூலம் அவர்களை கைபாவையாக்கி தங்கள் சொற்படி அரசை நடத்துகிறார்கள் ,முதலாளிகளும்,தொழில் அதிபர்களும்,தேர்தலில் பணத்தை தண்ணீராக வாரியிறைத்து ஊழலுக்கு வழிவகுக்கிறார்கள் எனவே இந்த அரசு ஊழலுக்கான இந்த ஊற்று கண்ணை அடைத்து ஊழலை முளையிலே கிள்ளி ஏறிய உறுதியான நடவடிக்கைகளை திறன்பட மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பம்.


ஒப்பந்த புள்ளிகள் ஒப்பந்த பணிகள் ஏலம் முறைகள் போன்றவற்றில் தற்போது உள்ள முறைகளை நெறிமுறைப்படுத்தி வெளிபடையாக்கி ஊழலுக்கான வாய்ப்பினை முற்றிலுமாக தவிர்க்கலாம். கருப்பு பணத்தைமுழுவதுமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.


ஊழல் என்பது மனித வரலாற்றில் அங்கமாக இருந்து வருகிறது. அதை எளிதில் வேரறுக்க முடியுமா ? ,வெறும் சட்டத்தினால் இதனை அழித்துவிடமுடியாது. நாம் ஏற்கனவே தடா. போடா போன்ற கொடும் சட்டங்கள் நடைமுறைபடுத்தி பயங்கரவாதத்தையும் ,வன்முறையும் கட்டுபடுத்த முடியவில்லை. எனவே கடுமையான சட்டங்கள் மட்டும் ஊழலை ஒழிக்க உதவாது திருவள்ளுவர் அவர்கள் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கின்ற குரலில் நோயினை தீர்க்க அடிப்படை அணுகுமுறை அந்த நோய்க்கான மூலகாரணத்தை அறிவதுதான். என அறிவார்ந்த முறையில் எடுத்துரைத்து இருப்பதை மேற்கொள்ளகாட்ட விரும்புகிறேன்.


நாம் தக்க நடவடிக்கையின்மூலம் ஊழலுக்கு காரணமானவர்களின் இந்த சமூகத்தை ஊழல் மயமாக்குபவர்கள் யார் என்பதை ஊழல்வாதிகள் யார் என்பதையும்கண்டறிந்து ஊழலை இந்த சமூகத்தில் இருந்து முற்றிலுமாக துடைத்து ஏறிய வேண்டும் .ஊழல் முதலாளிகள் ,தொழில் அதிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த அரசை வழியுருத்துகிறேன் ஜென்லோப் சட்டமாக இருந்தாலும் லோக்பால் சட்டமாக இருந்தாலும் அதனால் ஊழலை வேரறுக்க முடியாது.


ஊழலுக்கான ஆணிவேர் கண்டறியப்படுவதோடு மக்களின் அடிப்படை மனநிலையும் மாறவேண்டும் தொழில் நிறுவனங்கள் ,முதலாளி மீதான பிடியினை இந்த அரசு இருக்கவேண்டுமென வழியுருத்துகிறேன்.


மேலும் இந்த விவகாரம் குறித்து ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தும் வகையில் அன்னா அசாரே உடன் பேச்சுவார்த்தை தொடங்கி ஊழல் பிரச்சனையை திறன்பட கையாண்டு முழுமையாக ஒழிக்க முற்பட வேண்டும்.


இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை



மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது என அனைவரும் அறிவோம். மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிறபோது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்? நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

மேற்கு வங்கத்தில் 2000த்தில் கடைசியாய் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1995-க்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில் இந்திய அரசே -மரண தண்டனையை ரத்து செய்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட அனைவரது மரண தண்டனையையும் கால அளவைக் கணக்கில் எடுத்து ரத்து செய்!

என்ற முறையீட்டை முன்வைத்து நடுவணரசை வலியுறுத்த தங்கள் ஒப்புதலைக் கோருகிறோம். அனைவரின் ஒப்புதலும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழு.
———
பொன்னீலன், புவியரசு, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், இராசேந்திரசோழன், பா.செயப்பிரகாசம், தாமரை, ஓவியர் மருது, மாலதி மைத்ரி.

ஒப்புதல் அளிக்கும் மின்னஞ்சல் : jpirakasam@gmail.com, s.tamarai@gmail.com

இதுவரை ஒப்புதல் அளித்தவர்கள்:

நோம் சாம்ஸ்கி

பினாயக் சென்

ஆனந்த் பட்வர்த்தன்

மார்கரெட் ட்ராவிக்

வரவரராவ்

மகாசுவேதா தேவி

மகேஷ் தத்தானி

புலவர் புலமைப்பித்தன்

பிரபஞ்சன்

கலாப்ரியா

எஸ்.பொ.

தமிழவன்

சிவசங்கரி

கிருஷாங்கினி

நெய்வேலி பாலு

அ.மார்க்ஸ்

ஞாநி

ரவிசுப்ரமணியன்

பழநிபாரதி

கபிலன்

யுகபாரதி

கிருதியா

பிரான்சிஸ் கிருபா

சல்மா

தமிழச்சி தங்கபாண்டியன்

சிநேகன்

பா.விஜய்

ந.முத்துக்குமார்

தமிழ்நதி

விவேகா

அ.வெண்ணிலா

பிறைசூடன்

அஜயன் பாலா

குழந்தை வேலப்பன்

பாஸ்கர் சக்தி

இயக்குனர் தாமிரா

நடிகர் ஆர்.பார்த்திபன்

நடிகை ரோகிணி

நடிகர் சத்யராஜ்

இயக்குனர் அமீர்

இயக்குனர் மணிவண்ணன்

இயக்குனர் சேரன்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்

இயக்குனர் சீனு ராமசாமி

ஜமாலன்

பாமரன்

ச.பாலமுருகன்

இரா.முருகவேள்

3 தமிழர்கள் உயிர்காப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூட்டறிக்கை



18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்னை “தென்செய்தி’ அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் நடைபெற்றது.

பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வி. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா. செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ராசீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதைக் கண்டு இக்கூட்டம் வருந்துகிறது. இம்மூவரின் உயிர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை இக்குழுவின் சார்பில் சந்தித்து வேண்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

2. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 22-8-11, திங்கள் கிழமை அன்று மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

3. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் 26-8-11 வெள்ளிக் கிழமை அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

4. மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் அவர்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.

இப்படிக்கு

பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
3 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளம் வேதனைத் தீயால் வெந்து கொண்டு இருக்கின்ற நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களைக் காப்பதற்காகவும், அறிவிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையைத் தடுப்பதற்காகவும், மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் அறிவித்து உள்ளவாறு, 22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை, தலைநகர் சென்னையில், எம்.ஜி.ஆர் நகரில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.


அனைத்து அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில், நானும் பங்கு ஏற்கிறேன். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.


வருகின்ற 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.


மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிகப் பெருமக்கள், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும், மூன்று உயிர் காக்கும் மனித நேயத்தோடு பங்கு ஏற்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன். குறிப்பாக, தாய்மார்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.


இந்த இரு நிகழ்வுகளிலும் கழகத் தோழர்கள், கழகக் கொடிகள் மற்றும் விளம்பரங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தூக்குத்தண்டனையில் இருந்து அதிமுக கைதிகளையும் காப்பாற்ற வேண்டும் : திருமாவளவன்



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் 19.08.2011 அன்று நடந்தது.

சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்ள தமிழர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த பின்னரும் மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்ற சட்டவிரோத செயலாக முடியும்.

எனவே மரண தண்டனையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆயுள் தண்டனைக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் மேலும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டம் 193 உலக நாடுகளில் இருந்தது அவற்றில் 150 நாடுகளில் அந்த தண்டனை அமல்படுத்தக் கூடாது என கைவிட்டு இருப்பதாக தெரிகிறது.

அந்த வரிசையில் இந்தியாவும் மரண தண்டனையை கைவிட வேண்டும். உலக தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் 3 பேரும் தூக்கிலிடப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக புரட்சி ஏற்படும்.

பாராளுமன்றத்தை தாக்கிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அப்சல்குரு, வண்டியை வாடகைக்கு பிடித்து கொடுத்துள்ள குற்றத்தை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்.

தர்மபுரியில் மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதனால் மரண தண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சினையில் மாநில அரசு தலையிடும்போது மத்திய அரசு பணிய வாய்ப்பு உள்ளது
’’ என்று தெரிவித்தார்.

ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள்! – வைகோ



ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அந்த இளைஞனை எனக்கு நன்றாகத் தெரியும். ராஜீவ் கொலைச் சதிபற்றி அவருக்கு எதுவும் தெரியாது


பேரறிவாளனை பொலிஸார் கடுமையாகச் சித்திரவதை செய்துதான் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். 19 வயதில் கைதான அந்த இளைஞன் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது.

நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்கனவே ரத்து செய்ததுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!” – பிரதமர் முன்னால் கலங்கிய குரலில் கோரிக்கை வைத்தார் வைகோ.

இது நடந்தது கடந்த 2-ம் தேதி. ஒரு வாரம் கடந்த நிலையில், டெல்லியில் இருந்து ஒரு செய்தி. ‘பேரறிவாளனின் மனு நிராகரிக்கப்பட்டது, தூக்குத் தண்டனை உறுதி!’

இந்த நிலையில் வைகோவைச் சந்தித்தோம்!


பிரதமரைச் சந்தித்து நீங்கள் கோரிக்கை வைத்ததுமே, எதிர்மறையான முடிவு வெளிப்பட்டுள்ளதே?


இப்படி ஒரு உடனடி முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பேரறிவாளன் குறித்து நான் எழுதி இருந்த கடிதத்தை முழுமையாகப் பிரதமர் படித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு வி.ஆர்.கிருஷ்ணய்யர் 2010 ஆகஸ்ட் 10-ம் நாள் பேரறிவாளனுக்கு மரண தண்டனையைக் குறைப்பதற்கான காரணங்களை அடுக்கி எழுதிய விரிவான கடிதத்தை நான் அதில் முழுமையாகக் குறிப்பிட்டு இருந்தேன்.

உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கைதியைப் பொறுத்த வரை 20 ஆண்டு காலச் சிறைவாசம் என்பதே துன்பம் தரக்கூடிய, கண்ணீர் விடக்கூடிய மன வேதனையை ஏற்படுத்த வல்லது என்று அதில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்லி இருப்பார்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்று பிரதமரிடம் சொன்னேன். 9 வோல்ட் பற்றரியை வாங்கி சிவராசனிடம் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 9 வோல்ட் பற்றரி, பொம்மைகளை இயக்குவதற்குப் பயன்படக்கூடியது. இது எதற்காகப் பயன்படப்போகிறது என்று தெரியாமல் பற்றரி வாங்கியது மரண தண்டனை வழங்குவதற்கான வலுவான காரணமாகக் கருத முடியாது. என்றும் சொன்னேன்.

நான் சொன்னதை கவனமாகக் கேட்ட பிரதமர், ‘இதை மத்திய உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரை செய்கிறேன்.’ என்று சொன்னார். ‘நீங்களும் பரிந்துரை செய்யுங்கள். நானும் அவரைச் சந்திக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்!


உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்ன சொன்னார்?


பிரதமரிடம் கொடுத்த அதே கடிதத்தை ப.சிதம்பரம் பெயருக்குத் தயாரித்துக்கொண்டு, அன்றைய தினமே அவரைச் சந்தித்தேன்.

நீங்கள் கேட்பது பேரறிவாளனுக்கு மட்டும்தானா? என்று அவர் கேட்டார். ‘மூன்று பேருக்காகவும்தான்’ என்றேன். ‘ஒருவருக்கு குறைக்கப்பட்டால், மற்றவர்களுக்கும் அது பொருந்தும்தானே’ என்ற அமைச்சர், ‘உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனைத் தீர்ப்பில் குறை கண்டுபிடித்து, நாம் தண்டனையைக் குறைக்க முடியாது.

எனவே, கருணை அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும்.’ என்று சொன்னார். நம்பிக்கையுடன்தான் நான் வெளியில் வந்தேன்.

அடுத்த சில நாட்களிலேயே கருணை மனு நிராகரிக்கப்பட இருப்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா? ‘என் கையைவிட்டுப் போய்விட்டது’ என்றோ, ‘நான் என்ன செய்ய முடியும்?’ என்றோ சிதம்பரம் சொல்லி இருக்கலாம். ஏமாற்றப்பட்டது நான் மட்டும் அல்ல… ஓர் இனம் என்பதை இன்றைய மத்திய அரசு உணர வேண்டும்!


இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீரென முடிவெடுக்க என்ன காரணம்?


இலங்கையில் ராஜபக்ஷ நடத்திய நாசகாரப் படுகொலைகளும்… அதற்கு இந்தியா நிதி உதவியும், இராணுவ உதவியும், தகவல் பரிமாற்ற உதவியும் செய்த விவகாரங்கள் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவிவிட்டன.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மனச்சாட்சியையும் இது உசுப்பிவிட்டது. அகில இந்தியத் தலைவர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

எங்களது டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்ஹா, ‘வைகோ படகுகளை ஏற்பாடு செய்யட்டும். நாம் அனைவரும் இலங்கையை நோக்கிச் செல்வோம்’ என்றார்.

உ.பி.யிலும் பீகாரிலும் இதுபற்றி பொதுக் கூட்டம் போடும்போது வைகோ வந்து பேச வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஈழப் போர்க் கொடுமைகள் இந்தியாவின் முக்கிய சனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் தடுப்பதற்கு காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கும் தற்காப்புக் கேடயம்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்.

அதற்காக, ராஜீவ் கொலையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?

நான் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தவில்லை. அதற்காக, கொலையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும் சதியில் உள்ளடக்கினால், அதைக் கண்டிக்க உரிமை இல்லையா? இந்த வழக்கைக் காரணமாகக் காட்டி, ஈழத் தமிழன் அனுபவித்த கொடுமையை, கொலையை, கற்பழிப்பைப் பற்றி பேசுவதைத் தடுக்க நினைப்பதைத்தான் கண்டிக்கிறேன்.

ராஜீவ் வழக்கில் ஐந்து நாட்கள் என்னையும் விசாரித்தார்கள். இந்த வழக்கின் 250-வது சாட்சியாக என்னையும் இணைத்தார்கள். ‘இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று பூந்தமல்லி தனி நீதிமன்றத்திலேயே சொன்னவன் நான். இன்றும் அது ஆவணங்களில் இருக்கிறது.

மத்திய அரசாங்கம், இலங்கைக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் இராணுவத் தொடர்புள்ள அனைத்து தளவாடங்களையும் கொடுத்துள்ளது. எனவே இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதற்கு எத்தனையோ கடித ஆதாரங்கள் இருக்கின்றன.

எனவே, ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தைக் காரணமாகக் காட்டி எங்கள் வாயைப் பூட்ட முடியாது. நாங்கள் இதுவரை பேசாமல் இருந்த வேறு விஷயங்களை இனி பேசப்போகிறோம்!


எதைச் சொல்கிறீர்கள்?


நான் காங்கிரஸ் அரசாங்கத்துக்குச் சொல்வதெல்லாம்… மூன்று உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால்… இந்திய அமைதிப் படையை அனுப்பி இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைத் தமிழ் நாட்டின் தெருத் தெருவாய்ப் போய் நாங்கள் இனி சொல்வோம்.

உண்ணாவிரதம் இருந்த திலீபனைச் சாகடித்தது யார்? சென்னையில் தங்களது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அமைதியாகத் திரும்பிய குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் சாவுக்கு யார் காரணம்?

சமாதானத் தூதனாக வந்த ஜானியைக் கொன்றது யார்? பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு வரவைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது யார்?

இந்திய அமைதிப் படையால் எத்தனை வீடுகள் தகர்க்கப்பட்டன? எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர்? எவ்வளவு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் சொல்வேன்.

இந்தியன் பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ்… இந்தியன் பீஸ் கில்லிங் ஃபோர்ஸாக எப்படி எல்லாம் செயல் பட்டது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. 1987-89 காலகட்டத்தில் ராஜீவ் செய்த காரியங்கள் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரியாது. அதை இனி தெரியப்படுத்துவோம்!

இந்த விஷயத்தில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும்?

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 26 பேரின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் இருந்தே இயக்கம் நடத்தியவர் அண்ணன் பழ.நெடுமாறன். அவருடன் நானும் தோழர் தியாகு போன்றவர்களும் 1999-ம் ஆண்டு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனு கொடுத்தோம்.

பிரதமர் வாஜ்பாயை சந்தித்தோம். உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தோம்.

உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் நினைத்தால், செய்யலாம். அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றார். ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கவர்னர் பாத்திமா பீவி கருணை மனுவை நிராகரித்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு போட, அப்போது வழக்கறிஞராகவும் இப்போது நீதியரசராகவும் இருக்கும் கே.சந்துரு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதியரசர் கோவிந்தராஜன், ‘மந்திரி சபையின் கருத்துப்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.’ என்று பாத்திமா பீவியின் உத்தரவை ரத்து செய்தார்.

இந்த சூழ்நிலையைப் புரிந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, முதல்வர் சில முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால், மாநில முதல்வர் ஓர் அழுத்தம் தரலாம்.

தமிழீழத்தைப் பிரிப்பதுபோல, தமிழ் நாட்டையும் பிரிக்கப் போகிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி, விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது.

ராஜீவ் கொலையைச் சொல்லி, ஈழத்தில் நடந்த இனக் கொலையை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழர் எழுச்சியை அடக்க இந்த மூன்று உயிர்களை பலியிட்டால், அதைத் தொடர்ந்து நடக்கும் விளைவுகளால், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!!

நன்றி : ஜூனியர் விகடன்

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்சே நீண்ட நாள் வாழ வளர்க்கும் யாக குண்டலத்தில் வீசும் கொடூரம் : சீமான் ஆவேசம்



இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.

பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.

தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.

“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
’’ என்று தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் சந்திரிகாவின் ஒப்புதல் வாக்குமூலமும் - எழில்.இளங்கோவன்



இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஈழத்தில் வடக்கு ‡ கிழக்கு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உள்ளது.

இத்தேர்தலில் ஈழ விடுதலைக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜபக்சேவின் கட்சி வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் தென்னிலங்கைச் சிங்களர் பகுதிகளில் அக்கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

இங்கே கவனிக்கத்தக்க செய்தி ஒன்று இருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கட்சி மற்றும் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஈழத்தமிழர்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள். அதுபோல சிங்களர் பகுதிகளில், தென்னிலங்கையில் சிங்களர்கள் ராஜபக்சேவை வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

இதன் மூலம் ஈழம் வேறு, சிங்களம் வேறு என்று இரு இன மக்களும் தத்தம் தீர்ப்பை உறுதி செய்திருப்பது தெளிவாகிறது. ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இன்று களத்தில் இல்லாத நிலையிலும், ஈழ மக்கள் தம் வாக்குகளின் மூலம் தனி ஈழத்திற்கான அங்கீ காரத்தை வழங்கி இருக்கிறார்கள்.

உலக அளவிலும், ஐக்கிய நாடுகள் அவையினர் அறிக்கை மூலமாகவும் போர்க் குற்றவாளியாக நிற்கும் ராஜபக்சேவை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல்கள் வலுவாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில்தான், இந்த உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பைத் தமிழர்கள் வழங்கியுள்ளார்கள்.

தேர்தல் தீர்ப்பு வெளியான இரண்டு நாள்களில் முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரதுங்கா, ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அவர் பேச்சில்:

" என்னுடைய தந்தை பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து நாட்டையே 30 ஆண்டுகள் நெருக்கடியில் தள்ளியது.

சிங்களத்திற்கு இணையான அந்தஸ்து தமிழுக்கும் வேண்டும் என்று தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. இதில் தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாததால் கூட்டாட்சி வேண்டும் என்று கேட்டார்கள். அதையும் நிராகரித்த காரணத்தால், தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை, கல்வி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு எதுவும் கிடையாது. எங்கும் எதிலும் சிங்களம் மட்டுமே என்ற கொள்கை காரணமாகவே மிகப் பயங்கரமான மோதல்கள் வெடித்தன.

என்னுடைய தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே, தமிழர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்ததாலேயே, தமிழர்களிடையே 5 போராளிக் குழுக்கள் தோன்றின. அவர்களில் முன்னணியில் இருந்த விடுதலைப்புலிகள் உள்பட அனைத்துமே தமிழ் ஈழம் என்ற தனி நாட்டிற்காகப் போராடின. இந்நிலையில் இப்போதைய (ராஜபக்சே) அரசு, முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகார அரசு போல நடந்து கொள்வதைப் பார்த்து வியப்படைகிறேன் "

இலங்கையின் முன்னாள் பிரதமர் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதைச் சந்திரிகாவின் இந்தப் பேச்சு உறுதி செய்கிறது.

ஆகவே ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழ் ஈழம் ஒன்றுதான் இனிமேல் தீர்வு. தெற்கு சூடான், எரித்திரியா, கிழக்கு தைமூர் போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த நாடுகளின் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்நாடுகள் விடுதலை பெற்றன. இறுதியாக மக்கள் வாக்கெடுப்பின் மூலம் விடுதலை பெற்று 193ஆம் நாடாக மலர்ந்தது தெற்கு சூடான்.

இதே நடைமுறையை ஐ.நா. அவையும், உலக நாடுகளும் ஈழத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி வாக்கெடுப்பு நடத்தினால் இன்றைய உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பை இன்னும் வலுவாக வழங்குவார்கள் ஈழத்தமிழர்கள். அதனடிப்படையில் 194ஆம் நாடாக தமிழ் ஈழம் அமைந்து, ஐக்கிய நாடுகள் அவையில் இடம் பெற வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

ராஜபக்சேவுக்குத் தண்டனையும், தமிழ் ஈழ நாடு ஐ.நா.வில் இடம் பெறும் நாளும் எந்நாளோ?

- எழில்.இளங்கோவன்