Labels

Monday, March 8, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு) - 4


மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி

மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)

வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.

கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறமென்றால் என்னென்ப தார்? (33)

விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்.

பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (34)

நீர்த்திரை –நீரலை.

உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (35)

எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (36)

மள்ளன் –மறவன்.

ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (37)

உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும் அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (38)

விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்

நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற* நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே –தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரைச்
செந்தழலுக்(கு) ஈதல் சிறப்பு. (39)

நத்துதல் -விரும்புதல்

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (40)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

No comments:

Post a Comment