Labels

Wednesday, April 20, 2011

இலங்கை அரசுக்கு உதவி செய்த மத்திய அரசு தமிழர்களிடமும் ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – கொளத்தூர் மணி



மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஜக்கிய நாடுகள் குழு ஜெனிவாவில் கூடியது. அப்போது இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அங்கு கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், எனவே இலங்கை அரசே ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நாடு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்கு பாராட்டு தெரிவித்தும், அங்கு மனித உரிமைகள் மீறப்படவில்லை என்றும் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கையை பாராட்டி கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழு ஈழத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு போர்க்குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான செயல்களையும் கொடூரமாக நடத்தி இருப்பது உண்மைதான் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் விசாரித்த தீர்ப்பாயமும், இதே கருத்தை வலியுறுத்தி இருந்தது.

ஈழப்போரில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழர்களும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க மத்திய அரசு உதவிய நிலையில், இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று ஐ.நா.குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

எனவே மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இனியும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை தொடராமல் ஜ.நா.குழு சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். போர்க்கொடுமைக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 21 ந் தேதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை



ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை

April 16th, 2011 ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை ஈழம் ஈ நியூஸ் சுருக்கமாக இங்கு தருகின்றது.

ஈழம் ஈ நியூஸ் இன் அரசியல் பிரிவு ஊடகவியலாளர்களினால் சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்;டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:
சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.

வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர்.
ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது.

வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை

• எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.
• வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.
• மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.
• போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.
• போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:
• மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.
• வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.
• பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.
• பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.
• பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.
• தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.

சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:

• விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.

• அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.

• போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.

• ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.

பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு
இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்;

சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

பரிந்துரை -1: விசாரணைகள்

நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:
• சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
• நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.
• ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.
பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.
4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.
5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.
8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

• தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.
• அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
• நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
• குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
• சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்
போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.
3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை
வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.
2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

Friday, April 15, 2011

ப. நடேசன் சித்திரவதை செய்து கொள்ளப்பட்டுள்ளார்



விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இறுதிப்போரில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களை சிங்கள ராணுவம் கொன்றது.

அவர்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

2009, மே மாதம் போரின் இறுதி நேரத்தில், புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய ஐநா அதிகாரி விஜய் நம்பியார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், ப. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தனர்.


ஆனால், அவர்களை இலங்கை ராணுவம் கடுமையாக சித்ரவதை செய்ததாக தற்போது புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.


ப.நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரின் வயிற்றிலும் நெருப்பால் சுட்டதற்கான அடையாளங்களுடன் படங்கள் வெளியாகி உள்ளது, தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, April 4, 2011

ஜெயலலிதாவுக்கும் ராஜபக்சேவுக்கும் வேறுபாடில்லை: நாஞ்சில் சம்பத்



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை என, மதிமுகவின் கொள்ளை அணி விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.


கோவில்பட்டியில் நடந்த மதிமுக கூட்டத்தில் பேசிய அவர்,

19 மாத காலம் பொடா சட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரை சிறையில் வைத்தவர் ஜெயலலிதா. பொடா சட்டத்தில் கைது செய்திருந்த போதிலும், ஜெயலலிதாவை வைகோ ஆதரித்தார். அதிமுகவை அரியணைக்கு ஏற்ற நினைத்திருந்தபோது கூட்டணியில் இருந்து திட்டமிட்டு மதிமுக வெளியேற்றப்பட்டது. மதிமுகவினருக்கு ஜெயலலிதா செய்துள்ள துரோகத்தை தொண்டர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று வைகோ எடுத்த முடிவை மதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க கூடாது என்பதற்காக, பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், ஜெயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.


இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

Sunday, April 3, 2011

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! - விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.


அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.


ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Saturday, April 2, 2011

புலிகளின் 'இரை'யாண்மை - தாமிரா



மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.

அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

- தாமிரா

மீண்டும் புலிகள் தாக்குதல்: இலங்கை ராணுவத்தினர் 4 பேர் பலி?



இலங்கை கப்பற்படைக்கு சொந்தமான படகு ஒன்று முல்லைத்தீவின் சாலை கடற்படை முகாமிலிருந்து சுண்டிக்குளம் முகாம் நோக்கி சென்றது. அதில் கடற்படை வீரர்கள் 4 பேரும், ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் சென்ற அவர்கள் திடீரென மாயமானார்கள்.

இவர்கள் மாயமானது வள்ளம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த படகு, கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வீரர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை கடற்படைக்கு ஏற்பட்டது.


இந்நிலையில் தமிழ் தேசிய எழுச்சி படை என்கிற பெயரில் இயங்கும் புலிப்படை பிரிவு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் கலங்கிபோன இலங்கை ராஜபக்சே அரசு, இறந்துபோனவர்களின் உடலை தேடும் பணிக்கு உதவி செய்யுமாறு இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


கடந்த வாரம் ஹபரணைக் காட்டுப்பகுதியில் திடீர் தாக்குதல் நடைபெற்றது. அதில் இலங்கை ராணுவத்தின் 2 கட்டளை அதிகாரி, ஒரு கேப்டன், 2 மேஜர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு தமிழ் தேசிய எழுச்சி படை பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீரர்களைக் கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் - இலங்கை கடற்படை பேச்சாளர் :

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன 4 கடற்படை வீரர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், இவர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்றும், இலங்கை கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளதாக இலங்கை தமிழர் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, காணாமல் போன கடற்படை வீரர் படகு எவ்விதமான சேதமும் இன்றி வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்படை வீரர்களும் மர்மமான முறையில் படகுடன் காணாமல் போயிருந்தனர்.


சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு படகு மட்டும் வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவை அண்டிய கரையோரப் பிரதேசங்களில் விசாரணைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு காணாமல் போயுள்ள நான்கு கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க இந்திய கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளதாக இலங்கை தமிழர் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.