Tuesday, February 23, 2010
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்
விகடன் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.
ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.
தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…
தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”
”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!
பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”
”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
தலைவர் பிரபாகரன் சிந்தனைகள்
இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.
மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.
நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.
குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
உலகில் எல்லா விடுதலைப் போரட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெரிப்பில் குளிப்பது பொதுசனங்களே.
உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.
பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.
ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.
நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.
எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட 'கோலியாத்'தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.
போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.
இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.
சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
சதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.
தனது மனவுலக் ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.
மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
பூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.
மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.
விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.
சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.
மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.
எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது
இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.
பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.
ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.
மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.
எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்
இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.
இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.
இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.
கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.
தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.
கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.
திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.
அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.
இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.
நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.
சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.
போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.
எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.
விடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.
சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.
போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.
எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.
எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.
புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.
உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.
பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.
பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.
நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
என் ஹீரோ பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்
'என் தேசத்து மண்ணே!
உனக்கு என் ரத்தத்தை தருவேன்.
இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'
அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.
கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்
''புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?''னு கேள்வி கேட்கிறார் நிருபர். 'புல்லும் துன்பப்படக்கூடாது'னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்' என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.
குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.
என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, 'அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.
எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.
நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, 'உண்மையை மட்டும் பேசுவது' என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.
கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. 'அக்கா, அக்கா'னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது?
'ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்'னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை?
தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்?
ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.
கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, 'உன்னுடைய ரோல்மாடலா அவ'னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.
முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.
''வன்னியில் நடந்த குண்டுப்வெடிப்பில்
ஐந்துபேர் பலியானார்கள்.
ஐம்பதுபேர் புலியானார்கள்''னு
ஒரு கவிதை படிச்சேன். அதில் இருக்கிற வார்த்தை நயங்களைவிட, கருத்து உண்மைகளுக்கு காந்தம் அதிகம். உண்மை கசப்பா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும். விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். சும்மா, 'உச்' கொட்டிக்கிட்டே இல்லாம..
இன்னும் தொடருவேன்..
நன்றி: தெனாலி.காம்
Monday, February 22, 2010
Friday, February 19, 2010
எங்கேயும் நான் தமிழனாக இல்லை !
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.
பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.
ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.
இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.
டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி
என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!
தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை
அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
நான்
பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!
இன்று நான்
இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நான்
சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!
ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்
அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்
அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை
தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி
செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
- கவிஞர்.தணிகைச்செல்வன்
Thursday, February 18, 2010
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.
யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
- கவிப்பேரரசு வைரமுத்து
ஊர்
நேற்றெம் ஊரிருந்த காற்றில்
இதமான குளிரும்
நேர்த்தியான சுகமுமிருந்தது
சாணிமெழுகிய தலை வாசலில்
சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.
வாசலிறங்கக் கோலமிருந்தது.
வயலில் நம்பிக்கை விளைந்தது.
வெளியே அறியப்படாத எத்தனையோ
உள்ளே வெளிச்சம் நல்கின.
அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்
குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்
நிறையும் மனமிருந்தது.
மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்
இருளெனும் எழிலிருந்தது.
அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க
சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.
ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்
தேவ நிலை சித்தித்தது.
ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,
கூத்துப் பாட்டும்,
நாதஸ்வர மங்கலமும்
தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு
எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.
சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக
பக்கத்திற் சுற்றமிருந்தது.
சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட
அத்தைமார் இருந்தனர்.
புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி
அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட
அம்மான்மார் இருந்தனர்.
சின்னத் திரளிப் பொடியும்
வெள்ளி முரலும்
கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க
குஞ்சாச்சிமா இருந்தனர்.
நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே
பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.
தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர
திருக்கல் வண்டிகள் இருந்தன.
என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.
தையெனிற் பொங்கல்.
சித்திரையிற் கஞ்சி.
ஆடியிற் கூழென
வாய்க்குக்கூட வரையறையிருந்தது.
அப்பனுக்கு மூத்தவன்
ஆத்தாளுக்கு இளையவனென
சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.
ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு
அதுவும் கால்நடையாகப் போகும்
வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.
மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.
அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.
சூடடித்துக் குவித்த நெல்லும்
கிழித்துலர்த்திய ஒடியலும்
நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.
தழுவிப் போனது காற்று.
உருகி உள்ளேறியது உறவு.
கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்
இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,
புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த
ஒற்றையடிப் பாதையிலும்,
வயல் வரப்பிலும்
வாய்க்காற் கரையிலும்
தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்
இணைந்ததும் பிணைந்ததுமென
இருந்தது எம்மூர்களிலும் காதல்.
இன்று எல்லாம் தொலைத்து
இடருருவிக் கிடக்கிறது வனப்பு.
துக்கித்திருக்கிறது சோபிதம்.
முற்றத்து முருங்கை நிறைகாய்
சுமைதாங்காது கிளை முறிய
மரமும் பாறிச் சரிகிறது -
உருவிச் சப்ப ஒருவரில்லை.
கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது
ஒருவரில்லை உரித்துத் தின்ன.
இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்
இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்
உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!
- புதுவை இரத்தினதுரை
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் !
ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…
ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
- கவிதாயினி தாமரை
ஏ சர்வதேச சமூகமே !
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?
வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!
அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்!
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!
- கவிப்பேரரசு வைரமுத்து
இருக்கிறான் தலைவன் நீ நம்படா நம்பு !
இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீ நம்படா நம்பு!
ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம் கிளம்படா கிளம்பு!
தன் மானத் தமிழரின்
தலைமையில் போர் தொடக்கு!
சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!
ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்!
இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களை காலால் மிதிக்கிறான்!
காலம் அழைக்குது!
ஈழம் அழைக்குது!
கடலைத் தாண்டுவோம்!
களத்திலே ஈழ நிலத்திலே
நாமும் நெருப்பைத் தூண்டுவோம்!
சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும் ஒன்றுதான் கிளம்பு!
சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!
வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்!
வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்!
உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய் வரலாறில்லையே!
உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?
இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!
களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம் வாகை சூடுவோம்!
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
நீ ஏசுவல்ல-ஆனால் இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்!
உனக்காக
இதோ ...இதோ ஒரு எழுச்சிப் பயணம்!
சென்னையிலிருந்து கன்னியா குமரி!
செல்கிறோம் எங்கள் இதயங்கள் குமுறி!
நீ
எங்கிருக்கிறாய் என்பது
எங்களுக்குத் தெரியாது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்பதை
உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது!
அவர்கள்-
எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
என்பதைத்தான்
அவர்களும் கூட அறிந்து கொள்ளவில்லை!
நீ
தேசத்தை பிரசவிப்பதற்காக
அன்றாடம் உன்னையே
ஆயுத சிகிச்சைக்கு
ஆளாக்கிக் கொள்கிறாய்!
அவர்களோ-
ஒரு குழந்தையை கொல்வதற்காகத்
தாயின் வயிற்றையே
பீரங்கி கொண்டு பிளக்கப் பார்க்கிறார்கள்!
நீ-
விடுதலையை தேடுகிறாய்;
உன் மக்களுக்கான
விடியலைத் தேடுகிறாய்!
அவர்கள்
உன்னையே தேடுகிறார்கள்!
துப்பாக்கி முனைகளுகுச்
சொல்லி வைக்கிறோம்-
சூரியக் கதிர்களை துளைக்க முடியாது!
எமதர்மக் கைகளை எச்சரிக்கிறோம்-
வெண்ணிலவை வலை வீசி
வீழ்த்தியவர் கிடையாது!
ஒருவனைப் பிடிக்க ஒரு லட்சம் படையா?
உண்ண மறுத்தால் அதற்கும் தடையா?
உலக சரித்திரம் படித்ததே இல்லையா?
இனிமேல்-
காந்தி சிலைகளில் உள்ள கைத்தடியை அகற்றுங்கள்!
அதற்கு பதிலாகத்
துப்பாக்கி ஒன்றை அதன் தோள்மீது மாட்டுங்கள்!
இந்த ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவுக்குத்தான்!
ஆமாம்...
அமைதி என்பதற்கான
புதிய அர்த்ததைப் பூமிக்கு தந்ததனால்!
அன்றொரு நாள்-
பிரபாகரன் எனபது பெயராக இருந்தது.
இப்போது-
பிரபாகரன் என்பது பிரமிப்பாய் ஆனது!
இனிமேல்
பிரபாகரன் எனபது பிரளயமாய் ஆகாதோ?
எங்கள்
இலட்சியக் கனவுகளின் சுமைதாங்கியே!
பொன்னாடை தோள்மீது போர்த்துவதாய்ச் சொல்லி
உன்மீது சிலுவை அறைந்தது யார்?
நீ ஏசுவல்ல-
ஆனால்
இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்!
ஒரு பிரபாகரனாய் அல்ல...
ஒரு லட்சம் பிரபாகரனாய்!
உன்னுடைய
மூச்சுக் காற்று முகாமிட்ட இடமெல்லாம்
பட்டாளம் தனைச்சாய்க்கும் பாசறைகள் உண்டாகும்!
உன்னுடைய
பாதங்கள் நடந்த பாதைகளிலெல்லாம்
புல்லும் கூட புலியாக மாறும்!
உன்னுடைய
சுட்டும் விழிச்சுடர் தொட்ட இடமெல்லாம்
ஜோதி கருவாகும்!
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
அங்கே உருவாகும்!
- கவிஞர் மு.மேத்தா
நாம் அணிவகுத்துள்ளோம்
அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்....
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.
- (தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)
எழுவாய் நீ நெருப்பாய்!
தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று
தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று
உறவை நீ இழக்காதே
தமிழையே மொழிவாய்
பிறமொழி கலக்காதே
கலந்தால் நீ அழிவாய்
இசைவிழா மேடையில்
தமிழை முழக்கு
வசையாரும் பாடினால்
வரலாற்றை விளக்கு
மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே
உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே
தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
பாரதிதாசன் கவிதை
சலுகை போனால் போகட்டும் -என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட - என்
தமிழ் விடுதலை ஆகட்டும்
பிறந்தேன் பிள்ளை யாருக்காக
பெற்றெடுத்த தமிழ் மொழிப் போருக்காக
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக
என் உயிர் போனால் போகட்டும்
என் புகழுடல் மட்டும் நிலைக்கட்டும்
தேனால் செய்த என் செந்தமிழ் தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்
- பாரதிதாசன்