Friday, March 1, 2013
பாலச்சந்திரன் - பாவலர் அறிவுமதி கவிதை
அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!
அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!
என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!
எங்கள் என்பது…
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!
எங்கள் என்பது…
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!
எங்கள் என்பது…
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!
ஆம்…அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
‘ஆண் தாய்’
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்…
நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்!
நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!
சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!
உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!
பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!
பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்…
இது
யார்க்
குற்றம்!
என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!
உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க
உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!
பதில்
சொலுங்கள்!….
-அறிவுமதி-
Tuesday, August 30, 2011
குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் : குயில்தாசன்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கமாக, ‘’செய்யாத குற்றத்திற்காக மகன் பேரறிவாளன் 21 ஆண்டாக சிறையில் வாடுகிறான்.
மகன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே சிறை முன் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்’’ என்று தெரிவித்தார்.
மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றக்கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல் அமைச்சர் கையில் தான் உள்ளது என்று பேரறிவாளனின் தந்தை தெரிவித்தார். தனது மகனை காப்பாற்றி தன்னிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
தூக்குக்கு எதிர்ப்பு: பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம்
ஜனாதிபதி கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் படி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மனுவின் நகல்கள் தமிழக கவர்னர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, உள்துறை செயலாளர், உள்துறை இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களது வக்கீல் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை பைசல் செய்யும் வரை தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரி ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
திங்கள் கிழமை (29.08.2011) மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தூக்குக்கு எதிர்ப்பு -நடிகர், நடிகைகள் போராட்டம் :
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா,
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று (26.08.2011) நடந்தது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித உயிர் அரிதானது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகவில்லை. இந்த நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம். ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது தமிழராக இருந்தாலும் சரி, ஜப்பானியராக இருந்தாலும் சரி, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பதை ஏற்க முடியாது.
இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் படித்தவர். அறிவாளி.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக, நாங்கள் முதல் அமைச்சரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருக்கிறோம்.
பேரறிவாளன் 19 வயதில் ஜெயிலுக்குள் போனவர். இப்போது 40 வயதை கடந்து விட்டார். இத்தனை வருடங்கள் தண்டனையை அனுபவித்த பிறகும் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது, குரூரம். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை கோர்ட்டுக்கு வந்து வாதாடும்போது, தமிழ் இன உணர்வாளர்கள் அத்தனை பேரும் கோர்ட்டு முன்பு ஒன்று கூடுவோம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிர்களை காப்பாற்றக்கோரி, கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை பின்னர் அறிவிப்போம்.''
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
தூக்குக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் இரும்பொறை :
பேரறிவாளன், முருகன்,சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது.
தமிழர் கழகம் புதுக்கோட்டை பாவாணன், நாம் தமிழர் சத்தியமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் தரணி.ரமேஷ் மற்றும் 100க்கணக்காணோர் தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரத்திற்கு இந்த மேலாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி, பின்னர் 22 பேரின் தூக்கு ரத்து செய்யப்பட்டது. அந்த 22 பேரில் ஒருவரான இரும்பொறை இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோட்டில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க முன்வர வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதி 26 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரை ஏழு நாட்களில் தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு தலைவர் உத்தரவு வந்ததாக செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.
அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தூக்குக்கு எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 26.8.2011 அன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார்.
மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார்.
வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இதற்காக 26.8.2011 அன்று நாடாளுமன்ற அவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.
பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற குடியரசு தலைவர், பிரதமருக்கு திருமாவளவன் கடிதம் :
தமிழகத்தில் நடந்த ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை கழித்த பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது .மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும், பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென 26.8.2011 அன்று குரல் எழுப்பினார். அத்துடன் இந்திய குடியரசு தலைவர் பிரத்திபா பாட்டில் அவர்களுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்து இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவதாக அமைந்துவிடும் என்று சுட்டிகாட்டி இருபத்துடன், மரண தண்டனை கொள்கையை இந்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அம்மடல் எழுத்தபட்டுள்ளன. நாடாளுமன்ற செயலகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மகனை மீட்பேன் : அற்புதம்மாள் உருக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி: டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?
பதில்: இல்லை. எந்த வித முயற்சியும் செய்யவில்லை.
கேள்வி: டெல்லியில் எந்த தலைவர்களை சந்தித்து பேசினீர்கள்?
பதில்: டெல்லியில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான பரதன், ராஜா மற்றும் வைகோ ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஒரு வழக்கில் 20 ஆண்டுகளாக தண்டனை பெற்றபின் மேலும் ஒரு தண்டனையாக தூக்கில் போடுவது சரியா என கேட்டனர். 3 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற கோரி தமிழக முதல்வரிடம் மனு தந்து உள்ளீர்களா?
பதில்: ஏற்கனவே தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு தந்து உள்ளோம். அவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நேரில் கோரிக்கை வைப்பேன். தமிழக முதல்வர் சகல அதிகாரம் படைத்தவர். அவர் மனது வைத்தால் 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவிட முடியும். அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)