Labels

Friday, March 26, 2010

தமிழா! - நீ பேசுவது தமிழா...?


அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்...
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்....

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை...
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை...

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

Monday, March 15, 2010

அன்னை அறிக்கை (திராவிடம்)


என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!

உங்கள் கலை ஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
பொங்கி வரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!

ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் மறைத்துத்
தாமட்டும் வாழச் சதை நாணா ஆரியத்தை

நம்புவார் நம்மட்டும் நாளைக் குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்!

பிச்சை எடுப்பவர்கள் பேரதிகாரம் பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?

ஆட்சி அரியாத ஆரியர்கள் ஆளவந்தால்
பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?

மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
தக்க முசுலீமைத் தாக்காதிருப்பாரோ!

உங்கள் கடமை உணர்வீர்கள், ஒன்றுபட்டால்
இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!

ஏசுமதத்தாரும் முசுலீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர் என் பிள்ளைகளே என்றுணர்க!

சாதி மதம் பேசித் தனித்தையே நீரிருந்தால்
தோது தெரிந்தார்கள் உம்மைத் தொலைத் திடுவார்

ஆரியன் இந்தி அவிநாசி ஏற்பாடு
போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே

ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான் தந்தேன்
பூண்ட விலங்கை பொடியாக்க மாட்டீரோ!

மன்னும் குடியரிசின் வான்கொடியை என் கையில்
இன்னே கொடுக்க எழுச்சி யடைவீரோ
- பாவேந்தர் பாரதிதாசன்

Tuesday, March 9, 2010

கடலோர காவல் "வடை'


"தம் எல்லைகளையும்

தம் மக்களையும்

காத்தலே முதல் கடமை'

என்ற வரி

கடலோரக் காவல் படையின்

பாடத்திட்டத்தில்

சேர்க்கப்படவில்லை

அல்லது

அது வகுப்பில் சொல்லப்பட்டபோது

க.கா. வீரர்கள் கேன்டீனில்

வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...



மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வாங்கிய பிரம்மாண்டக் கப்பல்களில்

உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்

ஒழிந்த நேரங்களில்

தரையோரக் காவல் படைகளுக்கு

விருந்து கொடுக்கிறார்கள்...

வடையே

முதன்மைப் பண்டம்!



சிங்களப்படை வந்து தமிழ்மீனவனைக்

கொத்தாக அள்ளித் தூக்கும்போது

க.கா. வீரர்கள்

தங்கள் கப்பல்படையில்

வடைக்கு மாவு

தட்டிக் கொண்டிருக்கும்படி

பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...

பாவம் தும்மலுக்கு நடுவே

நல்ல வடைக்கு

சாத்தியம் நலிவு!



எண்ணெய் குடிக்காத

வடையைத் தட்ட

அவர்கள் போராடும்போது

வகையாக வந்து சிக்குகிறான் தமிழ்மீனவன்!

படகு நிறைய அவன்

மீன் அள்ளிப்போவதை

எப்படிப் பொறுப்பது?



வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்

(ஒருவேளை அதில்தான் எண்ணெய்யை

வடிக்கிறார்களோ என்னவோ...!)

மீனவர்களை

நிர்வாணப்படுத்துகிறார்கள்

(ஒருவேளை அவர்களின் லுங்கிகள்

மாவு உலர்த்தத் தேவையோ...?)

கண்மூடித்தனமாகத்

தாக்குகிறார்கள்

(வடையை சரியாகத்

தட்டமுடியாத வயிற்றெரிச்சல்?)



உச்சக்கட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்

பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது

விழுந்து வெடிக்கிறது...

எண்ணெய் குடிக்காத வடை

ரத்தம் குடிக்கிறது!



வகை வகையான

வடைகளைக்

கப்பலில் பார்வைக்கு வைக்கின்றனர்...

அட்மிரல்களும் தளபதிகளும்

உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து,

(கடாய்) பரிசளிக்கின்றனர்...



சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து

சிங்கள மீனவர்கள் படை எடுத்து வந்து

பணயக் கைதியாகக்

கொண்டு போகிறார்கள்...

வடைசுடுவதன்

தொழில்நுட்ப ரகசியத்தை

அவன் சொல்லும் வரை

"தட்டி' எடுக்கிறார்கள்...



என்னவோ போங்கள்...

வடைசுடவும் வக்கற்ற எனக்கு

வயிற்றெரிச்சலாக

இருக்கிறது...


யாரப்பா அங்கே...

கடலோரக் காவல் கடை...?

எனக்கு ரெண்டு வடை... பார்சல்...!
- கவிதாயினி தாமரை.

Monday, March 8, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு) - 5


சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)



உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

தாவு –தப்பு, குற்றம்.

எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (43)

கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (44)

மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (45)

மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (46)

மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (47)

நிணம் –கொழுப்பு.

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (48)

பண்டு –பழமை; மறு –குற்றம்.

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (49)

புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;
கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.

எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (50)

நண்ணுநர் -நண்பர்

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு) - 4


மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி

மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)

வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.

கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறமென்றால் என்னென்ப தார்? (33)

விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்.

பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (34)

நீர்த்திரை –நீரலை.

உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (35)

எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (36)

மள்ளன் –மறவன்.

ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (37)

உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும் அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (38)

விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்

நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற* நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே –தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரைச்
செந்தழலுக்(கு) ஈதல் சிறப்பு. (39)

நத்துதல் -விரும்புதல்

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (40)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

Saturday, March 6, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 3


இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை

முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*

அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!

தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)



தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க

எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்

கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை

மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)



மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்

நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்ய

வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!

யாண்டும் உனக்கே இசை!* (23)



இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல

‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)

அடக்கபரி அல்லநான் அமாம்!’ எனச்சொன்ன

திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)



தெளியாப் பதர்களன்று செய்தஒப் பத்தால்

நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த

அமைதிப் படையே அமைதி குலைத்துத்

தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)



தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்

வீழ்ந்த படையை விரைந்தேற்கும் –சூழ்ந்த

இகழைக் களையறியா இந்தியா உன்றன்

புகழில் புழுங்கும் புழுத்து! (26)



புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்

கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய் –அழித்தனரே

எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்ய

வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)



விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்

மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்

பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்

ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)



ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்

தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்

எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!

உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)



ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்

பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்

பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ

மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)




குறிப்பு:

முனிதல் – சினங்கொள்ளுதல், தியங்காது – கலங்காது

மல்லர் – வீரர்; உழுவக்கொடி - புலிக்கொடி

வல்லுந்து – லாரி, வேன்; இசை –புகழ்.

குசை –கடிவாளம்; பரி –குதிரை

விரை – மணம்; புரை – குற்றம்; மறவன் – வீரன்; உறுகண் – துன்பம்; ஓர்தல் – உணர்தல்.

ஒழிவின்றி –முடிவின்றி

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 2


பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?

போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*

மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க

உன்போலும் ஆமோ உரை! (11)



உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்

கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;

தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ

உனைநிகர்த் தோனை உலகு! (12)



உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!

இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)

ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்

மார்பிளந்த நீயன்றோ மன்! (13)



மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்

உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய

துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்

கைய! எமக்குநீ காப்பு! (14)



காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்

கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை

பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)

உற்றதுணை ஆனாய் உவந்து! (15)



உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே

உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*

இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்

இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)



என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்

இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்

தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே

அமிழ்தினும் மிக்க அரிது! (17)



அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;

அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது

கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);

உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)



உவரி* நடுவே உதித்த தமிழர்

உவலை*க் கடலில் உழலும் –அவலம்

களையப் பிறந்த கரிகாலா! உன்னை

அளைய*ப் புகுமெம் அகம்! (19)





அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்

பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட

மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி

ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)



குறிப்பு:

கார் -மழைமுகில்

உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்

மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள

உவட்டா -அருவருப்பில்லாத

பொன்றாத -அழிவில்லாத

அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்

உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்

மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 1


காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)


யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)



குறிப்பு:

தாவில்லா – குற்றமில்லாத

முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

அரி - சிங்கம்

உழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில் - உவமையில்லாத

மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்

உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)

புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.

Wednesday, March 3, 2010

பாவலரேறு பெருஞ்சித்திரனார் கவிதை


தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது
குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே
இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

Monday, March 1, 2010

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கவிதை


வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.