Labels

Saturday, December 18, 2010

தமிழிசையே அனைத்து இசைகளின் தாய்





ஒரு முறை தமிழ்நாட்டின் திருவையாற்றில் தியாகராஜர் விழா நடைபெற்றது. அவ்வேளை தண்டபாணி தேசிகர் வாயால் தம் தாய்மொழி தமிழில் பாடிவிட்டார். விழாவுக்கு வந்திருந்த வித்வான்களும் பாகவதர்களும் முகம் சுளித்தனர். தண்டபாணியார் தமிழில் பாடப்பாட இவர்களுக்கு நெஞ்சம் பதைத்தது. வயிறு எரிந்தது. பார்ப்பனர்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தனர். தியாகராஜர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டது; தீட்டுக் கழிக்கப் பெற்றால் அன்றி இனி இம்மேடையில் நாங்கள் பாட மாட்டோம் என்று சீறிப்பாய்ந்தனர்; பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

அப்படி என்ன பெருந்தவறு நடந்து விட்டது? கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என்று காலங்காலமாகச் சொல்லப் பெற்ற தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோ ரின் பாடல்களில் யாதேனும் ஒன்றைப் பாடியிருந்தால் உள்ளம் மகிழ்ந்திருப்பார்கள்.

இந்நிகழ்வு நடைபெற்றது வேறெங்குமல்ல, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்ந்த தமிழ்நாட்டில்; தமிழ் மண்ணில். கர்நாடக சங்கீதம் என்றாலே தியாகராய கீர்த்தனைகள் தான் அல்லது சமஸ்கிருதப் பாடல்கள் தான். தமிழ் அதற்குப் பொருத்தமில்லாத மொழி என்றெல் லாம் கதைகள் ஒரு காலத்தில் பரப்பப்பட்டன. தியாகராஜரும், சியாமா சாஸ்திரியும், முத்துச்சாமி தீட்சிதரும் தோன்றுதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழ் இசையின் ஆதி மும்மூர்த்திகள் தோன்றிவிட்டனர். இவர்கள் தமிழர்கள். ஆனால் இந்தத் தமிழர்களை பூணூல் அணிந்தவர்களின் கண்கள் பார்க்காது. ஏனெனில் இவர்கள் சூத்திரர்கள்; நீச பாசையில் (தமிழில்) பாடுகிறவர்கள்; பூதேவர்களின் செவிகள் இவற்றைக் கேட்குமா? அந்தளவுக்கு பிராமண சமஸ்கிருத வெறித்தனம் தமிழிசையை விட்டுவைக்காமல் சீரழித்தது.

தமிழிசை மும்மூர்த்திகள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பாட்டெழுதி இசையமைத்தனர். மேளக்கார இசையோடு பாடிய அந்த மூவரின் கீர்த்தனங்களையும் பதங்களையும் கேட்டே தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகிய கர்நாடகச் சங்கீத மும்மூர்த்தி களின் இசை உருவெடுத்தது, என்று சொன்னால் மிகை யாகாது என்கிறார் இசைத்துறை அறிஞர் ப.தண்டபாணி.

"ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்ஆயிரம் வேண்டாவோ''

"நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்

திருச்செம்பொன் அம்பலவாணர்,''

என்பது கி.பி 1500-1600 காலக்கட்டத்தில் பிறந்த முத்துத்தாண்டவர் எனும் தமிழனின் பாடல்.
"காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்கைத்தூக்கி யாள் தெய்வமே''

என்ற பாடல் கி.பி. 1712-1787 காலக் கட்டத்தில் வாழ்ந்த மாரிமுத்தாப் பிள்ளை எனும் தமிழனின் பாடலாகும். இப்பாடல்களைப் பழைய திரையிசைப் பாடகிகள் எம்.எல் வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள் முதலானோர் பாடியுள்ளதைக் கேட்டிருக்கலாம்.

கி.பி.1712-1779-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்தான், தமிழில் முதன் முதலில் நாடகக் கீர்த்தனைகள் எழுதிய அருணாச்சலக் கவிராயர் ஆவார். இன்று தமிழ்க் கீர்த்தனங்களுக்கு முன்னோடிகளான இவர்களையும் இவர்கள் பாடல்களையும் புறந்தள்ளி விட்டு, "வாதாபி கணபதி பஜே' என்றும் "மரி மரி நின்னே முரளித' என்று சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழர்கள் தமிழ்க் குழந்தைகள் இசைபயிலுவது வெட்கக் கேடான நிலையாகும். இது தமிழிசையை முற்றாக அழிக்க நடத்தப்படுகின்ற சூழ்ச்சியே.

தமிழனை எதிர்த்ததால் தமிழின மறுமலர்ச்சி இயக்கமும், தமிழை எதிர்த்ததால் தனித்தமிழ் இயக்கமும், தமிழிசையை எதிர்த்ததால் தமிழிசை இயக்கமும் தோன்றலாயின. இரண்டாவது தமிழர் இயக்கமும், இதனைக் கலை வகையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும் சமய வகையில் உயர்திரு மறைமலையடிகளும் அரசியல் வகையில் பெரியார் ஈ.வே.ரா அவர்களும் தோற்றுவித்து வளர்த்தனர்.

மூன்றாவது தமிழிசை இயக்கம். இஃது இலக்கிய வகையில் இசைத் திலகம் தி. இலக்கு மணப் பிள்ளையாலும் துணை தலைமை வகையில் செட்டி நாட்டு மன்னர் அண்ணாமலை செட்டியார் அவர்களாலும் தோற்றுவிக்கப்பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஓங்கி வருகின்றன.

முத்தமிழில் இசைத் தமிழ் இலக்கணத்தையும் பரவலையும் அழித்தொழிக்க முற்பட்ட ஆரிய பார்ப்பண சூழ்ச்சி யின் விளைவாக தமிழிசையைத் தற்காக்க வேண்டும் எனும் வேட்கைத் தன்மானத் தமிழர்க்கு எழுவதில் வியப்பொன்றும் இல்லை. இருப்பினும் தமிழிசை மீட்சி முழுமை பெற்றுவிட்டதாக நாம் கருதிவிட முடியாது.

இன்றளவும் தமிழ்க்குழந்தைகள் தெலுங்குச் சமஸ்கிருத பாடல்களையே பயிற்சியாகப் பயில்கின்றனர். பெரும்பான்மை இசைப் பெயர்கள் இன்று தமிழாக இல்லை.

கல்யாணி, காபி, கானடா,அம்சத்துவணி, மோகனம், பகேசுவரி முதலான பெயர்கள் வட மொழிகளாகவே உள்ளன. பழந்தமிழ் மண்ணில் 11,999 ராகங்கள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்பு கள் காட்டுகின்றன. ஆனால் இன்று முந்நூற்றுக் கும் குறைந்தவையே வழக்கில் உள்ளன. பண்டை நாளில் இசை நுணுக்கம், பஞ்சமரபு, பெருங்குருகு, பெருநாரை முதலான இசைத்தமிழ் நூல்கள் இருந்ததாகச் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

இன்று மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட "பஞ்சமரபு' எனும் நூல் ஒன்றைத் தவிர ஏனைய நூல்கள் கிடைக்கவில்லை. சேறை அறிவனார் யாழ் மரபு, வங்கிய மரபு (குழலியல்) கண்ட மரபு (குரல்) கூத்து மரபு (ஆடல்) தாள மரபு எனும் துறைகளைக் கொண்டு அவற்றுக்குரிய இலக்கணத்தை விளக்கி எழுதப்பட்ட நூலே பஞ்ச மரபு என்பதாகும். இதற்கு அந்நூலாசிரியர் இட்டபெயர் "ஐந்தொகை' என்பதே. 1917-ஆம் ஆண்டு தமிழிசை மேதை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எனும் பெருமகனார் கருணாமிர்த சாகரம் எனும் அரிய தமிழிசை ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். கிடைத்தற்கரிய வரலாற்றுச் செய்திகளையெல்லாம் திரட்டி 1365 பக்கங்களில் இந்நூலை அப்பெருமகன் இயற்றியுள்ளது தமிழிசைக்குச் செய்த பெரும்பேறாகும்.

இனி,

"சரிக மபதநியென் றேழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை'

எனும் சிகண்டி முனிவரின் பாடலில் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒலிக்குறிப்புகளைத் தமிழர்கள் ச ரி க ம ப த நி என்று எழுத்துக்களால் குறித்தாகப் பொருள் விளக்கப்படுகின்றது. பண்டைய நாளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்று இவ்விசை ஒ-லிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை சுருக்கமாக கு து கை உ இ வி தா எனவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயபாவாணர். தமிழ் உயிர் நெடில் எழுத்துக்களான A, C, E, G, H, J, எனும் ஏழையும் இவ்விசை ஒலிகளுக்குத் தமிழர்கள் குறியீடுகளாக அமைத்துள்ளனர். இக்காலத்திலும் பாடலில் ஆளத்தி (ஆலாபணம்) செய்யும்போது இக்குறியீடுகளைப் பாணர்கள் பயன்படுத்துகின்றனர்.

ச ரி க ம ப த நி எனும் ஒலிக்குறிப்புகள் தமிழிலிருந்தே வட மொழிக்குத் திருடப்பட்டதாகவும், தமிழ் சாயலை மறைக்க "சி' எழுத்துக்குப் பகரமாக "ஸி' எனும் கிரந்த எழுத்து பயன் படுத்தப்பட்டதாகவும் அறிஞர் ப.தண்டபாணியார் குறிப்பிடுகின்றார். 700 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் சங்கீத ரத்தினாகாரம் என்னும் இசை நூலை எழுதிய சாரங்கத் தேவர் என்பவரே இவ்வேழு தமிழ்க்குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களைப் புகுத்தி, இவ் வேழும் வடமொழியிலிருந்து வந்தன எனும் புரட்டை(இசை மோசடியை) ஏற்படுத்தினார். இந்தப் புரட்டுகளுக்கும் திருட்டுகளுக்கும் இடையே தான் தமிழிசை மெல்ல மெல்ல வளர்ந்தோங்கி வருகின்றது.

தமிழ்ப்பண்களில் பல வடமொழி பெயரால் அழைக்கப்படுவதை முன்னரே கண்டோம். பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன. இனி, பண்டைய நாளில் இன்றைய ராகங்கள் எவ்வாறு அழைக்கப் பெற்றன என்பதைக் கவனிப்போம்.
பண்டைய தனித்தமிழ்ப் பெயர் இன்றைய பெயர்
1. செம்பாலை அரிகாம்போதி (அரி+காம்+ஓதி)
2. படுமலைப்பாலை நடபைரவி
3. கோடிப்பாலை கரகரப்பிரியா
4. விளரிப்பாலை தோடி
5. செவ்வழிப்பாலை இருமத்திமத் தோடி
6. முல்லைத் தீம்பாணி (சாதாரி) மோகனம்
7. செந்துருத்தி மத்தியமாவதி
8. இந்தளம் இந்தோளம்
9. கொன்றையந் தீங்குழல்(கொல்லி) சுத்த சாவேரி
10. ஆம்பலந்தீங் குழல் சுத்த தன் யாசி
11. அரும்பாலை சங்கராபரணம்
12. மேற்செம்பாலை கல்யாணி

இவ்வாறு இன்றைய வடமொழிப் பெயர் கொண்ட தமிழ் ராகங் களை மீட்டெடுத்து தமிழில் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம். கிரேக்க கணக்கியல் மேதையான பித்தோ கரசு தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர் வகுத்த ஏழ்பெரும் பாலைகளை ஆய்ந்து தம் கிரேக்க நாட்டு இசையைத் திருத்தி அமைத்தார் என வரலாற்றுச் செய்திகள் கூறுகின் றன. இவர் தமிழரின் இடை முறைத்திரிபு இசைமரபு முறையினைப் பின்பற்றி அரும்பாலை எனும் சங்கராபரணத்தை (major diatonic scale) என்று தம் நாட்டில் வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் கணித உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் வட்டத்திற்குரிய (பை) என்னும் குறியீட்டின் அளவு தமிழரின் தமிழிசை கணக்கிலிருந்து பெறப்பட்டதேயாகும். நீர் நிறைந்த ஒரு குளத்தில், ஒரு கல்லை எடுத்துப் போட்டால் வட்டவட்டமாக நீர் அலை பரவுவதைக் காணலாம். இதே போல்தான் இசையிலும் ஒலி- வட்டமாக எழும்பும் எனத் தமிழிசை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வடிப்படையிலேயே வட்ட பாலைமுறை உருவாகியது. இவ்வட்டப் பாலை முறையில் 7 சுரங்களையும் 22 சுருதிகளாக அமைத்தனர் தமிழர். ஒரு வட்டத்தின் குறுக்களவுக்கும் சுற்றளவுக்கும் தொடர்புள்ளதாகையால் வடிவக்கணக்கிற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டது. இதனை 22/7 என்றே வகுத்து வைத்தனர். இதனையே பித்தோகரசு தம் கணக்கியல் கோட்பாடுகளுக்குப் பயன்படுத்தினார். மார்கிரேட் Rm the music of grient and accident எனும் நூலில்.

It is historical fact, however, that about 500 B.C. Pythagoras after his travels in India Systematized the primitive music of his times and gave it new vitality by standardizing its sound combinations into seven scales which were developed downwards, not up wards, in selections of the combinations and permutations of seven sounds out of the twelve semitones in an octave which have formed ever since the fundamental sound substance of European music. These seen scales are identical with seen of the Melakatas (scales) used in south Indian music, and it is note worthy that Strabo has written that Pythagoras was influenced by India in the reforms and developments he made in the music of his time என்று குறிப்பிடுகிறார்.

தமிழிசை அமைப்பு முறையைப் பின்பற்றியே தம் நாட்டு இசைக் கருவியான லயரில் ஏழோடு மேற்கொண்டு ஒரு நரம்பைக் கூட்டி எட்டு நரம்புகளாக அமைத்தார் பித்தோகரசு. இது கிரேக்கத்தில் செய்யப்பெற்ற புரட்சியாகவே கருதப்படுகிறது.

உலக மக்கள் பலரும் தமிழிசையைப் பின்பற்றியுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று. அத்தமிழிசையை அழியாமல் தலைமுறைதோறும் காக்க வேண்டியது மானமுள்ள தமிழர்களின் கடமையாகும். தமிழிசை இயக்கம் மீண்டும் வரலாறு படைக்கத் தமிழராகிய நாம் சமஸ்கிருத மொழித் தாக்கத்தை அகற்றுவோம்.

நன்றி : நக்கீரன் பொதுஅறிவு உலகம்.

போர் குற்றத்தில் ஆதாரத்தை பார்வையிட ஐ.நா. நிபுணர்கள் குழு கொழும்பு வர அனுமதி



இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான புகார் மீது அந்நாட்டு அரசு நியமித்த விசாரணை கமிஷன் திரட்டிய ஆதாரங்களை பார்வையிட கொழும்பு வரலாம் என ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் & ராணுவம் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. கடைசி கட்ட போரின்போது குடியிருப்பு பகுதிகள் மீது ராணுவத்தினர் ஏவுகணைகள் வீசியதில் 7,000 பேர் வரை கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
எனவே, இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த 3 நபர் குழுவை கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார்.
அதை கடுமையாக எதிர்த்த இலங்கை அரசு, ‘இது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க முடியாது என்று கூறியது.

போரின்போது ராணுவத்தினரின் அத்துமீறல் இருந்ததா என நாங்களே விசாரிப்போம் என்று கூறி ஒரு குழுவை இலங்கை அரசு நியமித்தது. இந்த நிலையில், போரின் போது பிடிபட்ட கைதிகள் சிலரையும், பெண் நிருபர் ஒருவரையும் கொடூரமான முறையில் ராணுவத்தினர் கொன்ற வீடியோ காட்சிகள் இங்கிலாந்தின் சேனல் 4 டிவியில் கடந்த மாதம் ஒளிபரப்பானது.
இதையடுத்து, இலங்கைக்கு சென்று போர் குற்ற விசாரணை நடத்துமாறு ஐ.நா.வுக்கு மேலும் கோரிக்கைகள் குவிந்தன. மனித உரிமை அமைப்பு (எச்ஆர்டபிள்யூ), சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு (ஆம்னிஸ்டி இன்டர்நேஷனல்) ஆகியவை ஐ.நா.வை வற்புறுத்தின. இலங்கையில் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கில்லாரி கிளிண்டனிடம் அந்த நாட்டின் இரு சபைகளையும் சேர்ந்த 47 எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளும் வகையில், ஐ.நா. குழு கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி இலங்கை அரசின் செய்தி துறை அமைச்சர் கெகிலியா ரம்புக்வல்லா நேற்று கூறுகையில், “இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்தினரின் அத்துமீறல் மீதான புகார் குறித்து இலங்கை அரசின் குழு விசாரணையை முடித்துள்ளது.

அந்த குழுவிடம் உள்ள ஆதாரங்களை பார்வையிட ஐ.நா. குழு வரலாம் என அதிபர் மகிந்த ராஜபக்சே அழைத்துள்ளார். இது ஐ.நா.வுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐ.நா. குழு தனியாக விசாரணை நடத்த அனுமதியில்லை” என்றார்.

Monday, December 13, 2010

ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் : பொன்சேகா



இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது,


தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.


எந்தவொரு அரசியல் தலைவராவது தனது அரசியல் எதிராளிகளுக்கெதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பாரானால் அவர் ஒரு கோழையாவார். அத்துடன் தனது எதிராளிகளை சிறையில் தள்ளும் அரசியல் தலைவர் ஒரு சர்வாதிகாரியாவார்.


ராஜபக்சேவின் இன்றைய செயற்பாடுகள் போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரப்போவது இல்லை. அதற்குப் பதிலாக அவர்களை மென்மேலும் துன்புறுத்தவே செய்யும். இந்த நிலை தொடரும் பட்சத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் என, சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Saturday, December 11, 2010

கலைஞரே! தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்: சீமான் பேச்சு





நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 10.12.2010 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அவர் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி உரையாற்றினார்.
அப்போது, ’’தமிழகத்திலேயே ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே ஒரு விவகாரத்தில் மட்டுமே ஒற்றுமையாக உள்ளார்கள்.
அந்த ஒற்றுமை கொள்ளை அடிப்பதை பற்றி பேசுவதில்தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை இல்லாமல் அழிப்பதே எங்கள் நோக்கம். கூட்டணியில் இருந்தாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றவர்கள் எங்கே நின்றாலும் தோற்கடிப்போம்.
கார்த்தி சிதம்பரம் எல்லாம் சவால் விடுகிறார்கள். கார்த்தி சிதம்பரமே! எங்களுடன் போட்டி போட கார்த்தியாக(சிதம்பரம்) வா!! சிதம்பரத்தை சேர்த்துக்கொண்டு வராதே.
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த கட்சி. அந்த கட்சியோடு இணைந்து வராதே.
நானோ,திருமாவளவனோ தமிழர்களுக்காக தனித்து ஒரு கட்சியை உருவாக்கினோம்.
உங்களைப்போல அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவில்லை. இதோ வருகிறது தேர்தல். உங்கள் உலக தலைவனை ராகுல்காந்தியை அழைத்து வாருங்கள். போட்டி போடட்டும். மண்ணை கவ்வ வைத்து துரத்துவோம்.
கலைஞர் குடும்பமே காங்கிரசை தூக்கிசுமக்காதே. பீகாரிலேயே 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழகத்தில் அந்த இடம் கூட கிடைக்காது.
கலைஞரே! உங்கள் குடும்பம் ஆண்டது போதும். உங்களது குடும்பம் தமிழகத்திற்காக எவ்வளவு காலம்தான் உழைத்துக்கொண்டிருப்பது.தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். புதியதாக நாங்கள் வந்து ஆளுகிறோம்’’ என்று பேசினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், " நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார்.

கேள்வி: தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?


பதில்: தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம்.


கேள்வி: வரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?


பதில்: நாங்கள் தேர்தலில் போட்டியிட போகிறோம்.


கேள்வி: நீங்கள் போட்டியிடுவீர்களா?


பதில்: நான் போட்டியிடவில்லை.



கேள்வி: ஆளுங்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா?


பதில்: நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.



கேள்வி: முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா?


பதில்: நடக்கலாம்.


இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

சிறையில் இருந்து சீமான் விடுதலை: நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு















தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை மீனவர்களுக்கு எதிரான சில கருத்துகளை சீமான் தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.


அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.


இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


தன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, 10.12.2010 அன்று மதியம் 2.35 மணி அளவில் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் வந்திருந்தனர். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் முழக்கம் அமைப்பைச் சேர்ந்த ஷாகுல் அமீது, இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், பேராசிரியர் தீரன், இயக்குநர் கௌதமன், இயக்குநர் பாலா, மதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி, மதிமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் டி.ராஜா. வேலூர் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் சீமானை கைகுலுக்கி கட்டி அணைத்து வரவேற்றனர்.

இயக்குநர் பாலா 12.30 மணிக்கு வந்து காத்திருந்தார். சிறையில் இருந்து சீமான் வெளியே வந்ததும். அவரை பாலா வரவேற்க ஓடினார். பாலாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத சீமான், ‘நீ ஏண்டா வந்தே..?’ என்று பாசமாக கேட்டார். ‘இல்லண்ணே.....’என்று பாலா சிரித்துக்கொண்டிருந்தார். அப்போது வேக வேகமாக வந்து பாலாவை கட்டிப்பிடித்து அவருக்கு பாசமுடன் முத்தம் கொடுத்தார் சீமான்.
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து, சீமான் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையேறி நாம் தமிழர் கட்சியினரியே எழுச்சி உரை ஆற்றும் வரை அவர் அருகிலே இருந்தார் பாலா. பின்னர் இருவரும் தனித் தனி காரில் சென்னை திரும்பினர்.

பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?





லண்டனில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷ மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது.

கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லாந்து போன தாமரை, மூன்று நாட்களாக புலம்பெயர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு கும்பலை, சுவிட்சர்லாந்து பொலிஸ் சந்தேகத்தின் பேரில் வளைக்க... கத்தி, நச்சு வாயுவைப் பாய்ச்சக்கூடிய ஸ்ப்ரே போன்றவை இருந்திருக்கின்றன. அடுத்த கணமே அவர்களை கஸ்டடிக்கு எடுத்தது பொலிஸ்.

இதற்கிடையில் தாமரைக்கு திடீரென இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவிஸ் பொலிஸ் செய்ய... அவருக்கு ஏதும் விளங்கவில்லை. 'நான் ஒரு பாடலாசிரியர். எனக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு? தமிழ்க் குடும்பங்களைச் சந்திப்பதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களின் பாதுகாப்பே எனக்கு இடைஞ்சலாக இருக்கிறதே...’ எனப் பாதுகாப்பு பொலிஸாரிடம் அவர் முறையிட... அதன் பிறகுதான் மர்ம கும்பல் குறித்த பின்னணியைச் சொல்லி இருக்கிறார்கள் சுவிஸ் பொலிஸார். இதற்கிடையில் கருணாவின் கும்பல் தாமரையை டார்கெட் வைத்தே அந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகச் செய்தி கசிய... நாம் அவரை போனில் தொடர்புகொண்டு பேசினோம்.

கடந்த வருட மாவீரர் தின நிகழ்வைக் காட்டிலும், இந்த முறை தமிழர்களின் ஒருங்கிணைப்பும் முன்னெடுப்பும் அபரிமிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் தென் ஆபிரிக்காவை எப்படிப் புறக்கணித்தனவோ... அதேபோல் ஸ்ரீலங்கா அரசையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற முன்னெடுப்பு உலகம் முழுக்கக் கிளம்பி இருக்கிறது. அதன் ஆரம்பமாகத்தான் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஒருங்கிணைந்து லண்டனில் ராஜபக்ஷவைத் துரத்தி அடித்து இருக்கிறார்கள்.

மேலும் இத்தகைய ஒருங்கிணைவு உண்டாகிவிடக் கூடாது என எண்ணி சிங்கள உளவாளிகள் உலகம் முழுக்க அலைகிறார்கள். சுவிஸில் பிடிபட்டவர்கள் அந்த நிகழ்ச்சியைக் குலைக்கும் நோக்கிலோ, இல்லை... தனிப்பட்ட யாரையாவது குறிவைத்தோதான் வந்திருக்க வேண்டும்.

மாவீரர் நாளுக்காக தமிழகத்தில் இருந்து யார் யார் எங்கெங்கு போகிறார்கள்... அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்ன என்கிற விவரங்களை எல்லாம் கருணாவின் ஆட்கள் முன்கூட்டியே அறிந்துவைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வருகிற யாரையாவது ஒருவரைத் தாக்குவதன் மூலமாக, தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தி அடங்கவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். பிடிபட்டவர்கள் கருணாவின் ஆட்கள்தான் என்பது அவர்களிடம் இருக்கும் டி கார்டு மூலமாகவே உறுதியாகி இருக்கின்றன.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படுவதைப்போல, சுவிஸில் ஏழு வருடங்கள் வாழ்பவர்களுக்கு டி கார்டு வழங்கப்படும். ஆனால், பொலிஸில் பிடிபட்ட கும்பல் சில மாதங்களுக்கு முன்புதான் சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கின்றன. பெரிய அளவில் பணத்தை இறைத்து கருணா தரப்பு அந்தக் கும்பலுக்கு டி கார்டு வாங்கிக் கொடுத்து இருக்கிறது...'' எனச் சொன்னவர் சுவிஸில் நடந்த சந்திப்புகள் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.

ஜேர்மனியில் நடந்த மாவீரர் நிகழ்ச்சிக்குப் போய் இருந்தபோது அங்கே போரில் இறந்த கரும் புலிகளுக்காக நினைவு கோபுரங்களை எழுப்பி இருந்தார்கள். 'கரும் புலிகள்தான் எங்களின் கடவுள்கள்!’ என அவர்கள் சொன்னபோது சிலிர்த்துப் போனேன். 'இலங்கைக்கு எதிரான போரில் ஈழம் தோற்று இருக்கலாம்; ஆனால், போரில் மடிந்த வீரர்களுக்காக நீங்கள் நினைவு கோபுரங்கள் எழுப்பி இருக்கிறீர்கள்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் போரில் மடிந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட வீட்டைக்கூட இந்திய அரசால் முறையாகக் கொடுக்க முடியவில்லை. வீழ்ந்தாலும் ஈழத்தின் சிறப்பு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வல்லரசுக்கு நிகராக உயர்ந்தாலும் இந்தியாவின் சிறப்பு நாறிக்கொண்டுதான் இருக்கிறது!’ என என் மனக் கருத்தை கொஞ்சமும் தயங்காமல் உடைத்துப் பேசினேன். ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மக்களின் உணர்ச்சிப் பேரொலி அடங்க வெகு நேரம் ஆனது.

அங்கே செல்லும் யாரும், ஈழ விடிவுக்கும் சிங்கள அரசைப் போர்க்குற்ற வழக்கில் சிக்கவைக்கும் முடிவுக்கும் ஒருமித்துப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் வெளியே வந்து போராடத் தயங்குவார்கள். ஏனென்றால், அப்படிப் போராடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கள அரசு சம்பந்தப்பட்டவர்களை மறுபடியும் இலங்கைக்குள் நுழையவிடாது. ஆனால், இப்போது அத்தகைய மிரட்டல் உருட்டல்களை எல்லாம் சட்டை செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை.

உலகத் தமிழர்களே ஒன்று திரண்டு நிற்கும் இந்த வேளையிலும் தமிழக முதல்வர் கருணாநிதி, 'ராஜபக்ஷ, ஐ.நா-வின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட முன்வரவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பெண் என்று சொல்லிக்கொள்ளவே கூசுகிறது! என்றார் சலிப்பும் வெறுப்புமாக!

நன்றி: ஜூனியர் விகடன்

அந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்



ஒரு நாளை நினைவுகூரும்போது
அந்த நாளின் எல்லா நிமிடங்களையும் நாம்
கற்பனைசெய்து பார்ப்பதில்லை

இப்போது
அந்த நாளை நினவுகூரும்
இந்த கணத்தில்
நாம் எண்ணிப்பார்ப்பது எதை?
அந்த நாளின் பகலையா?
இரவையா?


நள்ளிரவு கடந்து அந்த நாள் உயிர்பெற்ற
ஆரம்ப கணங்களில்
எப்படி இருந்திருப்பார்கள்?
சில்லிட்டுப்போன காற்றில்
நடுங்கும் உடல்களைக் கைகளால்
போர்த்தியிருந்திருப்பார்களா?
அழும் குழந்தையின் சப்தம்
கவனத்தை ஈர்த்துவிடுமென்று பயந்து
அதன் குரல்வளையை நெரித்திருப்பார்களா?
பகலைநோக்கி ஊர்ந்துகொண்டிருக்கும்
இரவைத்
தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?
அந்த இரவு
குண்டுகளின் சப்தங்களால்
சீரழிக்கப்படாத இரவாக இருந்திருக்குமா?


அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூர முடியும்?
நமக்குத் தெரியாது
எறிகணையொன்று விழுவதற்குமுன் கேட்கும் சப்தம்
அது வெடித்துச் சிதறும்போது
விலகிக் கூடும் இருளின் சிறிய இடைவெளியில்
புலப்படும் முகங்கள்
அவற்றில் அப்பியிருக்கும் பயம்


நமது நாசிகளுக்குத் தெரியாது
கந்தக மணத்தோடு கலந்திருக்கும்
கருகிய உடல்களின் வாசனை
நம் செவிகள் அறியாது
சிதறிய உடல்களின்மீது
தவழும் குழந்தை ஒன்றின் அழுகுரல்

அந்த நாளை
நாம் எப்படி நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரியாது
போர் நடக்கும் இடம்
எப்படி இருக்குமென்பது

அங்கு
இரவுகளில் மனிதர்கள் தூங்கியிருப்பார்களா?
அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில்
மரித்துக்கிடக்கும் தம் உறவுகளைப் பார்த்து
அழுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருந்திருக்குமா?
எதுவுமே நமக்குத் தெரியாது
பதுங்கு குழிகளில் வாழ்வது
அல்லது சாவது
நமக்குத் தெரியவே தெரியாது

அப்படியிருக்கும்போது
அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரிந்தது
நம்முடைய நாள்தான்

அவர்கள் ஒட்டுமொத்தமாகப்
புதைக்கப்பட்ட
அந்த நாளில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்?
திரையரங்குகளில் இருந்தோம்
உணவகங்களில் விருந்துண்டோம்
தொலைக்காட்சிகளில் புதைந்துகிடந்தோம்
பயணித்தோம்
புகைத்தோம்
குடித்தோம்
பாதுகாப்பான நம் வீடுகளில்
புணரவும் செய்தோம்

நம்முடைய நாளைத்தான் நமக்குத் தெரியும்
அதைத்தான் நம்மால் நினைவுகூரமுடியும்

அப்புறம் ஏன்
அறியாத ஒரு நாளைப்பற்றிப் பேசுகிறோம்?
நாம் பார்க்காத உடல்களைப்பற்றி
புதைகுழிகளைப்பற்றி
தொட்டுணராத குருதியைப்பற்றி
வீரத்தைப்பற்றி
தியாகத்தைப்பற்றி
துயரத்தைப்பற்றி
ஏன் பேசுகிறோம்?


நாம் பேசவேண்டும் நமது சுயநலத்தை
நாம் பேசவேண்டும் நமது கையாலாகாத்தனத்தை
நாம் பேசவேண்டும் நமது துரோகத்தை
நாம் பேசவேண்டும் நாம் மனிதர்களே இல்லை
என்ற உணமையை

( முள்ளிவாய்க்கால் கொடுமையின் முதலாண்டு நினைவாக மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட ' எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. )

- ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்.