Labels

Thursday, February 18, 2010

ஊர்


நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

- புதுவை இரத்தினதுரை

No comments:

Post a Comment