Labels

Sunday, July 17, 2011

இலங்கை பிரச்னையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்: டி.ராஜா பேட்டி



"இலங்கை பிரச்சினை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. திருச்சியில் 17.07.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சம்பவத்தின் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உள்துறை மந்திரி சிதம்பரத்தின் வாய்ச்சொல்லில் காட்டும் திறமை, அவரது செயல்பாட்டில் இல்லை. உள்துறை பயங்கரவாத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம். இன்னும் 2 வாரத்தில் பாராளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த பிரச்சினை குறித்து கேள்வியை எழுப்புவோம். ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மவுனமாக உள்ளது. இலங்கை பிரச்சினை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம். கறுப்பு பணத்தை மீட்க இந்திய அரசு உறுதிப்பாடு இல்லாமல் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி அரசுகள் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இந்திய அரசு தயக்கம் காட்டுகிறது. கறுப்பு பணம் நாட்டு மக்களுடைய பணம். இதனால் அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பையில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ள சம்பவம் உளவுத்துறை எச்சரிக்கையாக இல்லாததையும், பாதுகாப்பு துறை தயார் நிலையில் இல்லாததையும் காட்டுகிறது.

ஏற்கனவே சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் மீது தவறு இருக்கிறது, தற்போது உள்துறை மந்திரியாக பணியாற்றும்போது அவரது செயல்பாடு திருப்தி இல்லை. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித மீறல்களின் சி.டி.க்களை பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

லோக்பால் சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும். அதில் பிரதமரையும் விசாரிக்க வழிவகை செய்ய வேண்டும். நீதித்துறையின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, July 16, 2011

பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா – கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு



நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.

திடகாத்திரமான, சாமர்த்தியமான எமது செயல்கள் யாவும் சிங்கள தேசத்தை திணற வைக்கவேண்டும். ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி என்ன செய்வது,ஏது செய்வதென்று தெரியாது தடுமாறவேண்டும். எமது ஒவ்வொரு முன்னெடுப்பும் சிங்கள அரசுக்குப் பின்னடைவைத் தரவேண்டும். நீதி வேண்டும் உலகம் எமக்கு நீதி பெற்றுத் தரவேண்டும். அழிக்கப்படும் எம்மினம் அயர்ந்து தூங்க வேண்டும்.

இவையெல்லம் நிறைவுபெற, எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தற்பத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பதுங்கி வாழ்ந்த சிங்களத் தலைமை மீண்டும் பயந்து வாழ வேண்டும். பயத்தைக் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் சிங்கள அரசும், அதே கொள்கையுடன் இயங்கும் தமிழ் அமைப்புக்களும் தக்கபாடம் படிக்கவேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டில் ஒன்றுதான் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிப்பது. இந்தப் புற்க்கணிப்பு காலதாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும். இப்பொருட்களை வாங்கி எம் உடன்பிற்ப்புகளின் அழிவுக்கு நாமும் பாத்திரமாகலாமா? குறிப்பாக, சனல் 4 காட்சிகளைக் கண்டபின்பும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா?

இறக்குமதி செய்யும் பொருட்களால் பெறப்படும் அந்நியச் செலாவணியில் கிடைக்கும் பணத்தால் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டுதானே நிராயுதபாணியான எம் இனத்தை, உயிரிலும் மேலான எம் உறவுகளை காட்டு விலங்குகள் போல் வேட்டையாடி விளையாடுகிறார்கள் அந்தக் கோழையர்கள்.

நாம் அப்பொருட்களை வாங்குவதை நிறுத்துவதோடு நிற்காமல், மாற்றாருக்கும் சிங்கள அரசால் நடாத்தப்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி. எம் வேதனையை விளக்கி, எம் துன்பங்களை எடுத்துரைத்து அவர்களையும் சிறீலங்கா பொருட்களை வாங்காது தடுக்க வேண்டும்.

சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அங்கிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தி, மாற்று நாடுகளிலிருந்து அதே பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்து, அதை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இறக்குமதி செய்பவர்களின் திறமையிலும், ஒத்துழைப்பிலும்தான் இந்த மாற்றத்தை சுமூகமாகவும், துரிதமாக்வும், வெற்றிகரமாகவும் நிறைவுசெய்ய முடியும்.
இதுவரை, சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விற்கும் வியாபார நிலையங்கள் அப்பொருட்களை தமது கடைகளில் விற்பதை நிறுத்தவேண்டும். மாற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களை மட்டுமே விற்கவேண்டும். சிங்கள நாட்டுப் பொருட்களை நாம் விற்பனை செய்வதாதால் நாமே எம் இனத்தை அழிக்க உதவுவதாக அமைந்துவிடுமல்லவா?

விற்பனையாளர்களே! இருக்கும் பொருட்களை விற்பதற்கான காலம் இவ்வாண்டு ஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ). இன்று தொடக்கம் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதைதை நிறுத்திவிடுங்கள். மாற்று நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே வாங்கி விற்குமாறு, அழிக்கப்படும் உறவுகள் சார்பில், உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

எம் இனிய உறவுகளே! சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். ஐப்பேசி மாதம் முதலாம் திகதிக்குப் (Oct 1st ) பிறகு சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கமாட்டோம் என்று இன்றே சபதமெடுத்துச் செயற்படுங்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைப் புறக்கணியுங்கள். மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.

சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை முற்றாகப் புறக்கணிக்கும் நாளான ஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ) உலகளாவிய ரீதியில் ஓர் சரித்திர நிகழ்வாக அமைய வேண்டுமென, வாய்பேசா உறவுகள் சார்பில், உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்.

தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது!



தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகசுந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர்.

தென் சூடான் சட்ட சபையின் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இக்கா அவர்களின் சுதந்திரப் பிரகடன உரையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குழலிசையில் தேசியகீதம் ஒலிக்க, சூடானின் தேசியக்கொடி இறக்கப்பட்டு புதிய தென் சூடான் குடியரசின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

குடியரசு தலைவர் சலிவா கீர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு சத்தியப்பிரமாணத்தை செய்து தென் சூடான் குடியரசின் தலைவராக பதவியேற்று பேசுகையில்,
‘எமது மாவீரர்கள் வீணாக தமது இன்னுயிர்களை அர்ப்பணிக்கவில்லை இந்த நாளுக்காக நாம் 56 ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருக்க வேண்டியிருந்து. இந்த நாள் நிரந்தரமாக என்றைக்கும் எமது மனங்களிலும் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,

’தென் சூடான் மக்கள் சுதந்திரமான மக்களாகி அடையும் மகிழ்ச்சியை, தமிழீழ மக்களும் தெளிவாக புரிந்துகொண்டு அந்த மகிழ்வில் பங்குகொள்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் தென் சூடான் மக்களுக்கு, அவர்களின் விடுதலைக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்கி அவர்களது உறுதியையும், வீரத்தையும் தமிழீழ மக்கள் பாராட்டுகிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

தென் சூடான் வானொலி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான நேர்காணலை ஒலிபரப்பியது. தென் சூடானின் சுதந்திரதின விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியது மட்டுமன்றி, அங்கு தொடர்ந்து தங்கிநின்று தென் சூடானின் அபிவிருத்திக்கு குறித்த துறைகளில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் துறைசார் வல்லுனர்கள், உதவக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தென் சூடான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினர்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சுதந்திரதின விழாவில் பங்குகொள்ள வந்திருந்த பல வெளிநாட்டு அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஈழத்தமிழரின் நிலைக்கும், தென் சூடானின் கடந்தகாலத்துக்கும் இடையேயான பொதுவான தன்மைகளை விளக்கினர். மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு புரிந்துவரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வழங்கினர்.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுயாக் அவர்களை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது.

தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழமக்களுடனான தமது உறுதிப்பாட்டை குறிப்பிட்டும் அவர் உரையாற்றியிருந்தார்.

தென் சூடானில் இடம்பெற்றது போல ஈழத்திலும் சர்வதேச கண்காணிப்புடனான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

2009 இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழின படுகொலையால் தமிழர்களுக்கு தனியான நாடு ஒன்றே அவர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற வகையில் தமிழரின் தனிநாட்டு கோரிக்கை மேலும் நியாயமானது என்பது இங்கு குறிப்பிட்டு காட்டப்படுள்ளது.

ஓ ஈழம் (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி



ஓ ஈழ‌ம் என்ற‌ பெயரில் க‌ன்ன‌ட‌ மொழியில் வெளிவ‌ந்த‌ நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய க‌ட்டுரையின் த‌மிழாக்க‌ம்.
மே 19,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ரும், க‌வ‌ர்ந்திழுக்க‌க்கூடிய‌ ஆளுமை கொண்ட‌வ‌ருமான‌ மேத‌கு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளை இல‌ங்கை இராணுவ‌ம் கொன்றுவிட்ட‌தாக‌ இல‌ங்கை உல‌குக்கு அறிவித்த‌து. தேசிய‌ம், உறுதியான‌ கொள்கை பிடிப்பு, இர‌த்த‌க்க‌ளறியான‌ போர்க்க‌ள‌ங்க‌ள், தியாகங்கள், சூழ்ச்சிக‌ள், த‌விர்த்திருக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல ப‌டுகொலைக‌ள் (பொதும‌க்க‌ளின‌தும், போராளிக‌ளின‌தும்) கொண்ட‌ இல‌ங்கையின் வ‌ர‌லாற்றில் ஒரு முக்கிய‌ அத்தியாய‌ம் முடிவுக்கு வ‌ந்த‌து. தமிழ்ப்போராளிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரில் வெற்றிபெற்றதாக இல‌ங்கை அதிப‌ர் இராச‌ப‌க்சே அறிவித்தார். இந்த‌ அறிவிப்பு த‌மிழ் ம‌க்க‌ளின் ஈழ‌த்தேச‌க் க‌ன‌வுக‌ளை ஒரு முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌து….போர் நடைபெற்ற பொழுதே இலங்கை இராணுவத்தின் அற‌ம்த‌வ‌றிய‌, ஒழுக்க‌க்கேடான‌ கொலைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உல‌க‌ ச‌மூதாய‌த்தைச் சென்ற‌டைந்தது, ஆனால் இராணுவம் மக்களின் மீது மேற்கொண்ட க‌ருணைய‌ற்ற‌ ப‌டுகொலைக‌ள் ப‌ற்றி போர் முடிந்த‌ பின்ன‌ர் வெளிவ‌ந்த எல்லாத்த‌க‌வ‌ல்களும் உலகெங்கும் வாழும் ச‌மூக அக்கறைக் கொண்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனித உரிமை சட்டங்களை மீறி பொதும‌க்க‌ளைக் கொலை செய்யும் ப‌ட‌ங்க‌ளும், நாசிக்க‌ளின் வதைமுகாம்க‌ளை நினைவுப்ப‌டுத்தும் இல‌ங்கை அர‌சின் ‘ந‌ல‌ன்புரி முகாம்கள்’ என்ற‌ வ‌தை முகாம் புகைப்ப‌ட‌ங்க‌ளும், காணொளிக‌ளும் இல‌ங்கை அர‌சின் பொய்பிர‌ச்சார‌ங்க‌ளுக்கு எதிரான‌ வ‌லுவான‌ ஆதார‌ங்க‌ளாகின‌. பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு இந்தியாவிலிருந்து பெற‌ப்ப‌ட்ட‌ செவிவ‌ழிச்செய்திக‌ள் மூல‌மாக‌ த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ளைப் ப‌ற்றி தெரியும், ஆனால் த‌ர‌வுக‌ளும், புனைவுக‌ளும் மிகுந்த‌ த‌மிழ்த் தேசிய‌ப் போராட்ட‌ வ‌ர‌லாற்றைப்ப‌ற்றியும், அத‌ன் அர‌சிய‌ல் இய‌க்க‌ங்க‌ளைப் ப‌ற்றியும், அந்த‌ இய‌க்க‌த்தின் வர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ த‌லைவனைப் ப‌ற்றியும் இவ‌ர்க‌ளில் யாரும் அறிந்திருக்க‌மாட்டார்க‌ள். இது ஈழப்போராட்டத்தைப் பற்றி வெளிவந்த புத்த‌க‌ங்க‌ள், கையெழுத்துப்பிர‌திக‌ள், ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ செய்திக‌ள், இணைய‌த்தில் வ‌ந்த‌ செய்திக‌ளை எல்லாம் தொகுத்து யாராவ‌து ஒரு நூலாக‌ வெளியிட மாட்டார்க‌ளா? என்ற‌ தேவையை உருவாக்கிய‌து, திரு.குமார் பருடைக்கட்டி எழுதி, கன்ன‌ட‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளில் ம‌திப்புமிக்க‌ ப‌திப்ப‌க‌மான‌ ‘ல‌ங்கேசு பிர‌க‌ச‌னா’ ப‌திப்ப‌க‌ம் வெளியிட்ட‌ “ஓ ஈழ‌ம்” என்ற‌ புத்த‌க‌த்தின் மூல‌ம் க‌ன்ன‌ட‌ர்க‌ளுக்கு மேற்கூறிய‌ தேவையான‌து நிறைவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இலங்கையில் இறுதிப் போர் முடிந்த உடன் வெளிவந்த 360 ப‌க்க‌ங்கள் கொண்ட இப்புத்த‌கம் ஈழ‌ப்போராட்ட‌ம் ப‌ற்றிய‌ கேள்விக‌ளை அந்த‌ போராட்டக் களத்தின் உள்ளும், வெளியும் இருந்த கள நிலைப்பற்றிய தகவல்களையும், க‌டுஞ்சிக்க‌ல்க‌ளையும் தெளிவாக‌ ஆராய்ந்து வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்துகின்றது. இந்த‌ப் புத்த‌க‌த்தின் மிக‌ முக்கிய‌மான‌ அம்ச‌ம் என்ன‌வென்றால் இப்புத்த‌கம் வாசகர்களுக்கு ஈழ‌ப்போராட்ட‌த்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான எல்லா கால‌க்க‌ட்ட‌த்தையும் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து. அதுமட்டுமின்றி இப்புத்த‌க‌ம் த‌ற்கால‌ நிக‌ழ்வுக‌ளையும் ஆராய்ந்து அந்த‌ போராட்ட‌த்தைப்ப‌ற்றிய‌ முழுமையான‌ சித்திர‌த்தை வ‌ரைவ‌தால் இது இந்தியாவில் வாழும் இந்தியர்களாகிய எங்க‌ளுக்கு அண்டை நாடான இலங்கையில்(இந்தியாவுடன் கலாச்சார, வரலாற்று தொடர்புகள் கொண்டது இலங்கை) என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌தைப் புரிந்து கொள்வதில் மிக‌ முக்கிய‌மான‌ ப‌ங்காற்றுகின்ற‌லது.

இந்த‌ புத்த‌க‌ம் ப‌னிரெண்டு அத்தியாய‌ங்க‌ளைக் கொண்ட‌து. முத‌ல் அத்தியாய‌ம் இல‌ங்கையின் பூர்வ‌குடிக‌ளைப் ப‌ற்றி அறிய‌த்த‌ருகின்ற‌து. முதல் அத்தியாயம் இலங்கையில் பூர்வகுடிகளான‌ திராவிட‌ர்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்திற்கு ந‌ம்மை அழைத்துச்செல்கின்ற‌து. திராவிட‌ர்க‌ளே அம்ம‌ண்ணின் உண்மையான‌ பூர்வ‌குடிக‌ளாவ‌ர். இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அங்கு சென்ற‌ விச‌ய‌ன் என்ற‌ ம‌ன்ன‌னைப் ப‌ற்றியும் அவ‌ன் அங்கு அமைத்த சிங்கள அர‌சைப் ப‌ற்றியும் விள‌க்குகின்ற‌து நூல். திரு.குமார் அவ‌ர்க‌ள் இல‌ங்கையின் வ‌ள‌ர்ச்சியை, சிங்க‌ள‌, த‌மிழ், இசுலாமிய‌ குழும‌ங்க‌ளுக்கிடையேயான‌ போட்டியும், ஐயுற‌வும் கொண்டு ஒருங்கிணைந்து வாழ்ந்த‌ வ‌ர‌லாற்றின் வாயிலாக‌ கூறுகின்றார்.

இர‌ண்டாவ‌து அத்தியாய‌ம் ஆங்கிலேய‌ ஆக்கிர‌மிப்பாள‌ர்கள் கொண்டு வந்த‌ “பிரித்தாளும் சூழ்ச்சியைப்” ப‌ற்றியும், அந்த‌ ஏகாதிப‌த்திய‌த்திட‌ம் இருந்து விடுத‌லை பெறுவ‌த‌ற்காக‌ சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ளைப் ப‌ற்றியும் விள‌க்குகின்ற‌து. ஆங்கிலேய‌ர்க‌ளால் சிலோன் என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ இன்றைய‌ இல‌ங்கை 1948ல் சுத‌ந்திர‌ம் அடைகின்றது. சுதந்திரம் பெற்ற அன்றைய நாளிலிருந்து ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக‌ சிங்க‌ள‌, த‌மிழ் இன‌ங்க‌ளுக்கிடையே உருவான‌ ப‌கைமை உண‌ர்வு மேலும் வ‌ள‌ர்வ‌தற்கான‌ விதைக‌ள் இங்கே தான் விதைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. முத‌ல் பிர‌த‌மரான‌ சேன‌நாய‌க‌ த‌மிழ் ம‌க்க‌ளின் மீதான‌ முத‌ல் தாக்குத‌லைத் தொடுத்தார். ஆம் இந்திய‌த் த‌மிழ‌ர்க‌ளான‌ ம‌லைய‌க‌த்த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் ப‌றித்தார். (இம்ம‌க்க‌ளே இல‌ங்கையின் தேசிய‌ வ‌ருமான‌த்தின் முக்கிய‌ ப‌ங்கான‌ தேயிலைத் தோட்ட‌த்தை த‌ங்க‌ள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய‌வ‌ர்க‌ள் என்பதை நாம் நினைவு கூற‌வேண்டும்).


மூன்றாவ‌து அத்தியாய‌ம் 1956ல் அர‌சு கொண்டு வ‌ந்த‌ “சிங்க‌ள‌ம் ம‌ட்டுமே” அர‌சின் அதிகார‌பூர்வ‌மான‌ மொழி என்ற‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் எவ்வாறு அர‌சிலிருந்தும், அர‌சிய‌ல‌லிருந்தும் ப‌டிப்ப‌டியாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை விள‌க்குகின்ற‌து. த‌மிழ‌ர்களின் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இலங்கையில் கொலைக‌ளும், அத‌ன் விளைவாக‌ ஏற்ப‌டும் எதிர் கொலைக‌ளும் 1976-77 லிருந்து தொட‌ங்குகின்ற‌ன‌. இவை எல்லாம் அங்கு இருந்த‌ த‌மிழ் போராளிக்குழுக்க‌ளுக்கு இடையே ஏற்ப‌ட்ட‌ன‌. இந்த‌க் குழுக்க‌ள் தங்களுக்குள்ளே இரத்தக்களறி மிகுந்த சண்டைகளைப் போட்டுக்கொண்டே த‌மிழ் ஈழ‌ம் என்ற‌ இல‌க்கை நோக்கி போராடின‌.

அத்தியாய‌ம் நான்கிலிருந்து ஒன்ப‌து வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பு எப்ப‌டி ஒரு முண்ண‌னி அமைப்பாக‌வும், த‌மிழ‌ர்களின் அரசியல் நோக்கிற்கான‌‌ ஒரே அமைப்பாக‌ மாறிய‌து என்ப‌தை விள‌க்குகின்ற‌து. மேலும் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் த‌ங்க‌ளின் இல‌ட்சிய‌மான‌ த‌மிழீழ‌த்தை அடைய‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட வன்முறை வழிமுறையை எவ்வாறு ப‌ய‌ன்ப‌டுத்தினார்க‌ள் என்ப‌தையும் கூறுகின்ற‌து. இந்த‌ நேர‌த்தில் இந்தியா த‌ன‌து புவிசார் அர‌சிய‌ல் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ இந்த‌ பிர‌ச்ச‌னையில் த‌மிழ‌ர்க‌ளுக்கும், இல‌ங்கை அர‌சிற்கும் இடையில் வ‌ந்து சிக்குகின்ற‌து. இல‌ங்கையின் உள்நாட்டுப் பிர‌ச்ச‌னை, உல‌க‌ அர‌ங்கிற்கு உள்ளே வ‌ருகின்ற‌து. இந்திய‌ அமைதிப் ப‌டை இல‌ங்கைக்குள் சென்றது இந்தியாவின் நிலையை மேலும் மோச‌மாக்குகின்ற‌து. எந்த‌ ம‌க்க‌ளைப் பாதுகாக்க‌ அல்லது பெய‌ர‌ள‌வில் அப்படி சொல்லிக் கொண்டு இந்திய‌ப் பாதுகாப்பு ப‌டை அனுப்ப‌ப்ப‌ட்ட‌தோ, அந்த‌ ம‌க்களுடனே போரி‌ட்டது இந்திய படை.

அத்தியாய‌ம் ப‌த்து இந்த‌ பிர‌ச்ச‌னையைத் தீர்ப்ப‌த‌ற்காக‌ முன்னெடுக்க‌ப்ப‌ட்ட புதிய‌ முய‌ற்சிக‌ளை விள‌க்குகின்ற‌து. சண்டை புரிந்து வந்த இலங்கை அர‌சுக்கும், தமிழீழ விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ச‌ம‌ர‌ச‌ப் பேச்சாள‌ராக‌ நார்வே அர‌சு உள்ளே வ‌ந்‌து இர‌ண்டு த‌ர‌ப்புக்கும் இடையிலான‌ பேச்சுவார்த்தையைத் தொட‌ங்கி வைத்த‌து. ஆனால் இந்த‌ ச‌ம‌ர‌ச‌ பேச்சுவார்த்தை நீண்ட‌ நாட்க‌ளுக்கு நீடிக்க‌வில்லை. இது இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையேயான‌ இறுதிப் போரைத் தொட‌ங்கிய‌து. இது அத்தியாய‌ம் ப‌தினொன்றில் தெளிவாக‌ விள‌க்க‌ப்ப‌டுகின்ற‌து. இறுதியாக‌ இந்த‌ப் போர் மே 18,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ர் திரு.பிர‌பாக‌ர‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌துட‌ன் முடிவுக்கு வ‌ந்த‌து. இறுதி அத்தியாய‌மான‌ ப‌னிரெண்டாவ‌து அத்தியாய‌ம் இலங்கை அரசு எவ்வாறு திட்டமிட்டு த‌மிழ‌ர்களை அந்நியப்படுத்தியது என்பதையும், தமிழர்களுக்கு எதிராக‌ ந‌ட‌ந்த‌ சித்ர‌வ‌தைக‌ளையும் விள‌க்குகின்ற‌து. மேலும் எந்த‌ வித‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொண்டு த‌ற்பொழுது உள்ள‌ பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌து என்றும் கூறுகின்ற‌து.
திரு.குமார் அவ‌ர்க‌ள் த‌மிழ் ஈழ‌ அர‌சிய‌ல் போராட்ட‌ வ‌ர‌லாற்றை ம‌ட்டும‌ல்லாது போர் முடிந்த வரையிலான முழு இல‌ங்கையின் வ‌ர‌லாற்றையும் த‌ன்னுடைய‌ எழுத்தில் கொண்டுவ‌ருவ‌தில் வெற்றிய‌டைந்திருக்கின்றார். அதும‌ட்டுமின்றி தெளிவாகவும், நேர்மையான ஆய்வுகளோடும் அவர் தமிழ் போராளிக‌ளை வெறும‌னே பாராட்டிவிட்டு ம‌ட்டும் செல்லாமல், அவ‌ர்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களையும், போராளிகள் செய்த‌‌ த‌வ‌றுக‌ளையும் விம‌ர்ச‌ன‌ம் செய்கின்றார். இவை எல்லாம் இந்த‌ புத்த‌க‌த்திற்கான‌ நோக்க‌த்தையும், அவ‌ர‌து கடுமையான உழைப்பையும் நமக்கு காட்டுகின்ற‌து.

“ஓ ஈழ‌ம்” என்ற இப்புத்த‌க‌ம் ஈழ‌ப்போராட்ட‌த்தின் ச‌ம‌கால வ‌ர‌லாற்றை விள‌க்கும் அதே நேர‌த்தில், ச‌மூக‌ அக்க‌றைக் கொண்ட‌ அனைத்து குழுக்க‌ளும் நல்லிணக்கத்தோடு ஒருங்கிணைந்து பிர‌ச்ச‌னைக‌ளைத் தீர்ப்ப‌த‌ற்கான‌ உறுதியோடு செய‌ல்ப‌ட‌வேண்டும் என‌ ந‌ம‌க்கு க‌ற்பிக்கின்ற‌து. அர‌ச‌ அதிகார‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் ந‌ல‌னைக் க‌ருத்தில் கொண்டு தான் செய‌ல்ப‌ட‌வேண்டும், அவ்வாறு செய‌ல்ப‌ட‌ த‌வ‌றும் போது த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளுக்கு அவர்கள் இழைக்கும் துன்பங்கள், அவர்களுக்கு(அரசுகளுக்கு) வ‌ர‌லாற்றில் மாறாத‌ க‌ள‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்திவிடும்.

போருக்கு பிந்தைய‌ கால கட்டம் த‌மிழ் ம‌க்கள் எவ்வாறு இராணுவ‌ம‌யமாக்க‌ப்ப‌ட்ட‌ சூழ‌லில் அங்கு எந்த‌ ஒரு உரிமையும‌ற்று அல்ல‌ல்ப‌டுகின்றார்க‌ள் என்பதை நமக்கு தெளிவாக்குகின்ற‌து. எந்த‌ ஒரு பொறுப்புள்ள நாகரிகமான அர‌சும் இதை போன்று செய‌ல்ப‌டாது. அங்குள்ள‌ அர‌ச‌மைப்பு என்ப‌து அப்பாவி பொதும‌க்க‌ளை ஒடுக்கி அக‌ற்றுவ‌த‌ற்கான எல்லா நெளிவு சுளிவுக‌ளையும் கொண்டே உள்ள‌து. அவ‌ர்க‌ள் கூறும் “ந‌ல‌ன் புரிமுகாம்க‌ள்” என்ப‌வையோ ந‌ம‌க்கு நாசி செர்மனியின் “வ‌தை முகாம்க‌ளையே” நினைவூட்டுகின்ற‌து. மேலும் த‌ற்பொழுது ந‌ம‌க்கு கிடைக்கும் காணொளிக‌ளும், புகைப்ப‌ட‌ங்க‌ளும் அங்கு எவ்வ‌ள‌வு மோச‌மான‌ சூழ்நிலையில் ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தை ந‌ம‌க்கு காட்டுகின்ற‌து. உல‌க‌ ச‌மூதாய‌ம் இல‌ங்கை அர‌சுக்கு நெருக்குத‌ல் கொடுத்து அந்த‌ அரசு ப‌ன்னாட்டு மனித உரிமை ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளைப் பின்ப‌ற்றும்ப‌டியும், அங்கு ம‌க்க‌ள் ஒரு கௌர‌வ‌மான‌ வாழ்வு வாழ்வ‌தற்கான‌ சூழலை அரசு உருவாக்க‌‌ வேண்டும். இல‌ங்கை அர‌சு த‌ன் ம‌க்க‌ளின் ஒரு ப‌குதியின‌ருட‌னே போரிட‌வும், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளைக் கொலை செய்ய‌வும் உத‌விய‌ இந்திய‌ அர‌சு இத‌ற்கான‌ ப‌ரிகார‌மாக‌ மேற்கூறிய‌வ‌ற்றை முன்னின்று செய்ய‌ வேண்டும். இந்தியாவில் உள்ள ச‌மூக‌ அமைப்புக‌ள் எல்லாம் இந்திய அரசு இந்த வழியில் பயணம் செய்வதற்கான‌‌ நெருக்குத‌லை அர‌சுக்கு கொடுக்க‌ வேண்டும். பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உட‌ன‌டியாக‌ ம‌றுவாழ்வுக்கு தேவையான‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்ய‌ வேண்டும், அதுடனாகவே இல‌ங்கை அர‌சு தன் குடிமக்களின் மீதே செய்த‌ குற்ற‌ங்க‌ள் அனைத்தும் விசாரிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

மாவீரன் லெப்.சீலனின் 28 ஆவது வீரவணக்க நாள்











சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார்.

மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை.பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?எவ்வாறு தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்? என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.

இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது.

மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)தலைவர் பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார். சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.

புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.சீலனின் இறுதி நாள் பற்றி. சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.

புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.

சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.
சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளும் தமிழ்மக்களும் தமது போராட்டம்பற்றி சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும்கூட எடுத்துக்கூறி அவர்கள் ஈழப்போராட்டத்தின் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்.ஆனால் தமிழர்களில் ஒரு சிறுபகுதியினர் உலகம் தட்டையானது என்ற பிடிவாதத்துடன் பிரான்ஸிலிருக்கும் ஒரு தொகுதியினர்போல ஈழப்போராட்டத்தின் உண்மைநிலையை உணர மறுத்துநிற்பதுதான்.சார்ள்ஸ் அன்ரனி என்பவர் ஈழப்போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரர்களில் ஒருவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால தாக்குதல் சம்பவங்களில் பங்கேற்ற அற்புதமான வீரன்.தாக்குதல்களை சிறப்பாக ஒழுங்கமைத்து ஒருங்கமைத்து அதன்மூலம் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவந்தவர்.திருகோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலகட்டங்களில் – எழுபதுகளின் பிற்பகுதியில் – அப்போதிருந்தவர்களில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் தலைவர் பிரபாகரனின் உயிர்நண்பனாக இருந்தார்.அக்காலப்குதியில் சிங்கள இராணுவ,பொலீஸாருக்கு எதிரான கெரில்லா தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்.1982 இல் உமாமகேஸ்வரன் தனது விசுவாசிகள் சிலருடன் விடுதலைப்புலிகள் அமைப்பலிருந்து விலகிச்சென்றதும் புலிகளின் ஆட்பலம் குறைந்துவிட்டது என்றும் அதனால் அவர்களின் இராணுவபலம் குறைந்துவிட்டது ஏனைய போராளி இயக்கங்கள் கதைகளைப்பரப்பின.அந்தக்கதைகளுக்கு ஆப்பு வைத்து புலிகளின் பலத்தை நிரூபித்து தமக்கு மேலும் பலம் சேர்த்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தாக்குதலே அது.(உமாமகேஸ்வரனின் வெளியேற்றத்துக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதலுக்கு முன்னதாக நெல்லியடியில் பொலீஸ் ரோந்து அணி மீதும் பொன்னாலை கடற்கரையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வரவை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் எதிர்பார்த்தஅளவுக்கு புலிகளுக்கு வெற்றியைத்தரவில்லை)1982 ஒக்டோபர் 27 ஆம் திகதி சார்ள்ஸ் அன்ரனி தலைமையில் அருணா,சங்கர்,சந்தோசம்,மாத்தையா,புலேந்திரன்,ரகு,பஷீர்காக்கா ஆகியோர் அடங்கிய எட்டுப்பேர் அடங்கிய புலிகள் குழு மினி வானொன்றில் சாவகச்சேரி பொலீஸ்நிலையத்துக்கு விரைந்தது.பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக வானை நிறுத்திவிட்டு இறங்கிய சார்ள்ஸ் அன்ரனி தலைமையிலான ஒரு தொகுதியினர் வாசலில் காவலுக்கு நின்ற பொலீஸை சுட்டுவிட்டு உள்ளே சென்று ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்து பார்த்து ‘க்ளியர’; பண்ணிக்கொண்டு சென்றனர்.இந்நேரத்தில் அருணாவும் பஷீர்காக்காவும் அங்கிருந்த பொலீஸின் ஆயுதங்களை அள்ளினர்.திடீர்தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாது தப்பிய ஒடிய பொலீஸார் ஒருவர் மாடியிலிருந்து குதித்து கால் முறிந்தது.ஆனால் அங்கு மேல்மாடியில் நின்று உஷாரான சில பொலீஸார் திருப்பிசுட்டதில் புலேந்திரனின் தோளில் காயம்.ரகுவின்; வலது கைஎலும்பு முறிந்தது.சார்ள்ஸ் அன்ரனிக்கு கணுக்காலில் காயம்.பொலீஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு எஸ்.எம்.ஜி,19 ரிப்பீட்டர்கள்,9 ரைபிள்ஸ்,ஒரு பிஸ்டல் ஆகியவற்றையும் காயமடைந்தவர்களையும் மற்றவர்களையும் அருணா வானில் தூக்கிப்போட அங்கிருந்து அனைவரும் தப்பினர்.தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இல்லாத நேரங்களில் புலிகளின் பதில் தளபதியாக பொறுப்புவகிக்கும் சார்ள்ஸ் அன்ரனிக்கு காயம் ஏற்பட்டதால் தலைவர் விரைந்து செயற்பட்டார்.பாக்குநீரிணை வழியாக சார்ள்ஸ் அன்ரனியை தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கொண்டுசென்று சிகிச்சை அளித்த பிரபா தன் நண்பனுடன் கூடவிருந்து அவனுக்கு சுகமானதும் அவனுடன் தாயகம் திரும்பினார்.1983 ஜீலை 15 ஆம் திகதி….சார்ள்ஸ் அன்ரனி அருணா மற்றும் கணேசுடன் மீசாலையில் ஒரு வளவில் இருந்து இளநீர் குடித்துக்கொண்டிருந்தான்.எவனோ எட்டப்பன் சிங்களப்படைகளுக்கு இந்தத்தகவலை கொடுக்க கவசவாகனங்கள் ஜீப்களில் திடீரெனவந்த சிங்களப்படையினர் சார்ள் அன்ரனி இருந்த இடத்தை முற்றுகையிட்டனர்.இளைஞன் ஒருவன் ‘ஆமி வந்துவிட்டான்’ என்று ஒடி வந்து விஷயத்தை சொல்ல சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மீசாலை வயற்கரையால் சார்ள்ஸ் அன்ரனியும் ஏனைய இருவரும் பறந்தனர்.ஏற்கனவே சாவகச்சேரி தாக்குதலில் கணுக்காலில் விழுப்புண் அடைந்த சார்ள்ஸ் அன்ரனியால் வேகமாக ஓடமுடியவில்லை.அப்போது இராணுவம் கலைத்துச்சுட்டதில் இனி ஓடமுடியாது என்றெண்ணிய சார்ள்ஸ் அன்ரனி அருணாவையும் கணேசையும் ஓடித்தப்புமாறு கலைத்துவிட்டு எதிரியின் கைகளில் சிக்காமல் வயல்வெளிக்குள்ளேயே தன்னை மாய்த்துக்கொண்டான்.நீர்வேலியில் கிட்டு,செல்லக்களி மற்றும் பண்டிதர் ஆகியோருடன் இயக்கத்தின் நிதிவிடயங்கள் சம்மந்தமாக பேசிக்கொண்டிருந்த பிரபாவுக்கு சார்ள்ஸ் அன்ரனி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.பிரபா அந்தக்கணம் அடைந்த உணர்வு பற்றி கிட்டு பின்னர் ஒரு முறை எழுதிய கட்டுரையில் “தலைவர் அப்போது அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் வெளிப்படுத்துவது சாத்தியமற்றது.”-என்று குறிப்பிட்டிருந்தார்.ஒரு ஒப்பற்ற தளபதி மட்டுமல்லாமல் நல்ல நண்பனையும் அன்று தலைவர் பிரபா இழந்தார்.மூன்று வருடங்களின் பின்னர் பிறந்த தனது முதலாவது பிள்ளைக்கு தலைவர் தனது நண்பனின் ஞாபகார்த்தமாக அவனது பெயரையே சூட்டினார்.விடுலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட முதல் படையணிக்கும் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு என்றே பெயரிட்டார்.

Friday, July 15, 2011

இலங்கை பிரச்சினையில் அந்நாட்டு அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டி.ராஜா



பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. அங்கு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இலங்கை அரசு சர்வதேச போர் விதிமுறையை மீறி செயல்பட்டது. பெண்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏராளமானோரை போர்க்குற்றவாளி என்ற பெயரில் ராணுவம் கைது செய்து உள்ளது. அவர்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி மனித உரிமை மீறலை நடத்தி வருகிறார்கள். இன்னும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்கிறது. இதை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.


போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான மனித உரிமை மீறலை இந்தியா கண்டிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்போது, அந்த தண்டனை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.


தமிழர்கள் மீதான அத்துமீறல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இதை கண்கூடாக பார்த்து கொண்டு இந்திய அரசு மவுனம் காக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு அவசியம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அந்த அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
என்றார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்: இந்தியா



இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சில போராளிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள், இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் 15.07.2011 அன்று மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:


இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

இந்தியாவை பொறுத்தவரை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.


இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் கூறினார்.