Saturday, October 2, 2010
நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு!
நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ள செய்தியில்,
நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகள் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 3 நாட்கள் கூடி அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் பிரதமரையும் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.
நியூயார்க் நகரில் ஐநா சபைக்கு அருகேயுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடிய பிரதிநிதிகளுடன் பாரீஸ், லண்டன் நகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடர் கொண்டு விவாதித்தனர்.
இந்த விவாதத்தில், பிரதமருக்கு உதவியாக 3 துணை பிரதமர் பதவிகளும் 7 அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கும். இது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தையும், செனட் என்னும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையையும் கொண்டிருக்கும்.
நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற சபாநாயகராகவும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் முதலாவது பிரதமராக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment